நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரின் தாயார் சென்றை உயர் நீதிமன்றில் மனு

வேலூர் சிறையிலுள்ள தனது மகள் நளினியை சென்று சந்திப்பது சிரமமாக இருப்பதால், அவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யுமாறு அவரின் 80 வயதான தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கடந்த 29 வருடங்களாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வரும் நளினியை அவரது தாயார் பத்மா வேலூர் சென்று சிறையில் சந்தித்து வருகின்றார்.

இதேவேளை நளினியை வேலூர் சிறையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில், தனக்கு 80 வயதாகின்றது என்றும் தன் மகளை வேலூர் சென்று பார்த்து வருவது சிரமமாக இருப்பதாகக்கூறி, சிறைத்துறையிடம் கடந்த மாதம் மனு அளித்ததாகவும், இதுவரை அந்த மனு பரிசீலிக்கப்படாமல் இருப்பதாககூம் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசும், சிறைத்துறையும் ஓகஸ்ட் 24ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.