இடர் வலயம் தவிர்ந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களிலும், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் சில காவற்துறை பிரிவுகள் தவிர்ந்த பகுதிகள் உட்பட ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 மணியுடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனையடுத்து மீள் அறிவித்தல் வரை அந்த மாவட்டங்களில் நாளாந்தம் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட, அக்குரணை ஆகிய பகுதிகளிலும், கேகாலை மாவட்டத்தின் வரகாபொலயிலும், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியிலும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

அந்த மாவட்டங்களில் உள்ள ஏனைய காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம், இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதுடன் இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில காவல்துறை பிரிவுகள் தவிர்ந்த ஏனைய காவல்துறை பிரிவுகளில், எதிர்வரும்; 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் கொஹ_வளை காவல்துறை பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

குறித்த காவல்துறை பிரிவுகள் தவிர்ந்த கொழும்பின் ஏனைய பகுதிகளில் எதிர்வரும்; 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், மாரவில மற்றும் வென்னப்புவ காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்கு உள்ளான பிரதேசமாக இனம்காணப்பட்டால் அந்த பிரதேசத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது.

ஏதேனும் ஓரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால், எவரும் அங்கு உற்பிரவேசிப்பது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்படும்.

ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் காவல்துறை பிரிவுகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக பிரதான வீதிகளினூடாக பயணம் செய்யமுடியும்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் பிரதான வீதிகளை தொழிலுக்காக சென்று வருதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.

மாவட்டங்களுக்கிடையிலான பயணம் தொழில் தேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீண்ட நாள் அமுலில் இருந்து இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கார நிலையங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே அதன் உரிமையாளர் கொரோனா பரவும் அபாயத்தினை தவிர்ப்பதற்கான உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆளுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர.;

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.