அனைத்துலகத்தை தொடர்ந்து ஏமாற்ற முடியாத நிலையில் இலங்கை

பொறுப்புக்கூறல் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பேணுதல் உட்பட பல்வேறு ஜனநாயக மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்து அனைத்துலக சமூகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றிவரும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குவும், அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகளும், இந்தியாவும் தற்போது இலங்கை மீதான தமது அழுத்தங்களை அதிகரிப்பதை அவர்கள் கடந்த இரு வாரங்களில் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

தமிழ் மக்களின் தேவைகள் தொடர்பில் இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதல்ல என்பதுடன், இலங்கை அரசு தான் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான இந்திய பிரதிநிதி இந்திரா மணி கடந்த செவ்வாய்க்கிழமை (12) ஜெனீவாவில்  தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் அவதானித்து வருகின்றோம். ஆனால் இலங்கையின் நடவடிக்கைகள் போதுமானதல்ல. இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி எல்லா இன மக்களும் சுதந்திரமாகவும், அடிப்படை உரிமைகளுடனும் வாழ வழிஏற்படுத்த வேண்டும்.

இலங்கை அரசு 13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதுடன், மாகாணசபை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கை இலங்கை தொடர்பில் மிகவும் காத்திரமாக வெளிவந்துள்ளதுடன். இலங்கை மீதான நடவடிக்கைக்கு அது உறுப்பு நாடுகளின் ஆதரவுகளை கோரியுள்ள அதேசமயம் இந்தியாவின் அறிக்கையும் காத்திரமாக வெளிவந்துள்ளது.

இதனிடையே, நீதியை நிலைநாட்டுவதற்கும் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இலங்கைக்கு தற்போதும் காலம் உள்ளது. இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என இணைத்தலைமை நாடுகள் சார்பில் அறிக்கை வெளியிட்ட பிரித்தானியா கடந்த திங்கட்கிழமை (11) தெரிவித்துள்ளது.

கனடா, வட மசடோனியா, மலாவி, மொன்ரோநீக்ரோ, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைத்தலைமை நாடுகளின் குழுவில் உள்ளன.

காணி விவகாரம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க முயற்சித்துள்ளது. இந்த முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் தொடர்ந்தும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் உள்ளன. அதனை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துலக தராதரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையை விட இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் காத்திரமாக வெளிவந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கைக்கு உதவி வழங்கும் ஐக்கிநாடுகள் சபை அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகள் மற்றும் இனநல்லிணக்கப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு இனநல்லிணக்கப்பாடுகள் மற்றும்உண்மைகளை கண்டறிதல் செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மாகாணசபைகளை வலுப்படுத்தி 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இலங்கை அரசு தொடர்புகளை பேணவேண்டும். தீர்மானம் 51/1 பிரகாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு நிலமைகளை கண்காணிக்க ஐ.நாவுக்கு அனுமதி வழக்கப்படவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அனைத்துலக தரத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டும். என்பன அதில் உள்ள முக்கிய கேரிக்கைகள் ஆகும்.

அதாவது மனித உரிமை மீறல்கள் அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மூலம் ஐ.நா இலங்கைக்குள் உள்நுளைவதற்கான சாத்தியங்களை தேடுவதாகவே இந்த அறிக்கைகளை பார்க்க முடியும்.

மேற்குலகத்தின் இந்த நகர்வை அறிந்த இந்தியா தற்போது தனது அழுத்தத்தை அதிகரிக்க முற்பட்டுவருவதை தான் அதன் அறிக்கை காட்டுகின்றது.

அதாவது அனைத்துலக சமூகத்தை தொடர்ந்து ஏமாற்ற முடியாத ஒரு நிலைக்கு இலங்கை மெல்ல மெல்ல தள்ளப்படுவதை உணரமுடிகின்றது.