இந்தியாவிற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் எண்ணியது கிடையாது- பேராசிரியர் ராமு மணிவண்ணன்

இனப்பிரச்சினை தொடர்பாகவும், புதிய இலங்கை அரசியல் தொடர்பாகவும், இன்றைய அரசியலில் தமிழர்களின் பங்களிப்பு பற்றியும் பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் இலக்கு இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய நேர்காணலின் இரண்டாம் பகுதி ஈழத்தமிழர் விடுதலையில் பிராந்திய அரசியலின் வகிபாகத்தை விளக்குகிறது.

கேள்வி-பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த கோத்தபயா ராஜபக்ஸவிற்கு இந்தியா செங்கம்பள வரவேற்பு அளித்தது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்-உலக நாடுகளின் கட்டமைப்பில், நாடுகளின் உறவு நிலைகளில் இது பொதுவானது. அண்டை நாடாக இருந்தாலும் சரி, அல்லது ஏனைய நாடுகளாக இருந்தாலும் வரவேற்பு என்று வரும் போது, அந்த அரசிற்கும் மற்றைய அரசிற்கும் இடையிலான உறவாகவே பார்க்கப்படும். இதில் எந்தவிதமான உணர்வுகளோ அல்லது மனிதநேயமோ மதிப்பீடுகளோ பார்க்கப்படுவதில்லை. ஆனால் பார்க்கப்பட வேண்டும் என்று தான் நாம் நினைக்கின்றோம்.

அதேபோல் இந்திய அரசாங்கம் புவிசார் அரசியல் என்று பார்க்கின்றது. இந்தியப் பெருங்கடலில் சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்கிறது. ஆனால், இவ்வாறு இனப்படுகொலையை நடத்தியவரே அதிபராகும் போது, அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கும் போது, ஈழத் தமிழர்களை கூட நினைக்காது விட்டாலும், இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள 8கோடி தமிழர்கள் இந்த வரவேற்பைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றாவது இந்திய அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் அரசாங்கம் செய்த ஒரு சரித்திரப் படுகொலையை தொடர்ந்து இந்த அரசாங்கமும் அதே வழியில் அதன் கொள்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கக் கூடாது.

புவிசார் அரசியலில் சிங்களவர் தமது நாடென்று கூறும் இடத்தில் தமிழர்களின் நிலப்பரப்பும், தமிழர்களின் இறையாண்மையும், தமிழர்களின் நில உரிமையும் அங்கு இருக்கின்றது. அதை இந்தியா 70 ஆண்டுகளில் மறுத்து மறைத்து மூடி விட முடியாது. அதனால் இந்திய அரசாங்கம், தங்களுடைய நிலைப்பாட்டையும் இராஜதந்திர மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று தான் நாம் நினைக்கின்றோம்.

கேள்வி– தமிழ்நாட்டில் 8கோடி தமிழ் மக்கள் இருக்கின்றனர். அவர்களின் உணர்வுகள், முள்ளிவாய்க்கால் படுகொலையை தொடர்ந்த தமிழக சட்டசபை தீர்மானங்கள் இவை எல்லாவற்றையும் மறுத்து, மத்திய அரசு தனது சொந்த மக்களின் உணர்வை மதிக்காது இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கின்றது. இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்-தமிழக அரசியல் சூழல் தான் இதற்குக் காரணம். அத்துடன் தமிழ் பிரதிநிதிகள் ஒருமித்து எதிர்க் குரல் கொடுக்காதிருப்பது கவலையளிக்கின்றது. ஆனால் இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் எண்ணங்களால் பெரும் பாதிப்பு நடக்குமா என்று மத்திய அரசு நினைத்திருக்கலாம். இவ்வாறே தான் இந்திய மத்திய அரசாங்கம் மாநிலங்களுக்கிடையில் முரண்பாடுகள் அடங்கிய அரசியலை நடத்திக் கொண்டு வருகின்றது. அதற்கான தீர்வு என்னவென்றால், தமிழகத்தின் அரசியல் பிரதிநிதிகள், மாநில, மத்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் போல் தமிழ் மக்களின் உணர்வுகளையும், அரசியல் கருத்துக்களையும் தைரியமாக முன்னெடுத்து வெளிப்படுத்தக்கூடிய அரசியல் சக்திகளாக மாறவேண்டும்.

இலங்கை அரசாங்கத்தில் சிங்களப் பெரும்பான்மை, சிங்கள பேரினவாதம் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள், இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் தான் இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் என்று இந்தியா நினைப்பது சரிதான். ஏனெனில், தமிழர்களின் நிலப்பரப்பு சிங்களவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பின்னர், தமிழர்களுக்கோ அல்லது இஸ்லாமியர்களுக்கோ சிங்கள அரசு பெரிதாக எதையும் வழங்கவில்லை.

இதேவேளை தமிழர்களுக்கு தங்களுடைய நிலப்பரப்பு குறித்து தம் நாட்டுக்குள்ளேயோ வெளிநாடுகளிலோ, வேறுஎங்குமோ ஆணித்தரமாக போராட முடியாத சூழ்நிலையில் சிங்களவர்களுடன் உறவு பரிமாற்றம் இருந்தால் போதும் என இந்தியா நினைப்பது இயல்பானதே. ஈழத்தமிழர்களை சிறுபான்மையினமாகப் பார்ப்பதும், தமிழ்நாட்டில் 8கோடி மக்கள் தான் பேசுகின்றார்கள் என்று நினைப்பதும்கூட இந்தியாவின் மிக நீண்டகால அரசியலுக்கு உகந்ததாக அமையாது என்பதுடன் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் குறுகிய பார்வையையே சுட்டி நிற்கிறது.

தமிழர்களின் உரிமையும் வளமும் அவர்களின் நிலமும், அதிகாரமும் அவர்களின் கையில் இருந்தால் தான், இந்தியாவிற்கு ஓர் அதிகாரமும் இந்தியாவிற்கென்று ஓர் அரசியல் வீச்சும் இருக்கும். இதை இந்தியா இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளில், அதற்கு முன்பாக 30 ஆண்டுகளில் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு நிலைப்பாடும் இருந்தது கிடையாது. அதை இந்தியா இப்போது அலசிப் பார்க்க வேண்டும். இந்த 9 ஆண்டுகளில் மட்டும் ஏன் இப்படி இடைவெளி இருந்தது. அதற்கான காரணம் இந்திய வெளியுறவுக் கொள்கைகளும், தமிழர்களை இந்தியா நடத்திய விதமும் மட்டுமல்லாமல் இலங்கை அரசாங்கத்திற்கு அதாவது ஒரு பேரினவாத அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளுடன் போராடுகின்றோமா? அல்லது விடுதலைப் புலிகள் என்று கூறி, ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழிக்கின்ற ஒரு சிங்கள அரசிற்கு துணையாகப் போகின்றோமா என்ற இவர்களின் பார்வையில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன.

இந்த அச்சங்களையும், குழப்பங்களையும் தவிர்த்து, இந்தியா சரியான ஒரு பார்வையை வெளிகொண்டு வரும் வரை இந்தியாவிற்கு அனைத்து நாடுகளினதும் உறவுகள் சரியாக அமையப் போவதில்லை. அது நேபாளத்துடனாயினும் சரி, இலங்கையுடனாயினும் சரி, பங்களாதேஷ் உடன் என்றாலும் சரி இதே நிலைதான்.
ஆனால் பங்களாதேசத்திற்குள் இருந்து 8சதவீத மக்களோ பத்து, பதினைந்து சதவீத மக்களோ, இந்தியா தமக்காக பேசவேண்டும் என்று நினைத்தது இல்லை. நேபாளத்திலும்கூட மிகக் குறுகிய அளவில்தான் பேசப்படுகின்றது. ஆனால் இலங்கையில் தமிழர்களின் காணி, அரசியல் உரிமை மற்றும் இறையாண்மை இவை அனைத்தையும் அடக்கிய ஒரு அரசு சமூகம் இருக்கின்றது. அதை இந்தியா அரசியல் ரீதியாக கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.

அதை புவிசார் அரசியலில் ஒரு முன்னெடுப்பை எடுத்து வைக்க வேண்டும். இந்தியாவிற்குத் தான் அதை சிறுபான்மையாக பார்க்கின்ற பார்வை இருக்கின்றது. அதேபோல் தமிழர்களுக்கும் அவர்களுக்குள் அவர்களையே சிறுபான்மையாக பார்க்கின்ற பார்வையை விட்டு விலகி, புவிசார் களத்தில் ஒரு புதிய அரசியலை எடுத்து மிகப் பெரிய களமாட முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட வேண்டும்.
இந்தியாவின் பார்வை மட்டும் மாறவேண்டும் என்று நான் சொல்லவில்லை. இந்தியாவின் பார்வை மாறவேண்டும் என்றால், தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்கள் பற்றிய ஒரு பார்வையும் மாறவேண்டும். அவர்களின் நிலப்பரப்பின் அதிகாரத்தையும், புவிசார் அரசியலின் இயக்கங்களையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும்……….