இறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே! பெண்கள்

669 Views

“பெண் இன்றிப் பெருமையும் இல்லை;  கண் இன்றி காட்சியும் இல்லை”  என்பது சான்றோர் முதுமொழி. அதாவது மனித உடம்பினில் கண்கள் எவ்வளவு முக்கியமாமோ அதே அளவு சமூகத்தில் பெண்களும் முக்கியமானவர்களே!

பாசத்தால் வார்த்தெடுத்த உணர்ச்சிகளின் கலவையான பெண், அன்பு, ஆதரவு, அடக்கம் இவற்றுக்கு  அர்த்தமாய் மனித குலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே!

ஒரு தாயாய், மகளாய், தாரமாய் , தோழியாய், நலன் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்திற்கு காலம் எத்தனை பாத்திரங்கள்? நம் உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்திருப்பவள் தான் பெண்!  பெண்ணின் மகத்துவத்தினை உணர்ந்த  நம் முன்னோர்கள் ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால்  ஒரு பெண் நிச்சயம் இருப்பாள் என கூறியிருக்கின்றார்கள். இதனால் தானோ தெரியவில்லை ஆண்டு தோறும் மார்ச் மாதம் எட்டாம் திகதி மகளிரை போற்றும்படி ஓர் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகின்றது.

இவ் உலகில் உடலுறுதி கொண்ட ஆண்மகனைவிட  மன உறுதிகொண்டு, சவால்களை தகர்த்து சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும், உயர்வான எண்ணங்களும், வலிமையும் தன்னகத்தே கொண்டு அயராது உழைக்கும் பெண்கள் இன்று எத்தனை!

சுழல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஆண்மகனைவிட பெண்கள் சளைத்தவர்களல்ல என்பதனை தொடர்ச்சியான பல போராட்டங்களுக்கு பின்னர் ‘பெண் ஆணிற்கு சமமானவள்’ என்ற உரிமையை சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. பெண் அடிமையானவள் அல்ல என்பதனை இன்று மண்முதல் விண் வரை சென்று பல சாதனைகள் படைத்து, உலகம் முழுவதும் பல பெண்கள் நிரூபித்திருக்கின்றார்கள். இருப்பினும் இலங்கையை பொறுத்தவரை பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு என்பது தான் என்ன?

 இன்றைய காலகட்டத்தில் இலங்கையில்  பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு எந்தளவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் நோக்கோடு வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் பெண் காசிப்பிள்ளை ஜெயவனிதாவிடம் என்னால் வினவப்பட்ட ஓர் நேர்காணல்.

கேள்வி : இலங்கையில் மகளிருக்கான உரிமைகளில் பெண்கள் வாழ்வுரிமையும், உறவுகளை பேணும் உரிமையும் கூட இன்று மறுக்கப்பட்டு வருவதை பார்க்க கூடியதாக உள்ளது. இது தொடர்பாக தங்கள் கருத்துக்கள் என்ன?

பதில் : இதுவும் கூட அரச பயங்கரவாதத்தின் ஒரு விளைவாகவே பார்க்கிறோம். போருக்குப் பின்னரான சூழலில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பது முழுவதுமாக சிதைவடைந்து விட்டது. குடும்பங்கள் தனித்தனி உதிரிகளாக்கப்பட்டு தனித்து விடப்படுகிறார்கள். யாரோ ஒரு பல்தேசிய கம்பனியின் இலாபத்துக்காக, அல்லது புவிசார் அரசுகளின் நலன்களுக்காக குடும்பங்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. பூர்வீக நிலம் விட்டு குடும்பங்கள் பெயர்க்கப்படுகின்றன. இவை கல்வி உரிமை, தொழில் உரிமை என்று மட்டுமல்லாது, குடும்பங்களின் நல்லுறவு, வாழ்க்கைத்தர மேம்பாடு என்று சகலவற்றிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எகிறும்  விலைவாசி ஏற்றமும், அரசின் சீரற்ற பொருளாதார கொள்கை சார் நடவடிக்கைகளும், முறையற்ற கடன் சுமைகளும் குடும்பங்களின் மீது நேரடியாகவே அழுத்துவதால்; அதுவும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை அதிகம் கொண்டுள்ள தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வுரிமை என்பது பெருத்த அச்சுறுத்தலும், சவாலும் கொண்டதாகவே இருக்கின்றது.

கேள்வி : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் பெண் தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெறுவதை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

குடும்பச் சுமை, புத்திரச் சோகம், நீண்ட காத்திருப்புக்கான ஏக்கம், மகவுகளின் பிரிவுத் துயர், கடந்த கால சம்பவங்களின் நினைவுகள் தரும் வலி என்று மென்மையான மனித உணர்வுகளை தம்முள் பொத்தி வைத்துக் கொண்டு, மறுவளமாக சமரசம் இல்லாமல் ஒற்றைக் கோரிக்கையோடு ஓர்மமாகப் போராடும் தாய்மார்களின் மன உறுதி பாராட்டுக்குரியது. அதுவும் முதுமைக் கால நோய்களோடு, இரவு பகல், மழை வெயில், புயல் குளிர் என்று பாராது இன்று வீதி ஓரங்களில் குந்தி இருந்து கொண்டு தொய்வுறாமல் போராடும் தாய்மார்கள் சிந்தும் நீதிக்கான கண்ணீர், ஆட்சியாளர்களின் அரியணைகளை ஓர்நாள் வீழ்த்தும். ஆகவே அந்தக் கண்ணீருக்கு வலிமையும் உண்டு. வாய்மையும் உண்டு.

கேள்வி : இப்போராட்டத்தில் இளம் பெண்களதும், ஆண்களதும் பங்களிப்பு பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் : திருப்திப்பட்டு கொள்ளக்கூடிய அளவில் போதுமானதாக இல்லை. கண் கண்ட சாட்சியங்களான முதிய தாய், தந்தையர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இளைய தலைமுறை பிள்ளைகள் சாட்சியங்களை ஆவணப்படுத்தும் ஓர் நடவடிக்கையிலாவது ஈடுபட வேண்டும். இது சாட்சியங்கள் உயிரோடு இல்லாத காலத்திலும் கூட பேசாமல் பேசும் ஓர் இனவழிப்பு ஆவணமாக நீண்ட கால வரலாற்றை நோக்கமாக கொண்டதாக இருக்க வேண்டும். காணாமல் ஆக்கப்படுதல் என்பது தேசிய இனப்பிரச்சினையோடு தொடர்புடையது. ஆகவே இதனை ஒரு துருப்புச் சீட்டாக இறுக்கிப் பற்றிப் பிடித்துக் கொண்டு, தனித் தேச அங்கீகாரத்துக்கான வலுவான காரணியாக இனத்துவ ரீதியாக அடையாளப்படுத்தப்பட்டு திட்டமிடப்பட்டு நடந்தேறிய ஆட்கடத்தல் – காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களை  முன்வைத்து இளைய தலைமுறைப் பிள்ளைகள் பரிகார நீதிக்கான போராட்டத்தை பெறுப்பேற்று நடத்த வேண்டும்.

கேள்வி :  இப்போராட்டத்தில் ஏனைய உள்நாட்டு மகளிர் அமைப்புக்கள் பன்னாட்டு மகளிர் அமைப்புக்களின் பங்களிப்பை கோர நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்களா?

பதில் : பாரிய அளவில் ஆதரவை திரட்ட முடியவில்லை. அதற்கு பலவிதமான அகப்புற காரணங்கள் உண்டு. இங்கு தமிழ் அரசியல் கட்சிகள் போராடும் மக்களை இரண்டுக்கும் மேற்பட்ட குழுக்களாக உடைத்து வைத்துள்ளன. இது தேசிய இன விடுதலைக்கு நிச்சயம் பலன் தராது. வேண்டுமாயின் அவர்களின் தேர்தல் அரசியலுக்கு மட்டுமே கை கொடுக்கலாம். அதேபோல புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் அமைப்புகள் ஒன்றுக்கு ஒன்று போட்டியான மனநிலையில் தாயக நிலைவரங்களை கண்காணித்து எதிர்வினையாற்றுவதால் சில விசயங்களில் ஒருங்கிணைந்தும், சில விசயங்களில் உடன்பாடு இல்லாமலும் பயணிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமையும் உண்டு. ஒரு தரப்போடு எம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டால், மறுதரப்பு நம்மை அணுக பின்னடிக்கும், அல்லது சந்தேகிக்கும் துன்பியல் கசப்பான அனுபவங்களையும் கண்டுள்ளோம். இந்த குருட்டுத்தனமான நிலைமைகளில் புரட்சிகர மாற்றங்கள் நிகழ வேண்டும். அதுவரை எமது சக்தி, ஆளுமைக்கு உட்பட்ட விதத்தில் சகல தரப்புகளிடமும் சகல விதமான பங்களிப்பு ஆதரவுகளையும் வெளிப்படையாக கோரியே வந்திருக்கிறோம்.

கேள்வி : பன்னாட்டு மன்றங்களில் மகளிர் தலைமைத்துவம் அதிகரித்து வரும் நிலையில் அதனை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்?

பதில் : ஆயிரத்து நானூறு நாட்களை கடந்தும் தொய்வுறாமல் நடைபெற்றுவரும் எமது தொடர் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டம் தான் அவர்களுக்கான எமது செய்தி. எம்மோடு இணைந்து பயணிக்கும் பன்நாட்டு புலம்பெயர் அமைப்புகள், செயற்பாட்டாளர்கள், ஊடகவிய லாளர்கள் ஊடாக, சிறீலங்கா அரசை பொறுப்புக் கூற வைக்கும் ஒரு பொறிமுறையை நோக்கி இழுத்துச் செல்லவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பரிகார நீதி கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகளை செய்யத் தூண்டும் காத்திரமான  செயல் முனைப்புகளுக்கோ, அல்லது இராஜிய நெருக்குதலுக்கோ சம்பந்தப்பட்ட தரப்புகள்  பதில் கூறக்கூடிய வகையில் பல நாடுகளில் இருக்கும் மகளீர் அமைப்புக்கள் எமக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். தொடர்ந்தும் எமக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

பாலநாதன் சதீஸ்

வவுனியா ஊடகவியலாளர்.

Leave a Reply