சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு தமிழர்கள் விளக்கங்கள் அளிக்காததேன்?

559 Views

இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 46ஆவது அமர்வுக்கான ஆண்டறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவி, சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனப் பரிந்துரைத்திருத்தார்.

கூடவே சிறீலங்காவில் யுத்தக்குற்றங்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எனச் சான்றாதாரப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் மேல் உலக நாடுகள் பயணத்தடைகள், பொருளாதாரத் தடைகளை விதித்து அனைத்துலகச் சட்டங்களை, ஒழுங்குகளை, முறைமைகளை நடைமுறைப்படுத்த உதவவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இத்தகைய சூழலில் கனடா, யேர்மனி, மலாவி, மொன்டினிகுரோ, வடமசிடோனியா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து கொண்டுவந்துள்ள தீர்மானமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வினால் தனது ஆணையக ஆணையாளர் பரிந்துரைத்தனவற்றையே நடைமுறைப்படுத்த இயலாத அதன் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இத்தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலைமாற்றுக்கால நீதியைக் கருக்கலைப்பு செய்யும் ஆவணமாக சிறீலங்காவுக்கு ஆதரவான நாடுகளின் அழுத்தங்களால் மாற்றப்பட்டுள்ளது துக்ககரமான உண்மை.

இத்தீர்மானம் அடுத்த ஆண்டுக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறீலங்கா குறித்து சமகால நிலை குறித்த அறிக்கை, வாய்மொழியாகவும், எழுத்திலும் தாக்கல் செய்யப்படும் என்ற மனிதஉரிமைகள் ஆணையகரின் மொழிவைக்கூட மாற்றி வாய்மொழியாக அடுத்த ஆண்டும் அதன் பிறகு 2023இலேயே எழுத்து மூலமாகவும் எனச் சிறீலங்காவுக்கு மேலும் இரண்டு ஆண்டுகால அவகாசத்தை அளித்துள்ளது. இந்தக் காலஅவகாசம் சிறீலங்காவின் ஈழத்தமிழின அழிப்புக்கான பச்சைக் கொடியாகவே சிறீலங்காவால் கருதப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஓவ்வொரு நாடுகளதும் முதன்மைக் கடமையாக, சிறீலங்காவை மனித உரிமைகளை மதித்து, அதனை முன்னேற்றி, நிறைவுபடுத்தி முழுமக்களும் மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் முழுமையாக அனுபவிக்க வைப்பதை மீளுறுதி செய்துகொள்ள வேண்டுமென்ற வாசகத்திலும் ‘அதனை முன்னேற்றி நிறைவுபடுத்தி’ என்னும் சொற் கூட்டம் அகற்றப்பட்டுள்ளது. இது சிறீலங்காவிடம் மனித உரிமைகள் ஆணையகம் மனித உரிமைகளை மதிக்குமாறு விடுக்கும் கோரிக்கையாக அமைகிறதே ஒழிய, அதன் நெறிப்படுத்தல் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் செயலாக மாற்றியுள்ளதென்பதே உண்மை.

இவ்வாறு தீர்மானம் முழுவதுமே மனித உரிமைகள் ஆணையகத்தின் நெறிப்படுத்தல் உரிமையை வலியுறுத்தும் மற்றைய வாசகங்களும் திருத்தப்பட்டு, வெறுமனே ஒரு மனிதஉரிமைகளை பேணும்படியான மன்றாட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத் திட்டமிட்ட செயல், சிறீலங்காவின் இறைமையையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் பேணி அதன் குற்றவியல் தன்மைகளை விசாரணைப்படுத்தலுக்குரிய மனிதஉரிமை ஆணையகத்தின் ஆற்றலைத் தள்ளிப்போடும் தன்மையானதாக அமைகிறது.

அவ்வாறே இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் குறித்த தரவுகளைத், தகவல்களை மனிதஉரிமைகள் ஆணையகம் மேலும் திரட்டுவதற்கான புதிய அனைத்துலகப் பொறிமுறைகளை அமைத்தல் பற்றியும் அச் செயற் திட்டத்திற்கான நிதியங்களைக் குறித்தும் தீர்மானம் பேசுகின்றதே தவிர, இச் செயற் திட்டத்திற்கான காலவரையறையோ அல்லது இதுவரை திரட்டப்பட்ட தரவுகள், தகவல்களின் அடிப்படையில் என்ன நெறிப்படுத்தலைச் செய்யலாம் எனவோ தீர்மானத்தில் எந்த வரைவுகளும் இல்லை. இது சிறீலங்காவின் இன அழிப்புச் செயல்களுக்குக் கொடுக்கப்பட்ட வெற்றுக் காசோலைபோல் தீர்மானத்தை மாற்றியுள்ளது.

எனவே இந்த ‘பூச்சியத் தீர்மானம்’ சிறீலங்காவின் இனஅழிப்புக்கு எதிராகப் போராடுபவர்களின் முயற்சிக்கு அளிக்கப்பட்ட ‘பூச்சிய’ மதிப்பீடாகவே ஈழத்தமிழர்களால் கருதப்படுகிறது.

ஆயினும், சிறீலங்காவில் கடந்த சில ஆண்டுகளாக

  1. அரசின் சிவில் நிர்வாகத்தை இராணுவமயமாக்கும் செயல்களும்,
  2. குற்றச் செயல்களுக்கும், மனிதஉரிமைகள் வன்முறைப்படுத்தல்களுக்கும் உரிய அடையாள வழக்குகள் எனக் கருதப்படக் கூடிய வழக்குகளில் நீதியின் செயற்பாட்டை தடுப்பதும்,
  3. தமிழ் முஸ்லீம் சமூகங்களைச் சேர்ந்த ஆட்களை எல்லைப்படுத்துவதும், மனித உரிமைகளை இல்லாதொழிக்கும் நிலைமைகளை அதிகரிக்கச் செய்கின்ற தன்மைகள் எனவும், இந்நிலை கவலையளிப்பதாகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருப்பதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது உண்மை.

இதனை வைத்துக் கொண்டு ‘தமிழர்கள்’ என்ற சொல்லை தீர்மானத்தில் தாங்கள் சேர்க்க வைத்து விட்டதாக சாதனை பேசும் சில தமிழர் மனித உரிமைகள் அமைப்புக்களைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை.

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்காலத்து ஐ. நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், அதன் பின்னான கால மேனாள் மனித உரிமையக ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்நாள் மனித உரிமை ஆணையாளர் ஆகிய மூவருமே ஈழத்தமிழர்களுக்குச் சாதகமான கருத்துக்களை வெளியிட்ட நிலையிலும், அவற்றை முன்னெடுத்து சிறீலங்கா வெல்ல இயலாத கையாலாகத்தனத்தை ஈழத்தமிழர்களின் மனிதஉரிமைகள் அமைப்புக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தத் தமிழ் அமைப்புக்கள் சிறீலங்கா சீனாவுடனும், இந்தியாவுடனும் உறவாடும் அரச தந்திரத்தைப் பார்த்தும் ஏன் சீனா இரஸ்யா போன்ற சிறீலங்காவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுடன் தங்களின் தொடர்புகளை வளர்த்து, ஈழத்தமிழர்கள் உரிமைகளின் உண்மை நிலைமைகளை அவர்களுக்கு விளக்கவில்லை. இது தான் இந்த ஐதாக்கப்பட்ட தீர்மானத்திற்குக் காரணம் என ஈழத்தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இனியாவது ஒரு சில நாடுகளுடன் உறவாடி மகிழும் நிலையை ஈழத்தமிழர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டுக்கான அமைப்புக்கள் விடுத்து, அனைத்துலக நாடுகளுடனும் ஈழத்தமிழர் மனித உரிமைக்காகக் தொடர்புகளை மேற்கொள்வதற்கான வழிகளையும், முறைகளையும் சிந்தித்தாலே ஈழத்தமிழர்கள் உரிமைகள் மீளவும் சனநாயக வழிகளில் நிறுவப்படுவது விரைவுபடும். இதற்கு ஈழத்தமிழர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஒரு குடைநிழல் அமைப்பில் ஒருங்கு இணையவேண்டும், அந்த குடைநிழல் அமைப்புக்குத் தங்கள் செயற்பாடுகள் குறித்துப் பொறுப்புக் கூறல் அவசியம். இதுவே ஈழத்தமிழர் உரிமைகளை உரிய முறையில் வென்றெடுக்க முக்கிய வழியாக உள்ளது என்பதே இலக்கின் எண்ணமாக உள்ளது.

Leave a Reply