ஆப்கானிய அகதிகளுக்கு நிவாரண உதவிகள் – முன்வந்துள்ள முல்லைத்தீவு மக்கள்

1,166 Views

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆப்கானிய அகதிகளிற்கான ஒரு தொகுதி நிவாரணத்தை முல்லைதீவு தமிழ் மக்கள் வழங்க முன்வந்துள்ளனர்.அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உலர் உணவு பொதிகளை வழங்க திட்டமிட்டிருந்தனர்.

அவர்களை உலர் உணவு கொடுக்கவிடாமல் அங்கு நின்ற இலங்கை இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று உலர் உணவுகளை வழங்குமாறு இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

இதேவேளை முப்பது ஆண்டுகால போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏதிலிகளாக வவுனியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களை மனிதாபிமான ரீதியில் பராமரிக்கவும் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

உலர் உணவுகளைக் கையளிப்பதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பெற அவர்கள் முற்பட்டுள்ளனர்.

இந்த அகதிகளின் செலவுகளுக்கு தலா 20 ஆயிரம் ருபாய்களை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வழங்கி வருகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து ஐநூறு அகதிகள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply