ஆட்சி மாற்றமே நோக்கம் தமிழர்களுடைய நீதியல்ல – பிரேரணை குறித்து உருத்திரகுமாரன்

587 Views

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டே பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழர்களது நீதிக்கானதல்ல எனவவும் தெரிவித்துள்ளார்.

தீர்மான வரைவின் 9வது சரத்தினை சுட்டிக்காட்டி, இது நீதிவிசாரணையும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையினை சிறிலங்காவிடமே கையளிப்பதாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014ம் ஆண்டு தீர்மானம் வழங்கிய ஆணைக்கமைய, ஐ.நா ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள், சாட்சியங்கள், ஆதாரத் திரட்டல்கள் ஊடாக அமைந்த அறிக்கை, பின்னராக முன்வைக்கப்பட்ட கலப்பு நீதிமன்றம் யாவற்றையும் கடந்து, புதிய தீர்மான வரைவானது நிலைமைகளை மேலும் பின்னோக்கி கொண்டு செல்வதாக அமைந்துள்ளதெனவும் அவர் தெரவித்துள்ளார்.

ஏற்கனவே ஐ.நாவின் நிறையவே ஆதாரங்கள், சாட்சிகள் உள்ள நிலையில், புதிதாக சாட்சியங்கள், ஆதாரங்களை திரட்டுவதற்கான பொறிமுறையினை மீளவும் ஐ.நா ஆணையாளர் அவலுவலகத்திடம் கொடுத்து காலத்தை இழுத்தடிக்கின்ற செயலாக இது தீர்மான வரை அமைவதோடு, நீதித்துறையினை நோக்கிய செயல்முறை தெளிவாக முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை கோரியிருந்தது. ஆனால் இந்த தீர்மான வரைவானது, சர்வதேச நியமங்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வு செய்யுங்கள் என சிறிலங்கா அரசிடம் கோருகின்றது.

தமிழ் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட சிற்சில விடயங்கள் மேலோட்டமாக பூச்சுவேலைகள் போல் உள்ளடக்கப்பட்டுள்ளதன்றி, பாதிக்கப்பட்ட மக்களது அடிப்படைக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளதாக தீர்மான வரைவு அமையவில்லை எனவும் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா, தொடர்பில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இணையவழி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுப் போதே இக்கருத்தினை அவர் தெரிவித்திருந்தார்

Leave a Reply