அண்மையில் முள்ளியவளையில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. தனது முச்சக்கரவண்டியில் “மாவீரன்” என எழுதப்பட்ட பெயர் பலகையை காட்சிப்படுத்தியிருந்தமைக்காக அதன் சாரதியான தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். “மாவீரன்” என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் பெயர். ஆகவே குறித்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகிறார். அவரைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை செய்யவேண்டும், எனக் கூறியே பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். பின்னர் சட்டத்தரணிகளின் விரைவு நடவடிக்கையினால் குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டார்.
மேற்குறித்த சம்பவமானது, மாவீரரை தமிழர்கள் மறந்தாலும், தமிழர்கள் மீது வன்முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துக்கொண்டிருக்கும் பேரினவாத சிறீலங்கா அரசும், அதன் படைக்கட்டமைப்பும் மறக்காது என்பதையே சொல்லி நிற்கிறது. அந்தளவுக்கு மாவீரர்கள், தமிழின விடுதலையின் குறியீடாக, தமிழ் தேச விடுதலைக்கான எழுச்சியின் நாயகர்களாக, ஒடுக்குமுறைகளைத் தகர்க்கும் உளப்பலமாக மாறியிருக்கிறார்கள். மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு தடைகள், அச்சுறுத்தல்கள், கைதுகள், விசாரணைகளுக்குப் பின்பும் ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் தமிழ் மக்கள் சுயமாகத் திரள்வதற்கு இதுவேதான் காரணம். தமிழ் மக்களின் விடுதலைத் தேவன்களாக மாவீரர்கள் எப்போதும் இருக்கின்றனர். எப்போதும் இருப்பர்.
அவர்தம் கனவு
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் அதிகாலை தம் ஆயுதங்களை மௌனிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில், கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் அறிவித்தார். கனதியான அரசியல் அர்த்தமிகுந்த அர்ந்த வார்த்தைகளின் பின்னால் மறைந்திருக்கும் அர்த்தங்களுக்குள் தலையாயது மாவீரர்கள் செய்த தியாகம். அந்தத் தியாகத்தின் மூலைமூடுக்கெல்லாம் பரவியிருந்த அவர்தம் கனவு. தமிழர் தம்மைத்தாமே ஆளக்கூடிய சுயநிர்ணயமுடைய தேசம்தான் அந்தக் கனவு. ஆயுதப் போர் மௌனிப்பின் பின்னரும் கூட பல மாவீரர்கள் அந்தக் கனவோடு விதையானர்கள். தமிழ் சமூகத்திடமும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளிடமும், செயற்பாட்டாளர்களிடமும் மடைமாற்றிவிட்டுச்செல்லப்பட்ட அந்தக் கனவு இன்னமும் சுமக்கப்படுகிறதா?
மாவீரர் நாளிலாவது இந்தக் கேள்விக்குப் பதில் தேடிப்பார்த்தால், மக்களின் மனங்களில் அந்தக் கனவு உண்டு. தடம்மாறாத தமிழ் தேசிய தலைமைகளிடமும் அந்தக் கனவு மிளிர்ந்துகொண்டிருக்கிறது. அர்ப்ப நலன்களுக்காக இனவிடுதலையைக் காட்டிக்கொடுத்த தரப்பினர்தான் அந்தக் கனவைக் குழிதோண்டிப் புதைக்க கங்கணம் கட்டிநிற்கின்றனர். தாயகத்திலும் சரி, புலம்பெயர் நாடுகளிலும் சரி, அரசியல் செயற்பாடாக, இலக்கியமாக, சினிமாவாக இந்தக் கனவழிப்புக்கான முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இனவிடுதலையின்பால் அதீத அக்கறைகொண்ட தமிழ்ச் சமூகம் இதுபோன்ற செயற்பாடுகளிடத்தில் கவனமோடிருத்தல் வேண்டும்.
சீரமைக்கப்படாத துயிலுமில்லங்கள்
போர் முடிவுற்றுவுடன் இராணுவம் செய்த முதல்வேளை, வடக்கு, கிழக்கு முழுவதிலும் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களை அழித்தமை ஆகும். அதுவரைகாலமும், காலணி அணிந்த கால்கள் படாத, சத்தமாக ஒலியெழுப்பப்படாத அதிபுனிதப் பகுதியாக இருந்த மாவீரர் துயிலுமில்லங்களை ஒரே இரவில் அழித்து – அகழ்ந்து எறிந்தது இராணுவம். தமிழ் மக்களின் ஆத்மார்த்த நம்பிக்கைப் பிரதேசமாகவிருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் பலவற்றின் மீது முகாமிட்டுக்கொண்டன இலங்கை அரச படைகள்.
இனிமேல் மாவீரர் தினம் நினைவேந்தவே முடியாது எனப் பலரும் நம்பிக்கொண்டிருக்க, போர் நிறைவுற்று அடுத்த வருடமே, பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. 2009 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில்தான் மாவீரர் நாள் இடம்பெறும் எனக் கருதி, பல்கலைக்கழக வளாகத்தை இராணுவம் சுற்றிவளைத்து நிற்க, யாழ்.போதனா வைத்தியசாலையிலும், கிராமங்களில் இருந்த பல ஆலயங்களிலும் மாவீரத் தீபங்கள் பிரகாசித்தன. அந்தத் தடையுடைப்பு அடுத்து வந்த மாவீரர் தின எழுச்சி நிகழ்வுகளுக்குத் தமிழ் சமூகத்தின் மத்தியில் பெரும் உந்துதலை அழித்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் எத்தடை வரினும் மக்கள் மாவீரர் நினைவெழுச்சிகொள்ளத் தயாராகினர்.கடந்த 14 வருடங்களாக இந்த எழுச்சி நாளை மறவாது பெரும் சனத் திரள்வை தமிழ் மக்கள் ஒவ்வொரு மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாகவும் காட்டுகின்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை, மாவீரர் நாளை நினைவுபடுத்தும் பரப்புரைகள் இல்லை, சரியான ஒழுங்குபடுத்தல் அமைப்புகள் இல்லை. ஆயினும் அந்நாளில் தமிழர்கள் சுயமாகத் திரள்கின்றனர். தாயகநிலம் துணிகரமான தன் உழைப்பையும், புலம்பெயர்தளம் பனித்தேசத்தில் உழைத்த பணத்தையும் கொடுத்து எவ்வித முரண்பாடுகளுமின்றி இப்பெரு நிகழ்வை உணர்வுபூர்வமாக நடத்தி முடித்துவிடுகின்றனர். இதுதான் அனைவருக்கும் ஆச்சரியம் தரும் நிகழ்வாக இருக்கின்றது. துரோகம், ஒற்றுமையின்மைக்கு பேர்போன தமிழர்கள், இந்த விடயத்தில் மாத்திரம் விட்டுக்கொடுப்புக்கு இடமின்றி இயங்க வைக்கும் சக்தி எது? என்ற கேள்வியே தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைக்கும் அனைத்து சக்திகளிடமும் உண்டு. அந்தக் கேள்விக்கு தமிழர்களிடமிருக்கும் பதில் என்னவெனில், மாவீரர்கள் எமக்காய் உயிர்தந்த உயிர்க்கொடையாளர்கள். அவர்தம் நினைவானது இவ்வினத்தின் விடுதலை பெருமூச்சாய் நீடித்து நிற்கும் பேரலை.
தமிழர்கள் இவ்வாறு சந்ததி கடத்தும் இந்த நினைவேந்தல் போராட்டத்தை நிலைப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், செயற்பாட்டாளர்கள் அனைவருக்குமே உண்டு. போர் முடிவுற்று 14 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் எந்தவொரு மாவீரர் துயிலுமி்ல்லத்திலும் நிரந்தரமானதொரு நினைவுத்தூபி அமைக்கப்படவில்லை. அழிக்கப்பட்டவைகள் ஆக்கிரமிப்பின் சின்னங்களாக அப்படியே கற்குவியல்களாக இருப்பினும், வருடத்திற்கு ஒருமுறை துப்பரவு செய்வதனால், அந்தக் குவியல்கள்கூட இயற்கையின் தாக்கத்தினால் அழிவடைந்து வருகின்றன. எனவே எப்போதும் புனிதமான பகுதியாகவும், சுத்தமான நிலமாகவும் இருக்கின்ற வகையில் மாவீரர் துயிலுமில்லங்கள் காப்பிடப்படவேண்டும். ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் பொதுவானதொரு நினைவுத்தூபி கட்டியெழுப்ப்பட்டல் வேண்டும். அதுவே இவ்வினத்தின் விடுதலைப் பெருநெருப்பைக் காவிநிற்கும் மாவீரர்களுக்கும், அத்தீயை அணையாது வைத்திருக்கும் தமிழ் சமூகத்திற்கும் தமிழ் தேசிய அரசியல் உலகு செய்யும் பெருங்கடமையாகும்.
கவனிப்பாரற்றிருக்கும் மாவீரர் பெற்றோர்கள்
சமநேரத்தில் வடக்கு, கிழக்கு முழுவதும் வாழும் மாவீரர்களின் பெற்றோர்கள் மிக மோசமான பொருளாதார இடர்களை எதிர்கொள்கின்றனர். இனத்தின் விடுதலைக்காகத் தம் பிள்ளைகளைக் கொடுத்த பெற்றோர் கவனிப்பாறின்றி வாழ்கின்றனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மூப்புக்காலத்தின் மருத்துவ தேவைகளைக் கவனிக்கவும், நலன்புரித்திட்டங்கள் அவசியமானவை. மறுவேளை உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் ஏதுமற்று நிற்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர்கள் தாயகம் முழுவதும் வாழ்கின்றனர் என்பதையும் தமிழ் சமூகம் கவனத்தில்கொள்ளவேண்டும்.
செழுமைதரும் மரநடுகை
மாவீரர்நாள் இனத்தின் விடுதலைக்கான பேரெழுச்சி நாளாக மட்டுமின்றி, தேசக்கட்டுமானத்தினையும், சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும் வாரமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தியிருந்தனர். இன்றைக்கும் சிறீலங்கா அரசு அதிக வருமானமீட்டும் மர வியபாரத்தின் மூலகர்த்தாக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே ஆவார். புலிகள் தொடக்கிவைத்த அந்த அரிய பணியைத் தமிழர்கள், கார்த்திகை மாதமென்றால் அது மரநடுகை மாதம் எனப் பிரகடனம் செய்து தமி்ழ் தேசத்தை சூழல்நேயமிக்கதாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர். அரசுடைய இனங்களே கவனமெடுக்காத இதுபோன்ற விடயங்களை, நிழல் அரசொன்றின் இனம் கட்டுக்கோப்புடன் செய்துகொண்டிருப்பதெல்லாம், என்றும் பாராட்டப்படவேண்டிய விடயம். இவையனைத்தையும் அருவுருவமாக நின்று ஆற்றிக்கொண்டிருக்கும் மாவீரர்கள் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.