சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழல் அற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவம் அவசியம்

68

இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழல் அற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவமே இன்று அவசியம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணிதலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் இன்று ஞாயிறுக்கிழமை மாலை நடைபெற்ற இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த நீதியரசர்  வடக்கு- கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் தனது தலைமையிலான கூட்டணியை அமோக வெற்றியடை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

விக்னேஸ்வரன் தனதுரையில்;

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் இம்முறை தேர்தல் இரண்டு  வகைகளில் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது. முதலாவதாக, வரலாற்றுப் பட்டறிவுகளின் அடிப்படையிலும் சமகால உலக நடைமுறைகளின் அடிப்படையிலும் தமிழ் மக்கள் தமக்கான இறுதி தீர்வு தொடர்பில் தீர்க்கமான ஒரு செய்தியினை வெளிப்படுத்தும் தேர்தலாக இம்முறை தேர்தல் அமைகின்றது.

சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தாம் விரும்பும் தீர்வை ஏற்படுத்த ஆவண செய்யுமாறு சர்வதேச சமூகத்துக்கு ஒரு தீர்க்கமான ஒரு செய்தியினை சொல்லுவதற்கு எமது மக்கள் தயாராகிவருகிறார்கள். இலங்கையின் இன முரண்பாட்டு வட்டத்தில் இது ஒரு முக்கிய பரிமாணமாக மிளிர்ந்துள்ளது.

எமது மக்களின் இந்த செய்தி,  எமது பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் காலத்தில் இந்தியா, ஐ. நா மற்றும் சர்வதேச சமூகத்தின் நகர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது எமது நம்பிக்கை.இரண்டாவதாக, தமிழ் அரசியல் செயற்பாடுகளில் ஒரு ஆரோக்கியமான பரிமாணத்தை ஏற்படுத்தும் தேர்தலாகவும்  இம்முறை தேர்தல் அமைந்துள்ளது.

கடந்த காலங்களை போல அல்லாமல் வெறுமனே ஒற்றுமை என்ற கோஷத்தின் அடிப்படையில் எமது மக்களை குருட்டுத்தனமாக (தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு) வாக்களிக்க செய்த நிலைமையில் இருந்து அரசியல் கருத்து வினைப்பாட்டு செயன்முறையின் ஊடாக தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவுசெய்வதற்கு இம்முறை தேர்தல் வழிவகுத்திருக்கிறது.

கட்சிகளின் கொள்கைகள், கோட்பாடுகள், அணுகுமுறைகள், பட்டறிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத அறிவு ரீதியான, அனுபவ ரீதியான  கலந்துரையாடல் அல்லது கருத்து  வினைப்பாட்டை உருவாக்கி அதன்  அடிப்படையில் நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து எமது மக்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கு இம்முறை தேர்தல்  வழிவகுத்துள்ளது.

இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு, சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழல் அற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவம்  மிக அவசியம். இதுவரை காலமும் நாம் இவற்றில் கவனம் செலுத்தவில்லை என்றபோதிலும் , இனிமேலாவது இத்தகைய வழிகளில் எமது அரசியலை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.

எனது வாழ் நாளின் பெரும்பகுதியில் நீதிமன்றங்களின் ஊடாக நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக ஒரு தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றேன். நீங்கள் வழங்கும் இந்த தீர்ப்பு  ஒரு நல்ல மாற்றத்துக்கான திறவுகோலாக இருக்கும் என்பதிலும் முழு உலகத்தையும் உங்களை நோக்கி திரும்ப வைக்கும் என்பதிலும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது என்றார்.