இலங்கையின் சுதந்திர தினமானது மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே-அருட்தந்தை மா.சக்திவேல்

மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனமாக அங்கீகரிப்பட்டு அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினமானது மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே என மலையக சமூக ஆய்வு மையத்தின் ஆலோசகரான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மலையக மக்கள் இந்நாட்டில் தங்களின் 200 வருட வரலாற்று வாழ்க்கையில் சிதைக்கப்பட்டவர்களாகவும், பல்வேறு விதமான திட்டமிட்ட ஒடுக்குதலுக்கு முகம் கொடுத்த மக்களாக காணப்படுகின்றனர்.

இந்நிலையில் சலனமற்ற இனவழிப்பிற்கும் முகம் கொடுக்கின்றவர்களாகவும், அரசியலுக்கு தூரமாக்கப்பட்டவர்களாகவும் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய  கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உலகின் நவீன அடிமைத்தனம் தொடர்பில் தேடுவதற்காக இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதிநிதி டொமொயா ஒபக்டா “மலையக மக்கள் தமிழர்கள் என்பதற்காகவும், தொழிலாளர் என்பதற்காகவும் அடிமைத்தனத்திற்கு உட்பட்டு இருக்கின்றனர்” என இலங்கையிலிருந்தே கூறியதோடு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையிலும் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மலையக மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் மட்டுமல்ல அவர்களின் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினர்களானவர்களும் 75வது சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளாது சுதந்திரமற்ற மலையக மக்களின் ஆதங்கங்களையும், எதிர்ப்புகளையும் வெளிகாட்ட வேண்டும் என மலையக சமூக ஆய்வு மையம் கோரிக்கை விடுக்கின்றது.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பாரிய மக்கள் பேரணியும் முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார கொள்கையாலும், அரசியல்வாதிகளின் மக்கள் சொத்து கொள்ளை காரணமாகவும், வறுமைக்கு தள்ளப்பட்ட மக்கள் கொழும்பு தலைநகரம் உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அறிவித்து அமைதி போராட்டங்களையும் ஆயத்தப்படுத்தியுள்ளனர்.

இனப்படுகொலை, தொடர் இன அழிப்பு என்பவற்றை சந்தித்து வரும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க கூடாது என்பதே மக்களுடைய வேண்டுகோள்.

சுதந்திர இலங்கையில் முதலாவது நாடாளுமன்றத்திலேயே மலையக மக்களின் சுதந்திர வாழ்விற்கு ஆப்பு வைக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வாக்குரிமை சட்டம், தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பிரஜா உரிமை சட்டம் காரணமாக உழைத்து உரமான நாட்டில் அன்னியர்களாக்கப்பட்டனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் கடந்த1889 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தொழிலாளர் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மலையக பெருந்தோட்ட மக்கள் தனியார் நிலங்களில் வாழுகின்ற மக்களாக இன்றும் கணிக்கப்படுவதே இதற்கு காரணமாகும். இவர்களுடைய வாக்குகள் தேவையாக இருக்கின்றது.

ஆனால் இவர்கள் வாழும் பிரதேசம் அபிவிருத்தி அடையக் கூடாது, அரச நிர்வாக சேவைகளை இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதே பேரினவாதிகளின் நோக்கமாகும்.

இந்த சட்டங்கள் திருத்தப்பட்டு மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனமாக அங்கீகரிப்பட்டு அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே என குறிப்பிட்டுள்ளார்.