மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு நாடளாலிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளின் ஊடாக மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை பிரதிபலிக்கும் பல்வேறு விடயங்கள் எடுத்துக்காட்டப்பட்டன.மேலும் அம்மக்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளையும் ஏனையோர் விளங்கிக் கொள்ளும் ஒரு வாய்ப்பும் இதனால் ஏற்பட்டது என்பதனை மறுப்பதற்கில்லை.இந்த நிலையில் இம்மக்களின் அபிவிருத்தி கருதி காத்திரமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் ஆழமாகவே வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே மலையக மக்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு பெருந்தோட்டத்துறையில் புரட்சிமிக்க மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாகவும் வலியுறுத்தி இருக்கின்றார்.
இது சாத்தியப்படவேண்டுமென்பது அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் கடந்தகால வாக்குறுதிகளைப் போன்று செயல்வடிவமற்ற ஒரு வாக்குறுதியாக இதுவும் அமைந்துவிடக்கூடாது என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பாகும்.
மலையக மக்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூலித் தொழிலாளர்களாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட வரலாறு மிகவும் சோகமானதாகும்.அவர்கள் இங்கு அழைத்துவரப்பட்ட காலம்முதலே அவர்களின் நலன்கருதி பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக வாக்குறுதிகள் பலவும் வழங்கப்பட்டன.என்றபோதும் அவ்வாக்குறுதிகளில் பெரும்பாலானவை காற்றில் பறக்கவிடப்பட்டதையே அதிகமாக அவதானிக்க முடிந்தது.
போதாக்குறைக்கு உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் குடியேற்றப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்கள் கொடூரமான சுரண்டல்கள் பலவற்றுக்கும் உள்ளாக நேர்ந்தமையும் புதிய விடயமல்ல.அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய, பிரான்சிய ஆட்சியாளர்களாலும், பின்பு சுதேச ஆட்சியாளர்களாலும் ,அந்தந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும், தொழிலாளர்களல்லாத ஏனைய தமிழர்களாலும்,ஏனைய இந்தியர்களாலும், வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள்,பிற அலுவலர்கள் போன்ற பலராலும் தமிழகத்திலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொடூரமாக சுரண்டப்பட்டதாக கலாநிதி க.அருணாசலம் போன்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகின் பல நாடுகளிலும் இவ்வாறாக குடியேற்றப்பட்ட தமிழ் தொழிலாளர்களில் அநேகமானவர்கள் இன்று தமிழ் பேசவோ,எழுதவோ,வாசிக்கவோ தெரியாத நிலையில் காணப்படுவதோடு, பலர் சுதேச இனத்தவர்களுடன் கலப்புற்று விட்டதாகவும் தெரியவருகின்றது.அவ்வாறு கலப்புற்ற நிலையில் அவர்கள் பெருமளவு உரிமைகளுடனும், சலுகைகளுடனும் ஓரளவு வளத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் புத்திஜீவிகளின் கருத்தாக உள்ளது.
இந்த வகையில் இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேற்றப்பட்ட தமிழ் தொழிலாளர்கள் அண்மைகாலம் வரை சூழ்நிலை நிர்ப்பந்தங்களால் இலங்கையில் காலம்காலமாக வாழ்ந்துவந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் அலட்சியத்திற்கு ஆளானவர்களாக விளங்கினார்கள்.
மேலும் இம்மக்கள் தோட்டக்காட்டான், இந்தியக்காரன், கள்ளத்தோணி என்றெல்லாம் அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட வரலாறுகளும் மலையக வரலாற்றில் அதிகமாகவுள்ளன.தொழில் ரீதியான, கல்வி ரீதியான,சமூக ரீதியான நெருக்கீடுகள் பலவற்றுக்கும் இம்மக்கள் முகங்கொடுக்க நேர்ந்தது.முதலாளிமார்களின் உச்ச இலாபம் கருதிய முன்னெடுப்புக்களால் இம்மக்கள் உழைப்பு ரீதியாக கசக்கிப் பிழியப்பட்டனர்.
எனினும் உழைப்புக்கேற்ற ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது இன்றும் கூட ஒரு கனவாகவே இருந்து வருகின்றது.தொழில் நிலைமைகளின்போது கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளான தொழிலாளர்கள் கொடுமை தாங்காது உயிரிழந்த சம்பவங்களும் மலையக ஏடுகளில் பதிவாகியுள்ளன.
சமுதாய உரிமை மீறல் ‘
இலங்கை அரசின் கொள்கைகள் பால், வகுப்பு, இனம் என்பவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டவில்லை.ஆனால் இதற்கு ஒரேயொரு புறநடை உண்டு.அதாவது தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு பெருந்தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் கல்வி காலனித்துவவாதிகளின் தேவைகளுக்கு அடிபணிந்திருந்தது.
சுதந்திரத்துக்குப் பின்னரான சமூக அபிவிருத்தி கொள்கைகளும் கூட அவர்களை கவனத்தில் கொள்ளவில்லை’ என்ற பேராசிரியர் சுவர்ணா ஜயவீரவின் கருத்து தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளதோடு, இம்மக்களின் கல்வி நடவடிக்கைகள் மழுங்கடிக்கப்பட்டதையும் படம் பிடித்துக் காட்டுவதாகவுள்ளது.
சர்வதேச ரீதியாக இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சமுதாய உரிமையை சட்ட ரீதியாக இல்லாமல் செய்தது இலங்கையின் சுதந்திரத்தின் மறுபக்க விளைவுகளாகும் என்றும் வலியுறுத்தல்கள் இருந்து வருகின்றன.இதன் மூலம் ஏறக்குறைய 90,000 பேருக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட்டது.இதனால் இவர்கள் நாடற்றவர்கள் என்ற நிலையிலும் இந்நாட்டில் அரசியல் அதிகாரம் இல்லாத அநாதைகளாகவும் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அரசாங்க உத்தியோகங்கள் மறுக்கப்பட்டதுடன் உரிமைகளைப் பெற்று மேலோங்கி சென்று கொண்டிருந்த ஏனைய இனத்தவர்களால் நசுக்கப்பட்டும் அவதிக்கப்பட்டும் துன்பங்களை சுமந்தனர்.இந்நிலையில் ஏனைய இனத்தவர்களுக்கும் மலையக மக்களுக்கும் இடையே பாரிய விரிசல் நிலை காணப்பட்டதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இதேவேளை 1955 காலப்பகுதியைத் தொடர்ந்து இலங்கையின் மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சி கண்டுள்ளது.2001 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 5.1 வீதமாக மூன்றாவது சிறுபான்மை இனமக்களாக தமது எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சியினைக் கொண்டவர்களாக இந்திய வம்சாவளி மக்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளனர். இத்தகைய வீழ்ச்சி நிலைக்கு சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அரசியல்வாதிகளின் தீர்மானமே காரணமாகுமென்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் நோக்கத்தக்கதாகும்.
மேலும் மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், ஏனைய உரிமைகள் சிலவற்றை ஆட்சியாளர்கள் வழங்க எத்தனித்தபோதும் இனவாத சிந்தனையாளர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து குரல் கொடுத்த சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னராயினும் சரி அல்லது சுதந்திரம் பெற்ற பின்னராயினும் சரி மலையக மக்கள் மீதான நெருக்கீடுகளுக்கு ஒரு போதும் குறைவிருக்கவில்லை என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
இந்நாட்டில் மலையக மக்களுக்கு உரிமைகளை வழங்குவதைக் காட்டிலும் அவர்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்தி ஓரங்கட்டுவதையே இனவாத சிந்தனையாளர்கள் முன்னெடுத்தனர்.ஒப்பந்தங்களின் ஊடாக அவர்கள் இதில் வெற்றியும் கண்டனர்.அத்தோடு காலத்துக்கு காலம் இங்கு ஏற்பட்ட வன்செயல்கள் இம்மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கின.ஒரு அச்ச உணர்வுடன் கூடிய சூழல் இதனால் தோற்றம் பெற்ற நிலையில் மலையக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிப்படைந்திருந்தது.
1956, 1958, 1960, 1981, 1983, 1986 என்ற அடிப்படையில் காலத்துக்கு காலம் இலங்கையில் வன்செயல்கள் இடம்பெற்றன.இதனால் இந்திய வம்சாவளி மக்களில் ஒரு பகுதியினர் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு சென்று குடியேறினர்.
இன்னும் சிலர் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த நிலையில் மேலும் சிலர் சிங்கள மக்கள் செறிவாக வாழுகின்ற காலி, மாத்தறை, இரத்தினபுரி, பலாங்கொடை பகுதிகளில் சிங்கள மக்களுடன் வாழ்வதற்கு பிரயத்தனம் மேற்கொண்டனர்.தமது பேச்சு மொழியைக்கூட சிங்களமாகவோ அல்லது இலங்கையில் வாழுகின்ற இஸ்லாமியர்கள் பேசும் பேச்சுத் தமிழை வருந்தி உள்வாங்கிக்கொண்டு வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சமத்துவமான கல்வி
இந்திய வம்சாவளி மக்கள் இந்நாட்டில் தனித்துவமான ஒரு சமூகமாக மேலெழும்பியுள்ள நிலையில் அவர்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாகவே விடுக்கப்பட்டு வருகின்றன.அத்தோடு அரசியல் யாப்பு ரீதியாக அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்வருதல் வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.எனினும் இக்கோரிக்கைகள் இன்னும் செயல்வடிவம் பெறுவதாக இல்லை.
இதனிடையே கடந்த காலத்தில் தேர்தல் விஞ்ஞாபனங்கள், வரவுசெலவு திட்ட முன்மொழிவுகள் போன்ற பலவற்றிலும் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாகவே முற்றுப்பெற்றுவிட்ட நிலையில் மேலும் மேலும் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட ஒரு சமூகமாக மலையக சமூகம் இருந்து வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் மலையக மக்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நீர் வழங்கல், தோட்ட அபிவிருத்தி உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ‘நாம் 200’ என்னும் மகுடத்திலான தேசிய நிகழ்வு இடம்பெற்ற நிலையில் இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்கள் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருக்கின்றார்.
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான தீர்மானம் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த விளைகின்றோம்.அதன்படி அங்கு வாழும் மக்களுக்கு காணிகளை வழங்கி அதில் தேயிலையை பயிரிட்டு அவற்றை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மலையக மக்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மலையக மக்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் எவ்வித இன, மத வேறுபாடுகளுமின்றி சமத்துவமான கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதிகள் பலவற்றையும் ஜனாதிபதி வழங்கி இருக்கின்றார்.இதில் பெருந்தோட்டத் துறையில் புதிய முறை அறிமுகமென்பது ஏற்கனவே கம்பனியினர் முன்வைத்திருந்த வெளியார் உற்பத்தி முறையினை நிழற்படுத்துவதாக உள்ளது.
மலையக மக்கள் நிலச்சொந்தக்காரர்களாக மாற்றம் பெறுவதற்கு இம்முறை அடித்தளமாக அமையும் என்று ஏற்கனவே புத்திஜீவிகள் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தனர்.எவ்வாறெனினும் ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதிகள் எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்திய போலி வாக்குறுதிகளாக அல்லாமல் நடைமுறைச் சாத்தியம் மிக்கதாக அமைய வேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பாகும்.இதேவேளை மலையக மக்கள் இனியும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு தயாராக இல்லை.