இந்தியா இராஜதந்திரிகளின் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டன

கனடாவில் வைத்து  காலிஸ்த்தான் விடுதலை அமைப்பு ஒன்றின் தலைவர் ஹாதீப் சிங் நிஜார் கடந்த ஜுன் மாதம் 18 ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ஆதராங்களை கனடாவின் புலனாய்வுத்துறை இந்திய இராஜதந்திரிகளின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டதன் மூலம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை (18) கனேடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இந்தியா மீது காத்திரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தெரிவித்தது மட்டுமல்லாது கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான றோவின் கனடாவுக்கான தலைவர் பவன்குமார் ராஜ் என்பவரையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கனடா தெரிவித்திருந்தது.

கனடாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்தியாவும் இந்தியாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் பணியாற்றிய இராஜதந்திரியை வெளியேற்றியிருந்தது. அது மட்டுமல்லாது கடந்த வியாழக்கிழமை (21) கனடா மக்களுக்கான நுளைவு அனுமதியையும் இந்தியா நிறுத்தியிருந்தது.

இதனிடையே, கனடாவின் விசாரணைகளுக்கு இந்தியா ஒத்துழைக்கவேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேசமயம் கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் விரிசல்கள் உள்ளதாக வெளிவந்த செய்திகளையும் அமெரிக்கா மறுத்துள்ளது.