அழைப்பு இல்லமல் இ.தொ.கா பேராளர் கூட்டத்துக்குச் சென்ற செந்தில் தெண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜா தலைமையில் நேற்று நடைபெற்ற பேராளர் கூட்டத்துக்கோ அல்லது தேசிய சபை கூட்டத்துக்கோ, அக்கட்சியின் உபதலைவர் செந்தில் தொண்டமானுக்கு முறையான அறிவிப்புகள் எவையும் வழங்கப்படாத நிலையில், காங்கிரஸுக்குள் நேற்று பிரச்சினை மூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுச் செயலாளர் என்ற வகையில், அனுஷியா இந்த அழைப்பை விடுத்திருக்க வேண்டும் எனினும், அவர் அதில் தவறிழைத்து விட்டதாகவும் அழைப்பு இல்லாமலேயே, செந்தில் தொண்டமான் அந்தக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார் என்றும் தெரியவருகிறது.

தேசிய சபைக் கூட்டத்துக்கு பிறிதொரு நாள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்று எந்தவிதமானமுன்னறிவிப்புகளும் இல்லாது, திடீரென கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டங்கள் முடிவடைந்ததை அடுத்து, “நான் காங்கிரஸில் அங்கம் வகிக்கிறேனா, இல்லையா?” என்று, அனுஷியாவிடம் செந்தில் தொண்டமான் கேட்டதாகவும் அதற்கு அவர், “உங்களுக்குத் தெரியுமென்று நினைத்தேன்; இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என்று கூறி மன்னிப்புக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமானைத் தெரிவு செய்வதற்காகவே, தேசிய சபை கூடியுள்ளது. அதன் பின்னரே அந்த அறிவிப்பு, பேராளர்கள் மாநாட்டுக்கு அறிவித்திருக்க வேண்டும். எனினும், அதைச் செய்யாது, பேராளர்கள் மாநாட்டில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இ.தொ.காவின் உப தலைவர்களான பிலிப் குமார் மற்றும் பி.புஷ்பராஜ் ஆகியோர், தேசிய சபை கூட்டப்பட்டமை தொடர்பில், காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் இராஜதுரையிடம் வினவியுள்ளதாகவும் இதன்போது, கட்சியின் யாப்பு குறித்துக் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.