அதி தீவிர புயலாக வலுப்பெறும் ‘நிவர் புயல்’ எதிர் கொள்ளத் தயாராகும் தமிழகம்

நிவர் புயல்  இன்று பிற்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்  என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில், புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 – 130 கி.மீ. வேகத்திலும் சில சமயங்களில் 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு ‘நிவர்’ என ஈரான் பெயரிட்டுள்ளது. இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என தாய்லாந்து பெயரிடப்பட்டது.

நிவர் புயல் கரையைக் கடப்பதால்,  தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.