இனியபாரதிக்கு 7 கோடியில் ஹோட்டல் பிள்ளையானுக்கு 500 கோடியில் நகைக்கடை விசாரிக்க வேண்டும்- யோகேஸ்வரன்

164 கிலோ கஞ்சாவுடன் மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனிய பாரதியின் சொத்துக்கள் தொடர்பில் லஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவினர் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சீ.யோகேஸ்வரன்  சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை நடைபெற்ற 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வி.ஐ.பி. என்ற அடையாளத்துடன் வந்த வாகனத்தில் கேரளா கஞ்சாவை கடத்தி வந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த இனியபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் வாகனத்தை இராணுவத்தினர் மறித்தபோது அது நிற்காமல் சென்ற நிலையில் துப்பாக்கிப்பிரயோகம் செய்து  இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இனியபாரதி சாதாரணமான ஒருவராகவே இருந்தார்.

ஆனால் இன்று திடீர் கோடீஸ்வரனாகியுள்ளார். அண்மையில் கூட 7 கோடி ரூபா பெறுமதியான ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார். எனவே இனியபாரதியின் சொத்துக்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும். அது மட்டுமன்றி மட்டக்களப்பில் மஹிந்த ராஜபக் ஷவின் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு கொடுப்போர், அந்தக்கட்சியின் அமைப்பாளராக இருப்போர் எல்லாம் கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள், கப்பம் பெறுதல்களுடன் தொடர்பு பட்டவர்கள்.

அதில் ஒருவர் கருணா அம்மான். அடுத்தவர் பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு அமைப்பாளராக உள்ளவர். இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகக்கூறி பல இலட்சம் ரூபாக்களை மோசடி செய்தவர். இதற்காக கைது செய்யப்பட்டு இப்போது பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திடுபவர். இன்னொருவர் சிறையிலிருக்கும் பிள்ளையான். இவருக்கு சுவிஸ் நாட்டில் பெர்ன் நகரில் 500 கோடி ரூபா பெறுமதியான நகைக்கடை உள்ளது. எனவே இனியபாரதி, கருணா அம்மான், பிள்ளையான், போன்றோரின் சொத்து விபரங்கள் தொடர்பில் லஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவினர் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும் என்றார்.