பாரிசில் ‘பனைமரக்காடு’ தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர் கேசவராஜனின் படைப்பு

தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் கலைஞரான திரு. கேசவராஜன் அவர்கள் நேற்று 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அவர் யுத்தத்தின் பின்னர் தயாரித்த பனைமரக்காடு படம் திரையிட்டதோடு மக்களுடனான சந்திப்பையும் மேற்கொண்டார்.

பிரான்சு LIFT லிப்ற் என்ற ஈழத்தமிழர் திரைப்படச் சங்கத்தின் ஆதரவிலும் ஏற்பாட்டிலும் இத்திரைப்படம் பொபினி என்னும் பிரதேசத்தில் திரையிடப்பட்டது. சரியாக 3.40 மணிக்கு அமைதி வணக்கத்துடன் திரு. கேசவராஜன் அவர்களின் அறிமுக உரையுடன் திரைப்படம் திரையிடல் செய்யப்பட்டது.

2.20 மணி நேரம் திரையிடப்பட்ட படத்தில் தாயகத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எவ்வாறு வாழ்ந்தோம், அநுபவித்த துன்பங்கள், எம்மோடு கூடவே வளர்ந்து வந்த வரட்டுக்கௌரவம், தமிழர்கள் நாம் என்ன குணம்கொண்டவர்கள் என்பதையும் தமிழ் குமுகாயத்தின் நிலைப்பாட்டை தனது திரைப்படத்தில் ஆழமாகக் காட்டியிருந்தார்.

தொழில்நுட்ப வசதிகள் பெரிதாக இல்லாத நிலையிலும் செய்யப்பட்ட ஒளிஒலி பரப்பு, இசை , இடம், தெரிவு செய்யப்பட்ட இடங்கள், எல்லாம் பாராட்டுக்களுக்கு உரியவையோடு எமது தாயகத்தின் பேச்சுவழக்கை அப்படியே தத்ரரூபமாகக் கொண்டு வந்திருப்பதானது படத்தின் முத்தாய்ப்பாய் அமைந்திருந்தமை மிகுந்த வெற்றியும் பாராட்டுக்குமுரியது.

இன்றைய திரையிடலில் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் கலந்து கொண்டனர். படத்தில் காட்டப்பட்ட விடயம் நீண்டகாலமாக புலத்தில் வாழும் தமிழ் உணர்வாளர்களின் கேள்வியாக அமைந்திருந்தது. எல்லாவற்றிற்கும் திரு. கேசவராஜன் அவர்கள் பதில் தந்ததோடு புலத்தில் நின்று எம்மவர்கள் பார்க்கும் கோணத்திற்கு ஏற்றவாறு சில கட்டங்கள் இருக்கவில்லை என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கான காரணத்தையும் தெரிவித்திருந்தார்.

அது புலத்தில் வாழும் மக்களின் மனதை நெகிழவைத்திருப்பதையும் அதற்கு ஒரு மாற்றுக்கருத்தையும் விளக்கமாக தெரிவித்திருக்கலாம் என்பதை தான் இப்போது உணர்வதாகவும் கூறியிருந்தார்.

திரு.கேசவராஜன் அவர்கள் கடந்த காலங்களில் தாயகத்தில் தயாரித்த திரைப்படங்கள் மக்களையும், தேசியத் தலைவரினதும் பாராட்டுதல்களைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர் அற்புத மூத்த கலைஞன் இன்று பொருளாதார சுமையினால் அற்புதமான படைப்புக்கள் வெளிவராமல் முடங்கிப் போய்விடுவது வேதனைக்குரியதே. புலம் பெயர்ந்து வாழும் பல கலைஞர் வாழாதிருப்பதும் ஒரு தமிழின அழிப்பிற்கு துணைபோகின்ற நிலைப்பாடே என்று உணரக்கூடியதாக இருந்தது. அவரின் பொருளாதாரச் சுமைகளை ஈடுசெய்வதால் புலத்தில் மக்கள் எதிர்பார்க்கின்ற உண்மைப் படைப்புக்களை இவர் மூலம் கொண்டு வரலாம் அதற்கு தமிழ்மக்கள் அதிகமாக வாழும் நாட்டில் உள்ள உணர்வாளர் கைகொடுக்க வேண்டும்.

இதற்கு முன்னுதாரணமாக பாரிசில் வாழும் கலைஞர்கள் அவரின் திரைப்படத்திற்கான பொருளாதாரச் சுமையை ஈடுசெய்வதாக வாக்களித்திருந்தனர். பல நண்பர்கள், அவருடன் பணியாற்றியவர்கள் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கியிருந்தனர். அவரின் நண்பர்கள் சார்பாகவும் ஊரவர்கள் சார்பாகவும் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது.

நிகழ்வை காத்திரமாக்கி சிறப்பாக்கி அறிவிப்பை திரு. யஸ்ரின் அவர்கள் செய்திருந்தார். இன்றைய நாளில் பாரிசின் கலைக்குடும்பம், கட்டமைப்புகள் என பல கலந்து கொண்டமை ஒரு நிறைவைத் தந்திருந்தது. கண்ணாலும் , காதாலும் கொண்டு செல்லும் எந்த விடயமும் மக்களின் மனதை இலகுவாக சென்றடைந்து விடும் அதனால்தான் என்னவோ இன்று பல தொழில்நுட்பங்கள் தோன்றி வெற்றியும் பெற்றிருக்கின்றன.

லிப்ற் என்பது ஏற்றுவதும் இறக்குவதும் என்ற பணியை செய்து வருமோர் செயற்பாடாகும். மக்களின் மனதில் திரையின் ஊடாக ஓய்வில்லாத பணியை லிப்ற் LIFT என்ற அமைப்பு ஆற்ற வேண்டும் என்பதே அனைவரின் பெரு விருப்பாக உள்ளது. அதனை அவர்கள் செய்வார்களா ? செய்ய வேண்டும். உருவாக்கம் கண்டு ஒன்பது ஆண்டுகள் எட்டிவிட்டது. எமது கலைஞர்களின் கலைத்தாகம், விலைபோகாத கலைப்படைப்புக்கள் எம்மவர்களை மட்டுமல்ல நாம் வாழும் நாட்டு மக்களையும், வெளிநாட்டு மக்களையும் உள்வாங்கிச் செல்ல வேண்டும். எமது பேரவா நிறைவேற வேண்டும். அது புலம் பெயர் மக்களின் நம்பிக்கை விரும்பமும் கூட.

நன்றி – அரவிந்தன்