இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள்

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவை சந்தித்தது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் லோக்சபாவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் லோக்சபாவில் விதி 197 இன் கீழ் ரவிக்குமார் அளித்துள்ள கவனயீர்ப்பு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

போர்க் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை இலங்கை இப்போது தனது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளது. தனது தேர்தல் பிரசாரத்தின் போதே தான் வெற்றி பெற்றால் உள்நாட்டு யுத்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக ஐ.நா.மனித உரிமைக் குழுவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார்.

அது சர்வதேச சட்டங்களை மீறியது மட்டுமல்ல.  இனப்படுகோலைகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர்களை அச்சுறுத்துவதுமாகும். அஞ்சியபடியே தேர்தல் முடிந்ததும் அடையாளம் காணப்படாத சிங்களவர்கள் கேகாலை என்னுமிடத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர்.

தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து அந்த அரசுடன் பேசினாரா? வெளியுறவுத்துறை அமைச்சரிடமிருந்து ஒரு விளக்க அறிக்கையை இந்த சபை எதிர்பார்க்கின்றது. இவ்வாறு கவன ஈர்ப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.