காணாமல்போன கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் சடலமாக மீட்பு

79

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையகத்தை சேர்ந்த மருத்துவ பீட மாணவன் நான்கு நாள்களின் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவனின் சடலம் வவுணதீவுப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் நேற்றுச் செவ்வாய்கிழமை மீட்கப்பட்டது. மாணவனைக் காணவில்லை என்று அக்கரப்பத்தன பொலிஸ் நிலையத்தில் கடந்த 10 ஆம் திகதி இரவு முறைப்பாடு செய்யப்பட்டது.

அக்கரப்பத்தனை ஹோல்புறுக் பகுதியைச் சேர்ந்த, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் சின்னதம்பி மோகன்ராஜ் (வயது 21) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் வருடம் கல்வி பயின்றுக்கொண்டிருந்த அவர் கடந்த 10 திகதி கோயிலுக்குச் செல்வதாகச் சக நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு விடுதியிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இரவு 10 மணி வரை அவர் வராததன் காரணமாக அவருடைய நண்பர் ஒருவர் மாணவனின் தாய்க்கு அழைப்பை ஏற்படுத்தி மோகன் ராஜிக்கு வேறு தொலைபேசி இலக்கம் ஏதும் உள்ளதா என வினவியுள்ளார். அதனை தொடர்ந்து சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் குறித்த மாணவனின் தொலை பேசிக்கு பல தடைவைகள் அழைப்பு விடுத்த போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையிலேயே அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10 ஆம் திகதி இரவு முறைப்பாடு செய்யப்பட்டது.