இந்தியாவின் அவசர உதவிகளை மறந்துவிட இயலாது-அமைச்சர் அலி சப்ரி

92 Views

சர்வதேச நாணய நிதியத்துடனான இந்திய கலந்துரையாடல்களில் 90 வீதமானவை இலங்கைக்கான ஒத்துழைப்புகளையே வலியுறுத்தி இருந்தன. பொருளாதார நெருக்கடிகளின் மீட்சியின் பெரும் பகுதிக்கு காரணமாக இருந்த டெல்லியின் அவசர உதவிகளை மறந்துவிட இயலாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடிகளின் வழி தெரியாமலும், செய்வதறியாமலும் தவித்திருந்தோம். கடவுளை பிரார்த்திப்பதை தவிர மாற்று வழி எமக்கிருக்கவில்லை. பல மணி நேரம் மின் வெட்டு, எரிவாயு, எரிபொருள் என மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சோதனை மிக்க நாட்களாக அந்த காலப்பகுதி எமக்கு அமைந்தது.

நெருக்கடிகளின் உச்சத்தில் இலங்கை இருந்த போது இந்திய உதவிகள் கிடைக்கப்பெற்றன. மீட்சியின் பெரும் பகுதிக்கு காரணமாக இருந்த அந்த உதவிகளையும் ஆதரவையும் எம்மால் மறந்துவிட முடியாது. 3.9 பில்லியன் டொலர் அவசர உதவித் திட்டங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியது. இதற்காக விசேடமாக பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கிறோம்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் உச்ச கட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின்  ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நியூயோர்க்கில் இடம்பெற்ற ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளின் போது முழுமையாக எதிர்பார்ப்பினை இழந்துவிட்டோம். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவேவாவுடனான சந்திப்பின் போது நம்பிக்கை தளிர்விட தொடங்கியது.

அதன் பின்னர் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நியூயோர்க்கில் சந்தித்து கலந்துரையாடினோம். இலங்கைக்கு அவசரமாக உதவ வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவேவாவுடனான சந்திப்பின் போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியிருந்தமை தெரியவந்தது.

சர்வதேச நாணய நிதியத்துடனான இந்திய கலந்துரையாடல்களின்போது 90 வீதமான நேரத்தை இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விசேடமாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கையின் அடையாளமாக பன்முகத்தன்மை உள்ளது. இந்தியா உட்பட பிராந்தியத்திலும் அதுவே சிறப்பானதாகும். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ இயலாது என்றார்.

Leave a Reply