அறவழிப் போராட்ட உணர்வாளர்களுக்கு, புலம்பெயர் தேசத்திலிருந்து ஒரு உரிமை மடல்…

661 Views

வட/ கிழக்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சிசார் செயற்பாட்டாளர்கள், முஸ்லிம் சகோதரர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், ஊடக நிர்வாக குழுமத்தினர், ஊடகவியலாளர்கள், ஆலய, தேவாலய, பள்ளிவாசல்களின் பரிபாலகர்கள், வர்த்தக சங்கத்தினர் யாவருக்கும் அன்புரிமையுடனான வணக்கம்…

நடந்து முடிந்த வரலாற்று சிறப்புமிகு  “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான” அறவழிப் போராட்டம் அரச பயங்கரவாத மிலேச்சுத்தனங்களுக்கு அடிபணியாமல், கொண்ட கொள்கையில் கடுகளவும் தடம் மாறாமல் வல்லாதிக்க வெறியர்களின் அடக்கு முறையை உலகிற்கு அம்பலப்படுத்தியபடி அவ்வப்போதான சீரற்ற காலநிலைகளையும் சமாளித்து பல தடைகளைத் தாண்டி உணர்வெளிச்சிப் போராட்டம் முடிவிடத்தை எட்டியதென்பது மிகவும் பெரு வரலாற்றுச் சாதனையே….
இதனை நடாத்திய உங்கள் அனைவரின் விடாமுயற்சி கண்டு உளம் பூரித்துப் போனோம்.

இது வார்த்தைகளாலோ, வரிகளாலோ வர்ணிக்க முடியாத எமது உணர்வுப் பிரவாகம். அதனை உங்கள் பார்வைக்கு வரிகளாகவேனும் சிறு துளியாக தர வேண்டும் என்ற எனது ஆழ்மன உணர்வினை பகிர்கிறேன். இவ்வாறே புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழுறவுகள் தத்தமது உணர்வுகளை ஆழ்மனதில் நிச்சயம் சுமந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

மேலும் தமிழ் பேசும் மக்கள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னரான போருமற்ற, சமாதானமுமற்ற மிகவும் கொடிய சோதனையான சூனியக் காலத்தில் வாழ்கிறார்கள்.  அவர்களது தீராத வலி இன்னும் தொடர்கிறது….
சத்தமுமின்றி, யுத்தமுமின்றி, இரத்தமுமின்றி மேற்கொள்ளப்படும் போர் மிகக் கொடியது. இது வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பிரதானமாக…

* நில, புலங்கள் வன்வளைப்பு…
* அரசியல் கைதிகளின் சிறை வாழ்வு நீள்வு…
* தமிழர் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை மறுப்பு…
* வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீர்…
* போரில் இறந்த உறவுகளை நினைவுகூறத் தடை…
* முஸ்லிம்களின் இறப்பின் பின்னரான சமய மரவு ரீதியான அடக்கத்திற்கான தடை..
* மலையக மக்களின் அடிப்படைப்  பிரச்சனை.
* தான்தோன்றித்தனமாக புத்தர் சிலை நிறுவுதல்…

இவ்வாறாக இன்னோரன்ன வகைதொகையற்ற அடக்கு முறைகளை கொண்டிருக்கக் கூடிய கொடுங்கோண்மை ஆட்சியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அவர்களின் ஆதங்கமான

“இதனைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?”

என்ற ஏக்கப் பெருமூச்சிற்கு தங்கள் அமைப்பு ஒருங்கிணைத்த இவ் அறவழியிலான போராட்டம் உண்மையில் மெய்சிலிர்க்க வைத்தது.

ஐந்து நாட்களும் (03 – 07) உலகவாழ் தமிழ் பேசும் மக்களை தாயகத்தில் நீங்கள் நடத்திய எழுச்சிப் பேரணியானது அச்சு, இலத்திரனியல், சமூகவலைத்தளங்கள் ஊடாக போராட்டத்தின்பால் உணர்வுரீதியாக உள்ளீர்த்து வைத்திருந்தது.
இப்போராட்டக் களத்தில் தமிழ் ஊடகங்கள், அதன் ஊடகவியலாளர்கள் மிக உற்சாகத்தோடு “தமிழ்த் தேசிய” உணர்வுகளை யாவருக்கும் பரப்பிய விதமும் மிகவும் நன்றிக்குரியதுவே.

இத்தனைக்கும் களம் அமைத்து யாவரையும் ஓரணியாக்கி பெரும் வரலாறு படைத்த “வடக்கு – கிழக்கு பொது அமைப்பினர்க்கும், தாயகவாழ் மக்களுக்கும் எம் மன உணர்வுகளின் நன்றிப் பிரவாகமே இம் மடல்.

அது மட்டுமல்ல அறப்போராட்டத்தின் வழித்தடப் பயணத்தில் மிகவும் நெகிழ வைத்த சம்பவங்கள் பல… இதில் 2009ஆம் ஆண்டு “இன அழிப்பு” செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் தீபமேற்றி அகவணக்கம் செலுத்தியதும் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என உரைத்த தீர்க்கதரிசியான தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவிட வழிபாடும், அதற்கு முன்னர் யாழ்/ பல்கலைக்கழக நுளைவாயிலில் மாணவர்களிடம்  பேரணி ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் புனித மண் வழங்கப்பட்டது.

அப்போது அந்தப் புனித மண்ணை பெற்ற பல்கலை மாணவர்கள் முழங்கால் தரையில் குத்தி மிக உணர்வோடு பெற்ற விதம் உண்மையில் விழிகளிரெண்டும் நீரைச் சொரிந்து கொடிய இன அழிப்புக் கால நினைவுகளை மீட்டது.

எங்கள் உறவுகளின் உயிரற்ற உடல்களையும், சதைத் துண்டங்களையும், இரத்தப் பெருக்கையும், கொடிய அரக்கர்களின் ஊழித்தாண்டவத்தையும், கொத்துக் குண்டுகளின் கொத்துக் கொத்தான உயிரழிப்பையும் வகைதொகையின்றி கண்டு சிலிர்த்தவள் வன்னித் தாய்…

பூமித்தாயவளைப் பிழந்து எண்ணுக்கணக்கற்ற உடல்களைப் புதைத்து வந்தோம். அத்தனை உடலங்களையும் வன்னி மண்ணே தாங்கியது. அப்போது அந்த மண்ணில் பல இலட்சம் உறவுகள்  உயிர் பிரிந்த தம் உறவுகளை நினைத்து கத்திக் கதறிய நினைவுகளும் மீண்டது. அன்று எமது மக்களின் மரண ஓலம் உலகிற்குக் கேட்கவில்லை. இப்போது உலகறிய எம் உறவுகளின் உடலங்களைப் பொறுப்பேற்ற அந்த மண்ணை நீங்கள் வழங்கும் போது மாணவர்கள் பணிந்து புனிதமாக பெற்ற விதம் மனதில் ஒருவித உணர்வை ஊட்டியது….

“இந்த மண் யாருக்கும் தலை வணங்காது”

“உறவுகளைப் விதைத்த மண் ஒருபோதும் உறங்காது”

வன்னி மண்ணில் வகைதொகையின்றிப் புதைக்கப்பட்ட எம் உறவுகளின் கொடூரச் சாவுக்கு நிச்சயம் நீதி வேண்டும்….

இவ் அறவழிப் போராட்டம் எங்கள் உரிமைகள் பெறும்வரை தொடர வேண்டும்….

அதற்கு தங்கள் பணிகள் இடைவிடாத முயற்சியோடு முன்னேற வேண்டும்…

தங்களுக்கு நன்றி பகிர்ந்து அன்னியப்படுத்தாமல் எம் உணர்வினைப் பகிர்ந்து நிறைகிறேன்.

-நன்றி-

அன்புரிமையுடன்…
து. திலக்,
புலம்பெயர் தேசத்திலிருந்து…

Leave a Reply