அனைத்துலக சமூகம் இலங்கையை நீதியின் முன் நிறுத்த ஏன் தயங்குகின்றன?

சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினம் கடந்த புதன்கிழமை (30) அனுஸ்டிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு வடகிழக்கில் கவனஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பில் கவனஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

‘சர்வதேச நீதிப்பொறிமுறையில் எங்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடு’ என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் ஏற்பட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

வடகிழக்கு இணைந்ததாக வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் போராட்டம் இன்றைய தினம் மட்;டக்களப்பிலும் மன்னாரிலும் இடம்பெற்றது.

இதன் கீழ் மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டத்தில் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து பேரணியானது ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபி வரையில் சென்றது.

அங்கு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிய கொடவின் மனைவி சந்தியா எக்னலிய கொட தலைமையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் ஒளியேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கு நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சர்வதேச நீதிகோரிய பல்வேறு பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.Disappier 2 அனைத்துலக சமூகம் இலங்கையை நீதியின் முன் நிறுத்த ஏன் தயங்குகின்றன?இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக அமைப்புகள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் இறுதியில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட  உறவினர் சங்கத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டதை தொடர்ந்து அதனை ஐக்கிய நாடுகள் சபை உட்பட தூதரகங்களுக்கு அனுப்பிவைக்க கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

உலகிலே அதிகூடிய மனிதர்களை காணாமல் ஆக்கிய நாடுகளின் பட்டியலில் இரண்டாவதாக உள்ள நாட்டிலே வாழ்ந்து கொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக 2383 நாட்களாகப் போராடும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாங்கள் இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டி நீதி கேட்கிறோம்.

நீதியை அடைவதற்கு, சுதந்திரமான சர்வதேச பொறுப்புக்கூறல் செயல்முறை மட்டுமே போதுமானது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்துவதன் மூலமே நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையும் , முந்தைய மனித உரிமைகள் ஆணையாளர்கள், சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு உட்பட பல ஐ.நா அதிகாரிகளால் வழிமொழியபட்டதையும் இதில் சுட்டி காட்ட விரும்புகின்றோம்.

ரோம் சாசனத்தில் கைச்சாத்திடாத வடகொரியா, சிரியா, ரஷ்யா, மியன்மார் போன்ற நாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி தேட வழிமுறைகளை கண்டறிய முடிந்த சர்வதேச சமூகத்தினால் சிறிய நாடான சிறிலங்காவை நீதியின் முன் நிறுத்த பின்னாடிப்பதின் காரணத்தை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அத்துடன் சிறிலங்காவின் பொருளாதார நிலையை சீர்படுத்த முயலும் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் மீண்டும் ஒரு மனித பேரழிவு, இனவழிப்பு இந்த மண்ணில் நிகழாமையை உறுதிசெய்ய வேண்டும். சிறிலங்கா அரசு ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுவதை முன் நிபந்தனையாக முன்வைக்க வேண்டும்.

சிறிலங்கா அரசுக்கு அவகாசம் கொடுத்து காலத்தை இழுத்தடித்ததன் மூலம் 180 இற்கும் மேற்பட்ட பெற்றோரை இழந்து “கண்கண்ட நேரடியான சாட்சிகள் 180 பேர்”அழிந்தது தான் மிச்சம்.

உள்ளக பொறிமுறையை எங்கள் மீது திணித்து கால இழுத்தடிப்புக்கு துணை போவதன் மூலம் மிகுதியுள்ள நேரடிசாட்சிகளான எங்களையும் இறக்க விட்டு சாட்சிகள் அழிவதற்கு துணை போகாமல் எங்களின் கோரிக்கையான சர்வதேச விசாரனை ஒன்றின் மூலம் ரிஆர்சி க்கு அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் எங்களுக்கு விரைவான நீதியை பெற்றுத்தர சர்வதேசமும் ,ஐ.நா வும் முன்வரவேண்டும் என வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.