இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றி பரிசீலிக்கப்படும் அமித்ஷா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, ஈழத் தமிழர்களின் குடியுரிமை பற்றி பேசியதாகவும், அதற்கு ஈழத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும் என்று அமித்ஷா கூறியதாக, இந்திய நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் டில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற காந்தியின் பிறந்ததின விழாவின் போது, அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அந்நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அந்நிகழ்வின் பின்னர் அமித்ஷாவை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசிய தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, “இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்த தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்“ என அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

பழனிச்சாமியின் அதிமுக கட்சியினர், லோக்சபாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். தற்போது உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இவர்கள் ஆதரவாக வாக்களித்ததை வைத்து எதிர்க்கட்சியான திமுக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. எனவே அதைச் சரிசெய்வதற்காகவே இப்படியான ஒரு செய்தியை அதிமுக வெளியிட்டிருக்கலாம் என நம்பத் தோன்றுகின்றது.

Attachments area