‘அரசு எமது துறை குறித்து கவனம் செலுத்துவதில்லை’ -அரச வைத்திய கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்

அரசாங்கமானது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஊழியர்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என அரச வைத்திய கால்நடை  வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

அரச வைத்திய கால்நடை  வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கோவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கான முன்னுரிமை பட்டியலில் தாம்  சேர்க்கப்படாமை  தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றினை  இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில்,

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பணிபுரியும் கால்நடை வைத்தியர்கள், கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் உள்ளடங்கிய பணிக்குழாத்தினர் தற்போது நாடு முழுவதும் உள்ள அரச கால்நடை அலுவலகங்கள் மற்றும் அரச கால்நடைப் பண்ணைகள் ஆகியவற்றில் தினசரி, தொடர்ச்சியாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்வதில் கால்நடை வைத்தியர்கள் குழாம் ஆனது நடைமுறையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற முடியவில்லை என்ற போதிலும், விலங்குகளின் ஆரோக்கியம், விலங்கு இனப்பெருக்கம் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து வழங்குவதன் மூலம் மக்களுக்கு அத்தியாவசியமான பால், இறைச்சி மற்றும் முட்டை உற்பட்ட விலங்கு பொருட்களை பற்றாக்குறையின்றி வழங்குவதை உறுதிசெய்கிறோம்.

கால்நடை வைத்திய அதிகாரிகள் உற்பட்ட பணியாளர்கள் பிரதேச செயலர் பிரிவில் உள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய அனைத்து பண்ணைகளுக்கும் பயணம் செய்து சேவைகளை வழங்குகின்றனர். விலங்குகளிற்கு சிகிச்சையளிக்கும் போது அவற்றைக் கட்டுப்படுத்த உரிமையாளர் மற்றும் பிற நபர்களின் உதவி முற்றிலும் அவசியம் என்பதால், அவர்களுக்கும் எங்கள் ஊழியர்களுக்கும் இடையில் ஒரு மீட்டர் தூரத்தை பேணுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

எனவே, கோவிட் தடுப்பில் நேரடியாக ஈடுபடாத, கள கடமையில் உள்ள அதிகாரிகளிடையே கோவிட் தொற்று ஏற்படுபவதற்கு அதிக ஆபத்தை எதிர்கொண்டு எங்கள் ஊழியர்கள் சேவைகளை வழங்குகிறார்கள். இந்த சேவையை வழங்குவதன் விளைவாக . பல அதிகாரிகள் கோவிட்  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவ்வப்போது அறிவிக்கப்பட்டபோதிலும், இதுவரை எங்கள் ஊழியர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தடுப்பூசி போடுவதற்காக வழங்கப்பட்ட முன்னுரிமை பட்டியலில் எங்கள் ஊழியர்கள் கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அதில் சேர்க்கப்படவில்லை என்பதையும் நாங்கள் அதிர்ச்சியுடனும் திகைப்புடனும் சுட்டிக்காட்டுகின்றோம்.

இத்தகைய ஆபத்தான சூழலில், அரசாங்கம் எந்தவொரு சுகாதார உபகரணங்களையும் வழங்கவில்லை என்றாலும், அவற்றை தனிப்பட்ட மட்டத்தில் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த கடினமான நேரத்தில் நாட்டிற்காக நாங்கள் எங்கள் கடமையைச் செய்திருந்தாலும், அரசாங்கமானது மாற்றாள் தாய்பிள்ளை போல ஏன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஊழியர்களிடம் கவனம் செலுத்தவில்லை என்று கேள்வி எழுப்புகின்றோம்.

இந்த விடயத்தில் எங்கள் ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதால், இதுவரை வழங்கப்பட்டு வரும் சேவை பொறிமுறையின் முறிவைத் தவிர்க்க முடியாது. எனவே, எங்கள் திணைக்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி போடக்கூடிய வகையில் தடுப்பூசி போட வழங்கப்பட்ட முன்னுரிமை பட்டியலில்  உடனடியாக திருத்தம் செய்யுமாறு அரசாங்கத்தை  கேட்டுக்காள்கிறோம்” என்றுள்ளது.