இலங்கையின் மலையக பெருந்தோட்டப் பெண்கள் நாட்டின் தேசிய வருவாயை ஈட்டிக் கொடுப்பதில் கணிசமான வகிபாகத்தினைக் கொண்டுள்ளனர்.எனினும் இவர்களின் வாழ்க்கை நிலைமைகள் திருப்தியற்றதாகவே காணப்படுகின்றன.
ஆணாதிக்க சமூகத்தில் இவர்களின் உரிமைகள் பலவும் மறுக்கப்பட்டு வரும் நிலையில் வாயில்லாப் பூச்சிகளாக பல பெண்கள் மனதுக்குள் குமுறிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.இந்நிலையில் மலையகப் பெண்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்து செயற்படுவதற்கான கதவுகள் திறக்கப்படுதல் வேண்டும்.
இதற்கென அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது அவசியமாகும். ” பெண்கள் இல்லா வீடு பேய் வீடு ” என்று கிராமத்து வழக்கில் கூறுவார்கள். அந்தளவிற்கு பெண்களின் பெருமை ஓங்கி நிற்கின்றது. பெண்கள் சமூகத்தின் கண்களாவர். குடும்பத்தின் குத்துவிளக்காக திகழும் இவர்கள் குடும்பம், சமூகம், நாடு என்று சகல மட்டங்களிலும் அச்சாணியாக விளங்குகின்றார்கள்.
இந்நிலையில் பெண்களை புறந்தள்ளும் எந்தவொரு சமூகமோ அல்லது நாடோ அபிவிருத்தி கண்டதாக சரித்திரமே இல்லை என்பது புத்திஜீவிகளின் கருத்தாகும். இந்த வகையில் நாட்டின் ஏனைய இனத்து பெண்களுடன் ஒப்பிடுகையில் மலையக பெருந்தோட்டப் பெண்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவது வேதனைக்குரியதாகும்.
கூடிய நேரம் வேலைசெய்து குறைந்தளவு ஊதியத்தை பெற்றுக் கொள்ளும் இவர்கள் ஆணாதிக்க சமூகத்தில் கட்டுண்டு தமது பல்வேறு உரிமைகளும் மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இருந்து வருகின்றமை யாவரும் அறிந்த விடயமாகும். பேராசிரியை குமாரி ஜெயவர்த்தனா 1984 இல் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருக்கின்றார்.
எனினும் இலங்கைப் பெண்களுக்குள்ளும் இலங்கையின் தந்தைவழி சமுதாய அமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் கூட்டம் ஒன்று இருக்கவே செய்கின்றது.அதில் பெருந்தோட்டப் பெண்கள் மிகுந்த புறக்கணிக்கணிப்பிற்கு ஆளானவர்களாவர் என்பதையும் குமாரி ஜெயவர்த்தனா எடுத்துக்காட்டி இருக்கின்றார்.இப்புறக்கணிப்பு நிலை இன்னும் முற்றுப்பெற்றதாக இல்லை.அவர்களின் துன்ப துயரங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.இதிலிருந்தும் மீள்வதற்கான வழிவகைகளின்றி அவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மாற்றுத் தொழில் முயற்சி
மலையகப் பெண்கள் நாட்டின் தேசிய வருவாயில் அதிகளவான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்றுறையை எடுத்துக் கொண்டால் இவர்களின் பங்களிப்பின்றி இத்தொழிற்றுறையை கொண்டு நடாத்துவது மிகவும் கடினமான ஒரு காரியமாகும்.
எனினும் இவர்கள் மீதான தொழில் ரீதியான கெடுபிடிகள் குறைவின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இதனால் சில பெண்கள் தோட்டத் தொழிற்றுறையை விடுத்து மாற்றுத் தொழில்களை நாடிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.தோட்டத் தொழிற்றுறையின் வீழ்ச்சிக்கு கம்பனியினரின் இத்தகைய கெடுபிடிகள் உந்துசக்தியாக இருக்கின்றன.
மலையகப் பெண்களில் பெரும்பாலானோர் தாம் உழைக்கும் பணத்தை கணவனிடம் கொடுத்துவிட்டு தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஐந்துக்கும் பத்துக்கும் கணவனிடம் கையேந்தி வாழ்வதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தமது குடும்பத்தை சிறப்பாக வாழவைக்கும் நோக்கில் மலையகப் பெண்களில் சிலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பணத்தை உழைத்தனுப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இவ்வாறு உழைத்தனுப்பும் பணத்தை சில ஊதாரிக் கணவர்கள் குடித்துக் கும்மாளமிட்டு வருவதும் புதிய விடயமல்ல.
இதனால் குடும்பம் கண்ணீரில் தள்ளாடுவதோடு பிள்ளைகளின் கல்வி ரீதியான செயற்பாடுகளும், அன்பு, பாதுகாப்பு போன்ற பல விடயங்களும் கேள்விக்குறியாகும் நிலையில் பிள்ளைகளின் எதிர்காலமும் சூனியமாகி விடுகின்றது.இத்தகைய பெற்றோரின் சில பிள்ளைகள் நெறிதவறும் வாய்ப்புகளும் அதிகமுள்ளன.இளவயதுத் திருமணங்கள் மலையகத்தில் அதிகரிப்பதற்கும் இத்தகைய நிலைமைகள் அடிப்படையாக அமைந்துவிடுகின்றன என்பதனையும் கூறியாக வேண்டும்.
மலையக யுவதிகளில் பலர் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கின்றதா என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாக உள்ளது.இதேவேளை நகர்ப்புற வர்த்தக நிலையங்கள், எஜமானர்களின் வீடுகள் போன்றவற்றிலும் பெண்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் உரிமைகளை உரியவாறு உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரச சார்பற்ற நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றன.கடந்த மேதினத்தின் போதும் இதற்கான குரல் ஓங்கி ஒலித்தமையும் நோக்கத்தக்கதாகும்.எனினும் உரிய சாதக விளைவுகளை இன்னும் மலையகப் பெண்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரிந்த விடயமாகும்.
அரசியல் பிரதிநிதித்துவம்
சமூக அபிவிருத்தியில் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் இன்றியமையாததாக விளங்குகின்றது.பின்தங்கிய பல சமூகங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தின் சிறப்பான செயற்பாடுகள் காரணமாக முன்னிலைக்கு வந்திருப்பதோடு தேசிய நீரோட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளன.
இந்த வகையில் மலையக சமூகம் பல்வேறு அபிவிருத்திகளை பெற்றுக் கொள்வதற்கும் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமாகின்றது.இந்த வகையில் இந்திய வம்சாவளி மக்களின் சனத்தொகைக்கற்ப உரிய அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்றவொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அதிலும் மலையகப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் கீழ் நிலையில் உள்ளது. உள்ளூராட்சி மன்றங்களில் ஓரளவு பெண் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றபோதும் மாகாண சபை, பாராளுமன்றம் என்பவற்றில் மலையக பெண்களின் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகியுள்ளது என்பதனை நீங்கள் அறிவீர்கள்.சமூகத்திலும், தொழிற்சங்கங்களிலும் கூட பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்படுவதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
பெண்கள் தொடர்பான பல தீர்மானங்களை ஆண்களே பல இடங்களில் மேற்கொள்ளுகின்றனர்.இதனை பெண்களுக்கு இழைக்கப்படும் ஒரு அநீதியாகவே கருத முடியும்.பெண்கள் குறித்த தீர்மானங்களை பெண்களே மேற்கொள்ளும் நிலை உருவாகுமிடத்து அது அவர்களின் அபிவிருத்திக்கு தோள் கொடுப்பதாக அமையும்.சமூகத்தில் அவர்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் இதனால் வழிவகைகள் ஏற்படும்.
அதைவிடுத்து பெண்கள் குறித்த தீர்மானங்களை இன்னொரு தரப்பினர் மேற்கொள்வதென்பது எவ்விதத்திலும் நியாயமானதாக அமையாது என்பதையும் விளக்கிச் செயற்பட வேண்டும்.
மலையக பெருந்தோட்ட யுவதிகள் இன்று பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வருவது சிறப்பான ஒரு விடயமாகும்.ஆசிரியைகள், முகாமைத்துவ உதவியாளர்கள், கிராமசேவகர்கள் என்று பல அரசு தொழிற்றுறைகளிலும் மலையக பெண்களின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும்.
இந்நிலை மென்மேலும் அதிகரித்தல் வேண்டும்.இத்தகைய பெண்களை உதாரணமாக முன்னிறுத்தி ஏனைய பெண்களும் பல்வேறு துறைகளிலும் முன்செல்ல கற்றுக் கொள்ள வேண்டும்.மலையக யுவதிகளின் கல்வித்துறை ஈடுபாடு தற்போது அதிகரித்து வருகின்றமை மற்றுமொரு இனிப்பான செய்தியாகும்.
இச்செயற்பாடு பெண்களின் தலையெழுத்தை நல்லபடியாக மாற்றியமைக்க வழிசமைப்பதாக அமையும்.இதனை கருத்தில் கொண்டு கல்வித்துறை நாட்டம் மலையகப் பெண்களிடையே மேலும் விருத்தி பெற வேண்டும்.
சமூகச் சக்கரத்தில் பெண்கள் மிகுந்த முக்கியத்துவம் மிக்கவர்களாக கருதப்படுகின்றனர்.இந்நிலையில் பெண்களின் அபிவிருத்தி தொடர்பாக உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து செயற்படுவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இத்தகைய திட்டங்கள் இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு மலையக பெண்கள் போன்ற பின்தங்கிய பெண்களின் அபிவிருத்தி கருதி விசேட திட்டங்களை ஆட்சியாளர்கள் முன்வைப்பதும் அவசியமாகும். குறிப்பாக அரசியலமைப்பு ரீதியாக இத்தகைய திட்டங்கள் உறுதிப்படுத்தப்படுமானால் அது சிறப்பானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் அமையும். இதன் மூலம் மலையக பெண்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.