அனைத்து இனங்களின் உரிமைகளையும் புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் – பவ்ரல்

344 Views

புதிய அரசமைப்பைத் தயாரிக்கும்போது அனைத்து இனங்களின் உரிமைகளையும் உறுதி செய்யும் வகையில் தயாரிப்பது அவசியம் என்று பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வலியுறுத்தியிருக்கிறார்.

புதிய அரசமைப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட ஆணைக்குழுவின் செயலாளருக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியவை வருமாறு:

“அண்மைக்காலத்தில் புதிய அரசமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த 42 வருடகாலத்தில் 20 தடவைகள் திருத்தம் செய்யப்பட்ட அரசமைப்பிற்குப் பதிலாக அனைவருக்கும் பொருத்தமானதும் நீண்டகால நோக்கிலானதுமான புதிய அரசமைப்பை தயாரிப்பது அவசியம் என்பதே எமது அபிப்பிராயம்.

அதற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போதைய அரசாங்கம் விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்தமை வரவேற்கத்தக்கது. எனினும், அதன் செயல்பாடுகள் தொடர்பில் சில கருத்துகளை முன்வைக்க விரும்புகின்றோம்.

இதன்படி புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாஷைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்னைகளுக்கு; தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியம்.

இதேபோன்று இலங்கை இன ரீதியான இளைஞர் எழுச்சியையும் சுமார் மூன்று தசாப்த கால போரை எதிர்கொண்ட நாடாகும். எனவே, எதிர்காலத்தில் அவ்வாறான பிரச்னைகள் ஏற்படாதவாறு, அனைத்து இனங்களின் உரிமைகளையும் உறுதிசெய்யும் வகையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட வேண்டும்.

அனைத்து தரப்பினரதும் வெவ்வேறு அபிப்பிராயங்களையும் விசேட ஆணைக்குழு கருத்திலெடுத்துச் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply