இலங்கையின் சமகால அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து மாகாண சபை முறையினை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அரசு தரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன. இது சாத்தியப்படுமிடத்து தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதென தமிழ்த்தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இதேவேளை புதிய அரசியலமைப்பு வரும் வரை மாகாண சபை தொடரும் என்று அரசாங்கத்தின் பிந்திய செய்திகள் வலியுறுத்துகின்றன. இந் நிலையில் மாகாண சபை முறையின் ஊடாக மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் பல்வேறு நன்மைகளையும் பெற்றுக் கொண்டுள்ள நிலையில், மாகாண சபை முறை இல்லாதொழிக்கப்படும் பட்சத்தில் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் அபிவிருத்தி கேள்விக்குறியாகுமென்றும் புத்தி ஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1978 ம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பு முன்வைக்கப்பட்டது. சமகாலத்தில் நடைமுறையில் உள்ள இந்த யாப்பு பல்வேறு குளறுபடிகளுக்கும் வித்திட்டுள்ள நிலையில் நாட்டு மக்களின் நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது. அத்துடன் இந்த யாப்பில் இருபதுக்கும் அதிகமான திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளமையானது புதிய அரசியல் யாப்பின் அவசியத்தை வேண்டி நிற்கின்றது.
1987 இந்திய – இலங்கை உடன்படிக்கையின் ஊடாக அதிகாரப்பரவலுக்கான அடிப்படையாக அரசியலமைப்புக்கு 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் முன்வைக்கப்பட்டு மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என் றும் தெரிவிக்கப்பட்டது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட பல கட்சிகள் ஆரம்பம் முதலே இதனை எதிர்த்து வந்தன. பிரதான தரப்பான விடுதலைப் புலிகளும் இணக்கப்பாடற்ற தன்மையையே வெளிப் படுத்தினர். 2008 ம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில், ஜே.வி.பி. யின் முயற்சியால் உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றின் மூலம் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதும் தெரிந்ததேயாகும்.
பாரதப் பிரதமர் மன்மோகன்
13 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு மையப் படுத்தப்பட்ட ஆட்சியில் அதிகாரப் பகிர்வு அம்சம் சேர்க்கப்பட்டபோது ,பரஸ்பர விரோதத் தன்மையொன்று காணப்பட்டபோதும் இலங்கை அரசியலுக்கு அது ஒரு புதிய அனுபவமாக காணப்பட்டது என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும். ஆட்சியில் அதிகாரப்பரவலுக்கான அடிப்படையாக 13ஆவது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டபோதும், இந்தியாவினால் வற்புறுத்தியே 13 ஆவது திருத்தம் திணிக்கப் பட்டதாக இனவாதிகள் தொடர்ச்சியாக கண்ட னக் குரலெழுப்பி வந்தனர்.
இலங்கையில் நடை முறைப்படுத்தப் படவேண்டிய சட்டங்கள் பிறிதொரு நாட்டினால் தீர்மானிக்கப்படுவது ஏற்புடையதல்ல என்றும் இவர்கள் தெரிவித்தனர். எனினும் 13 ஆவது திருத்தத்தை இந்தியா, இலங்கை மீது பலவந்தமாக திணித்தது என்ற கருத்து பிழையானதாகுமென்று புத்திஜீவிகள் சிலரும் வலியுறுத்தி இருந்தனர். மேலும் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் அதிகாரப்பகிர்வு பிரச்சினைக்குத் தீர்வு காண் பதற்காக இந்தியா ஈடுபட்ட வேளையில் உண்மையிலேயே 13 ஆவது திருத்தச் சட்ட வரைபு ஜே.ஆர்.ஜயவர்த்தன நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் புத்திஜீவிகள் மேலும் வலியுறுத்தி இருந்தனர்.
13 ஆவது திருத்தச் சட்டம் முன்வைக் கப்பட்டு சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாகி யுள்ள நிலையில் அக்கால சூழ்நிலைக்கு அது ஏற்புடையதாக இருந்தது. எனினும் இன்றைய சூழ்நிலைக்கு அது பொருத்தமானதாக இல்லை.எனவே 13 ஐயும் விஞ்சிய தீர்வு தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்பதும் சிலரின் கருத்தாக இருந்தது. இதனிடையே 2008 ம் ஆண்டில் சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த அப் போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றும், 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான தீர்வொன்று குறித்து பரிசீலிக்க வேண்டுமெனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனான சந்திப்பின் போது வலியுறுத்தி இருந்ததாகவும் அரச வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டது. இதற்கு மஹிந்த சாதகமான பதிலை வழங்கி இருந்ததாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. எனி னும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கமைய ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களையே முழுமையாக அமுல்படுத்த பின்னடிக்கும் அரசாங்கம், 13 இலும் விஞ்சிய தீர்வு தொடர்பில் வாக்குறுதி வழங்குவது போலியான வெளிப்பாடே என்றும் பலர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தமையும் நோக்கத்தக்கதாகும்.
இலங்கையில் மாகாண சபை அறிமுகப் படுத்தப்பட்டமை ஒரு முக்கிய அம்சமாகும். என்றபோதும் அது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என்ற வலுவான குற்றச் சாட்டுமுள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதி காரங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைகளுக்கு பகிரப்படாத நிலையில் பகிரப்பட்ட அதிகாரங்கள் கூட. பாரியளவிலான காணிச் சுவீகரிப்பு தொடக்கம் நகர மற்றும் கிராமிய திட்டமிடல் சட்டம் (Town and Country Planning Act) திவிநெகும வரையான செயற்பாடுகளினூடே படிப்படியாக குறைக்கப்படுவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார் கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து. மாகாண சபைகள் வெள்ளை யானையாகும் என்றவொரு கருத்தும் இருந்து வருகின்றது.
எவ்வித பலனும் இல்லை
மாகாண சபைகள் தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இருந்து வரும் நிலையில், இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியல மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறை மையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். சுமார் 37 வருட காலமாக நடைமுறையிலுள்ள மாகாண சபை முறைமையால் நாட்டுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இது வரையில் கிடைக்கவில்லை. மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளைத் தோற்று விக்கும் நிலைமையே காணப்படுகின் றது. எனவே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் மாகாண சபை முறையை நீக்கக் கூடாதென்ற கருத்துக்களும் வலுப்பெற்று வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப்பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப் படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மாகாண சபை முறை மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. உரிமை சார்ந்த விடயங்கள் என்பதைக் காட்டிலும் அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கு ஒரு உந்துசக்தியாக மாகாண சபை முறை அமைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த வகையில் குறிப்பாக மலையக மக்களைப் பொறுத்தவரையில் அவர் களின் அபிவிருத்திக்கு சற்று அதிகமாகவே இம் முறை வாய்ப்பளித்திருப்பதாக பேராதனைப் பல் கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா. ரமேஷ் குறிப்பிடுகின்றார்.
பௌதிகவள தேவைப்பாடு
மலையக சமூகம் கல்விமையச் சமூகமாக மேலெழும்ப வேண்டிய ஒரு தேவைப்பாடு காணப்படுகின்றது. இதன் மூலம் இச்சமூகத்தின் பல்வேறு கனவுகளும் நனவாகும் வாய்ப்புள்ளது என்பதோடு தேசிய நீரோட்டத்தில் இம்மக்கள் துரிதமாக இணைந்து கொள்வதற்கும் அது வலுசேர்ப்பதாக அமையும். இந்த வகையில் மாகாண சபை முறையின் ஊடாக மலையக பாடசாலைகள் புதுமெருகு பெற்றன என்பதே உண்மையாகும். ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் எம்மவர்கள் கல்வியமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் இது பல சாதக விளைவுகளுக்கும் அடித்தளமிட்டது. பாடசா லைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஆசிரியர் நியமனங்கள் அவ்வப்போது பெற்றுக் கொடுக்கப்பட்டன. பாடசாலைகளின் பௌதிகவள தேவைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டு கல்வி மேம்பாட்டிற்கு அடித்தளமிடப்பட்டது. பாடசாலைகளுக்குத் தேவை யான கற்பித்தல் உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதிலும்,ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதிலும் மாகாண அமைச்சுக்கள் முன்நின்றன. இத்தகைய செயற்பாடுகளால் மலையகத்தின் கல்விப் பெறு பேறுகள் கணிசமாக அதிகரித்தன.
மாகாண மட்டத்தில் இடம்பெற்ற சாகித்திய விழாக்கள் மலையக மக்களின் கலை கலாசார பாரம்பரியங்களை பேணுவதற்கு அத்திவாரமிட்டன. இலைமறை காயாக இருந்த கலைஞர்கள் பலர் வெளிக்கொணரப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும். கலைகள் நீடித்து வாழ்வதற்கு மாகாண சபைகள் கணிசமான பங்காற்றி இருந்தன. உட்கட்டமைப்பு வசதிகளில் மலை யகத்தில் முன்னேற்றத்தைக் காண முடிந்தது. வைத்தியசாலைகளும் ஓரளவு அபிவிருத்தி கண்டதுடன் வேலை வாய்ப்புகளும் கிடைத்தன. சிற்றூழியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்டப்புறங்களின் ஆலய அபிவிருத்திக்கு மாகாண சபைகள் பங்களிப்பு செய்தன. மலையக சமூகத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினர். மலையக அபிவிருத்திக்கு இதுவும் வாய்ப்பாக அமைந்தது.
இடர்களைக் களைதல்மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து காணப்படுகின்ற நிலையில் மாகாண அரசின் அதிகாரங்களில் போதாத்தன்மை காணப்படுகின் றது. இந்நிலையில் 13 ஆவது திருத்தத்திற்கேற்ப பூரணமான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும். அத்தோடு போதுமான நிதியினை மாகாண சபைகள் பெற்றுக் கொள்வதிலும் இடர்பாடு காணப்படுகின்றது. இந்த இடர்பாடுகள் களையப்பட்டு போதுமான நிதி மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடுகள் மாகாண சபைகளை சக்திப் படுத்துவதாக அமையும். இதேவேளை தேசிய அரசின் வேலைத்திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையும் வாய்ப்பு குறைவாகவுள்ளது. இந்நிலையில் மாகாண சபைகள் மிகவும் அவசியமாக தேவைப்படும் நிலையில் மக்கள் மாகாண சபைகளின் ஊடாக நன்மைகள் பலவற்றையும் பெற்றுக் கொள்ளவும் வழியேற்படும்.
இதனிடையே இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாண சபை முறைமையானது புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் வரை செயற்பாட்டில் இருக்குமென்றும், தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியலமைப்பு 3 ஆண்டுகளுக்குள் மக்கள் அனுமதிக்காக முன்வைக்கப்படும் என்றும் அரசாங்கம் குறிப் பிட்டுள்ளது. எவ்வாறெனினும் மாகாண சபை முறை இல்லாதொழிக்கப்படாது ,இம் முறைக்கு வலுசேர்க்கப்பட்டு அதனூடாக மலையக மக்கள் பல்வேறு நன்மைகளையும் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பாகும்.