அமெரிக்க பிரேரணை: தடுமாறும் இலங்கை! – அகிலன்

அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது. கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. தீர்மானததைக் கைவிடச் செய்வதற்கான இராஜதந்திர காய் நகர்த்தல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் மூலமாகவும், பின்னர் அமெரிக்காவிலுள்ள இலங்கைக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க மூலமாகவும் இலங்கை முன்னெடுத்துள்ள நகர்வுகள் அமெரிக்காவின் தீர்மானத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுகின்றது.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம், இலங்கையைக் குழப்பியமைக்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தப் பிரேரணையானது, “2009 மே 18 ஆம் திகதி இலங்கையில் போர் முடிவடைந்து 12 ஆண்டுகளை அங்கீகரித்து, இழந்த உயிர்களைக் கௌரவித்தல், மற்றும் இலங்கை மக்கள் அனைவருக்கும் செழிப்பான எதிர் காலத்தை உறுதி செய்வதற்காக இலங்கையில் நீடித்த அமைதியான அரசியல் தீர்வை உறுதிப்படுத்துவதற்கான நீதி, பொறுப்புக் கூறல், நல்லிணக்கம், புனரமைப்பு, இழப்பீடு, மறுசீரமைப்புக்கான ஆதரவை வெளிப்படுத்தல்” என்ற தலைப்பிலேயே இந்தத் தீர்மானம் முன்வைக்கப் பட்டிருக்கின்றது.

அமெரிக்காவின் இரண்டு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடைய ஆதரவுடனேயே இந்தப் பிரேரணை முன்வைக்கப் பட்டிருக்கின்றது. இதற்கு அனுசரணை வழங்கியவர்களில் இருவர் அமெரிக்காவின் வெளிவிவகாரக் குழுவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸிலுள்ள ஏழு உறுப்பினர்களுடைய ஆதரவுடன் இந்தப் பிரேரணை, அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவுக்கு இப்போது சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றது. சுமார் 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ள வெளிவிவகாரக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரே, பிரதிநிதிகள் சபையில் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கொழும்பின் சீற்றத்துக்கு காரணமான விடயங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளி வந்திருந்த போதிலும், இலங்கை வெளிவிவகார அமைச்சு இரண்டு வாரங்களுக்கு முன்னரே விழித்துக்கொண்டது. பிரேரணை விவாதத்துக்கு வருவதற்கு முன்னதாக அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான இராஜதந்திரக் காய் நகர்த்தல்களை இலங்கை இப்போது காலம் பிந்திய நிலையில் ஆரம்பித்துள்ளது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய தாயகம் என்பது இந்தப் பிரேரணையில் அங்கீகரிக்கப் பட்டிருப்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் கடும் சீற்றத்துக்குப் பிரதான காரணம்.

ஏழு பக்கங்களைக் கொண்டுள்ள இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்கள் ஜெனீவா பிரேரரைணயின் தொடர்ச்சி போலவே உள்ளது. அதாவது, பொறுப்புக் கூறல் போன்றவற்றை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருக்கின்ற போதிலும், இந்தத் தீர்மானம் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களுடைய சுதந்திரத்துக்காகப் போராடிய ஒரு அமைப்பாக அங்கீகரிப்பது போன்ற வாசகம் காணப்படுகின்றது. “இலங்கையில் அரச படைகளுக்கும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் சுதந்திரப் போராட்ட அமைப்புக்களுக்கும் இடையில்….” என வரும் வாசகம் விடுதலைப் புலிகளுக்கான அங்கீகாரத்தை வழங்குவது போல உள்ளது.

இவை அனைத்தையும் விட முக்கியமாக, வடக்கு கிழக்குப் பகுதிகள் தமிழ் மக்களுடைய பாரம்பரிய தாயகப் பிரதேசம் என்பதை ஏற்றுக் கொள்வதாக அமைந்திருக்கின்றது. 1987 ஆம் ஆண்டின் இலங்கை – இந்திய உடன்படிக்கையிலேயே வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது முதன் முதலாக சர்வதேச ரீதியான ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கமும் அதனை அப்போது ஏற்றுக் கொண்டிருந்தது. அந்த வகையில் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட இப்பிரேரணை வெளியுறவுக் குழுவின் அனுமதியை பெறும் பட்சத்தில் அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக் கொள்ளப்படும்.

இலங்கையின் அவசரமான இராஜதந்திர நகர்வுகள்

இந்தப் பின்னணியிலேயே இலங்கை அரசாங்கம் இப்போது அவசரமாக வோஷிங்டனை நோக்கி காய் நகர்த்தத் தொடங்கியிருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் மூலமாக கடுமையான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அமெரிக்கப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்குப் பதிலளிப்பதை நோக்கமாகக் கொண்டதாக அந்த அறிக்கை அமைந்திருந்தது. குறிப்பாக, விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக சாடுவதுடன், இந்தப் பிரேரணையின் பின்னணியில் விடுதலைப் புலிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க செனட், வெளிவிவகாரக் குழு என்பனவற்றுக்கும் இந்த அறிக்கை அனுப்பப்பட்டது.

இரண்டாவது நகர்வாக அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க மூலமாக மற்றொரு ஆவணம், அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. வெளிவிவகாரக் குழுவே இந்த யோசனை தொடர்பாக ஆராய்ந்து அடுத்த கட்டச் செயற்பாட்டுக்கு வழிவிட வேண்டியதாக இருப்பதால் தான் இலங்கை அரசாங்கம் அதனை இலக்கு வைத்திருக்கின்றது. வெளிவிவகாரக் குழுவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்னதாகவே அதனைக் கைவிடச் செய்வதுதான் இலங்கை அரசாங்கத்தின் திட்டம்.

21 60bb1bc5d224a அமெரிக்க பிரேரணை: தடுமாறும் இலங்கை! - அகிலன்

அதற்காகத் தான் இப்போது ரவிநாத் ஆரியசிங்க களமிறக்கப்பட்டுள்ளார். ரவிநாத் முன்னர் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் பணியாற்றியவர். இலங்கையின் முன்னணி ராஜதந்திரிகளில் ஒருவர். அவரைக் களமிறக்குவதன் மூலமாக அமெரிக்காவைக் கையாள்வதற்கு இலங்கை அரசாங்கம் முற்படுவதாகத் தெரிகின்றது. சனிக்கிழமை அமெரிக்க வெளிவிவகாரக் குழுவிடம் கையளிக்கப்பட்ட ஆவணத்தில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் முன் வைக்கப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் மீது எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டாம் என இலங்கை அவசரக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அமெரிக்கா என்ன செய்யப்போகிறது?

இலங்கையைக் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளக்கூடிய இவ்வாறான பிரேரணை ஒன்றை அமெரிக்கா தற்போதைய நிலையில் கொண்டு வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் செல்வாக்கும், செயற்பாடுகளும் இதன் பின்னணியில் இருந்திருக்கும் என நிச்சயமாக நம்பமுடியும். அமெரிக்காவில் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனைவிட, சீனாவுடனான இலங்கையின் நெருக்கமும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அமெரிக்கா எதிர் பார்த்துக் காத்திருந்திருக்கலாம்.

இந்த நிலையில் பல வாக்குறுதிகளுடன் அமெரிக்காவிடம் இலங்கை இப்போது சென்றிருக்கின்றது. அமெரிக்க காங்கிரஸில் நிறைவேறக் கூடிய ஒரு தீர்மானம், இந்தியாவிலும் சர்வதேச ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை அஞ்சுகின்றது. இந்த அச்சம் நியாயமானது தான். ஜெனீவாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் உட்பட பல விடயங்கள் குறித்தும் இப்போது மீள வாக்குறுதி அளிக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது என்பது உண்மை.

“அமெரிக்காவினுடைய இந்த நிலைப்பாடு தமிழர்களுடைய தாயகக் கோட்பாட்டினை சர்வதேச அரங்கிலே அங்கீகரிப்பதற்கானதும், எம்முடைய இனத்தினுடைய தேசியக் கோரிக்கைகளை படிப்படியாக வெற்றிபெற உதவும் நிலைப்பாடாகவுமே அவதானிக்கிறோம்” என ரெலோவின் பேச்சாளர் அண்மையில் கூறியிருந்தார். மற்றொரு விடயத்தையும் அவர் கூட்டிக் காட்டியிருந்தார்:  “பூகோள சூழல்களை உணர்ந்து அதை எமது மக்களுக்கு சாதகமாக்க தமது பதவிகள், தேர்தல் நோக்கங்கள்,  கட்சி நலன்கள், தற்பெருமை என்பவற்றை கடந்து நாம் இந்தக் கணத்தில் எம் மக்களுக்காக ஒன்றுபட்டு சர்வதேச அரசியல் சூழலை சாதகமாக்க செயல்படத் தவறினால், எந்த நியாயப்படுத்தலுக்கும் அப்பால், பாரிய வரலாற்றுத் துரோகத்தை இழைத்தவர்கள் ஆவோம்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா தன்னுடைய பூகோள நலன்களுக்காகத் தான் காய் நகர்த்துகின்றது. அதில் சந்தேகம் இல்லை. அதில் ஈழத் தமிழர் பிரச்சினை ஒரு பகடைக் காயாக அவர்களுக்கு இருக்கலாம். ஆனால், அதன் பலனை பெற்றுக் கொள்ளக் கூடிய தூர நோக்கும், இராஜதந்திரத் திறனும் எமக்கு இன்றைய தருணத்தில் அவசியம்!

Leave a Reply