இந்தியாவுக்கு பொறுப்புக் கூறல் இடம்பெறவேண்டும் என கிஞ்சித்தும் அக்கறை இல்லை-குருபரன்

இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழருக்கும் ஒரே நேரத்தில் நல்ல பிள்ளையாக தன்னை முன்னிறுத்த முயற்சிக்கின்றது. இந்தியாவுக்கு பொறுப்புக் கூறல் இடம்பெறவேண்டும் என கிஞ்சித்தும் அக்கறை இல்லை என  ஜெனீவா வாக்களிப்பில் இந்தியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தமை தொடர்பில் இந்திய ஆங்கில செய்தி இணையத்தளமான The Wire இற்கு வழங்கிய கருத்துக்களில்  சட்டவாளர் கலாநிதி கு. குருபரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழருக்கும் ஒரே நேரத்தில் நல்ல பிள்ளையாக தன்னை முன்னிறுத்த முயற்சிக்கின்றது.

இந்தியாவுக்கு பொறுப்புக் கூறல் இடம்பெறவேண்டும் என கிஞ்சித்தும் அக்கறை இல்லை. அவர்கள் ‘நல்லிணக்கத்தையும்’ 13ஆவது திருத்தத்தையும் பற்றி மட்டும் தான் பேசுவார்கள். உண்மையில் 13ஆவது திருத்தத்தை பற்றி பேசுவதும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை பாதுகாத்துக் கொள்ளத் தான். இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக இலங்கையின் பாதுகாப்பு வெளியுறவுக் கொள்கையில் முதன்மையான இடத்தை தக்க வைத்துக் கொள்வது தான் இந்தியாவின் ஒரே நோக்கமும் குறிக்கோளும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விசுவாசத்தில் மாற்றம் இருக்காது. ஆனால் தமிழ் மக்களிற்கு இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு நன்கு தெரியும். என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் அழிய வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையாக இருந்ததை தமிழ் மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். பூகோள அரசியல் விளையாட்டில் தாம் வெறும் பகடைக் காய்களாக பாவிக்கப்படுகின்றோம் என்பதனை தமிழர் நன்கு அறிவார்கள்.

இந்தியா இலங்கை விவகாரத்திலும் சரி மியான்மர் விவகாரத்திலும் சரி மதில் மேல் பூனை மனநிலையில் இந்தியா செயற்படுகின்றது. இந்த மனநிலை இந்தியா இந்த பிராந்தியத்தில் தலைமைத்துவ வகிபாகத்தை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றமையைக் காட்டுகின்றது.