கனடாவில் தமிழ் பாரம்பரிய முத்திரை வெளியீடு

கனடாவில் “Quebec” என்ற பிரெஞ்சு பேசப்பட்டு வரும் கிழக்கு மாகாணத்தில் “தமிழ் பாரம்பரிய மாத முத்திரை 2020” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் மேலோங்கித் தெரிகின்றது. அதாவது மொழி, இலக்கியம், உணவு, கலை, கட்டிடக்கலை மற்றும் மீள்தன்மையையும் இம்முத்திரை காண்பிக்கின்றது.

இந்த முத்திரை தமிழர்களின் விடாமுயற்சியை அடையாளங்கண்டு கனடாவால் தமிழர்களிற்கென ஒரு சின்னமாக வழங்கப்படுகின்றது. தமிழர் வாழும் தேசங்களில் பல நன்மைகளைத்தரும் பனைமரத்தை இந்த முத்திரையின் நடுவில் காணலாம். இப்பனையின் வேர்ப்பகுதியில் தமிழர்களின் வம்சாவளியினரான சேர, சோழ, பாண்டியரின் அடையாளம் வரையப்பட்டுள்ளது. பனையின் விதைகளாகவும், பனம்பழமாகவும் கலை, கட்டிடக்கலை, இலக்கியம் மற்றும் விலை மதிப்பற்ற தமிழர் பண்பாட்டைக்கூறும் சிறிய சின்னங்கள் ஓவியமாக இம்முத்திரையில் உள்ளன.