‘’கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்‘’ வரலாற்று நூல் வெளியீடு

‘கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’ எனற வரலாற்று நூல் 13.10.2019 அன்று காலை திருகோணமலையில் வெளியிடப்பட்டது.நிகழ்வில் மண்ணின் மீது பற்றுக்கொண்ட கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், இளையவர்கள், உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் என அநேகர் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

கவனிப்பாரற்கு; கிடந்த கன்னியாவில் பூசை வழிபாட்டை ஆரம்பித்த தென்கைலை ஆதீனத்திற்கு இராவண சேனை இந்த நூலை சமர்ப்பணம் செய்தது. அந்தவகையில் சுகவீனம் காரணமாக அகத்தியர் அடிகளாரால் வருகை தரமுடியாமையினால் இளை சுவாமி திருமூல தம்பிரான் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.

கன்னியா விடயத்திலும், தற்போதயை கன்னியா வழக்கிலும் ஈடுபட்டக்கொண்டிருக்கும் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினரும் சனாதிபதி சட்டத்தாணியும் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கன்னியா பற்றிய மாறுபட்ட, முரண்பாடான, தெளிவற்ற கருத்துகளுக்கு மத்தியில் கன்னியா தொடர்பாக நடைபெற்ற, நடைபெறும் விடயங்கள் பலவற்றை வெளிப்படுத்தி தெளிவுபடுத்தியிருந்தார் சுமந்திரன் .

நூல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் ஒப்பற்ற வரலாற்று ஆவணமாக இது இருப்பதுடன், கன்னியாவை மீட்பதற்கு இதில் இணைக்கப்பட்ட ஆய்வாளர்களின் குறிப்புகள் வலுச்சேர்க்கும் எனவும் கூறியதுடன் ஆங்கில, சிங்கள மொழிப் பதிப்புகளும் காலத்தின் தேவையாக இருப்பதாக வலியுறுத்தினார்.

திருகோணமலையின் மூத்த வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர்களில் ஒருவரான கலாநிதி க. சரவணபவன் நூல் வெளியீட்டுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வுக்கு பீடுடை விருந்தினராக கலந்து சிறப்பித்த வைத்தியர் திரு.ஆர். சுதர்சனன் முனைவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகம் அவர்கள் பேசுகையில்;

எமது தற்போதைய வரலாற்று ஆய்வு ஆவணப்படுத்தலுக்கு அப்பால் நவீன விஞ்ஞான காபன் திகதியிடல் செய்வதன் மூலம் மேலும் மெய்ப்பித்து நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தலாம் என்றும் தன்னால் அதை செயற்படுத்த உதவ முடியும் என்றும் உள்ள வரலாற்றை சாதக பாதகம் பார்த்து திரிபுபடுத்தாமல் வெளிப்படுத்துவது வரலாற்றை வலுப்படுத்தும் என்றும் கூறினார்.

நூல் அறிமுகத்தினை வழங்கிய மகுடம் திரு மைக்கல் கொலின் அவர்கள் தனக்கே உரிய பாணியில் தன்பணியை செம்மையாகச் செய்திருந்தார். வரலாற்று ஆவணங்களின் நிலையினையும், இந்நூலின் பெறுமதியினையும் தேவையினையும் ஒரு எழுத்தாளர் எனும் வகையில் எடுத்தியம்பினார்.

திருக.தேவகடாட்சம் அவர்கள் நயமாக நயவுரையினை வழங்கி சிறப்பித்திருந்தார், நூலில் உட்பொதிந்திருந்த பல விடயங்களை எடுத்துரைத்து அதன் வலிமையினையும் தேவையினையும் சபைக்கு முன்வைத்து நூலினை அனைவரையும் வாசிக்கத் தூண்டும் வகையில் கடமையாற்றினார்.

நூலாசிரியர் திரு.என்.கே.எஸ். திருச்செல்வம் பேசுகையில், நானறிந்தவரையில் இந்நூல் குறுகிய காலத்திற்குள் தயாரான மிகப்பெரிய வரலாற்று நூலாக இருக்கும் என நம்புகின்றேன். இது அவ்வாறு வெளிவந்தது ஒரு தெய்வாதீனமான காரியமாகவே கருதுகின்றேன் என்கிறார்.

பல அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் கன்னியா வரலாற்றில் என்றும் சிவன், விநாயகர் கோவில்களே இருந்தன என்பதை ஆய்வாளர் மிகத் தெளிவாக ஆதாரப்படுத்தியதுடன் பௌத்த விகாரை எக்காலத்திலும் இருக்கவில்லை என்பதை நூலாசிரியர் நிறுவியுள்ளார்.