முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தாயார் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் ஜேசு மேரி என்பவரே உயிரிழந்துள்ளார். 2009ஆம் ஆண்டு, மாத்தளன் பகுதியில் தனது மகனான மைக்கல் ஜோசப் என்பவர் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், தன்னுடைய மகனைத் தேடி தொடர்ச்சியாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர், நேற்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவில், இந்தத் தாயாருடன் தமது உறவுகளைத் தேடி வந்த 18 உறவுகள் உயிரிழந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.