இலங்கைக்கு  எதிர்காலத்தில்  இருள் சூழ்ந்த நிலைமை ஏற்படலாம் – பிரதீபா மஹனாமஹேவா

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையானது எதிர்காலத்தில் இலங்கைக்கு இருள் சூழ்ந்த நிலைமையை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மூத்த சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றாத பட்சத்தில், நாட்டிற்கு எதிராக பாதுகாப்பு சபையின் ஊடாக பொருளாதார தடைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிராக தீர்மானத்தில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு காலக்கெடு வழங்கப்படும் எனத் தெரிவித்த  அவர், அந்தக் காலக்கெடுவுக்குள் அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத பட்சத்தில் குறித்த தீர்மானம் பாதுகாப்பு சபை வரை செல்லும் என தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் பாதுகாப்பு சபைக்கு செல்லுமாக இருந்தால், அதன் பின்னர் இலங்கைக்கு பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என பிரதீபா மஹனாமஹேவா கூறுயுள்ளார்.

தற்போது காணப்படுகின்ற நிலைமையில், எதிர்வரும் ஆண்டு கூட இலங்கைக்கு சார்பாக தீர்மானமொன்றை கொண்டு வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

இந்த தீர்மானத்தின் ஊடாக உடனடி தாக்கங்கள் எதுவும் இலங்கைக்கு ஏற்படாது என்றாலும் சுமார் ஒரு வருட காலத்தின் பின்னரே பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவா் குறிப்பிட்டார். தமிழ் நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே, இந்தியா வாக்களிப்பதிலிருந்து விலகிக்கொண்டது எனவும் பிரதீபா மஹனாமஹேவாவிடம் கூறியுள்ளார்.

பூகோள அரசியலை அடிப்படையாகக் கொண்டே இந்தியா இந்த விடயத்தில் செயற்பட்டுள்ளது.

இந்தியா இந்த தீர்மானத்திற்கு வாக்களித்திருக்கும் பட்சத்தில், அது தமிழக தேர்தலை பெரிதும் பாதிக்கும் சாத்தியம் காணப்படுவதனாலேயே, இந்தியா வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டதாகவும் பிரதீபா மஹனாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.