இந்திய பொருளாதாரச் சரிவும், அந்நிய கார்ப்பரேட்களின் வரவும் – இதயச்சந்திரன்

கொரோனாவால் மோசமாகப் பாதிப்புற்றுள்ள இந்தியாவிற்கு, 750 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளது ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி. சீன தேசத்தால் உருவாக்கப்பட்ட இவ் வங்கியில் (AIIB), இந்தியா உட்பட, அமெரிக்கா-ஜப்பான் தவிர்ந்த, பல மேற்கு நாடுகள் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்திய-சீன மோதல் குறித்த அதிகளவில் கொம்பு சீவி விடும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் யாவும் இந்தக் கடன் விவகாரத்தை ஏன் மறைக்கின்றன?.

புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய மசோதாக்கள், வெளிநாட்டு கார்ப்பரேட் வணிகர்களுக்கு புதிய வாசல்களை அகலத் திறந்துள்ளது. இது குறித்தும் இந்த ஊடகங்கள் பேசுவதில்லை.

விவசாய உற்பத்திப் பொருட்களை விலைநிர்ணயம் செய்யும் பொறுப்பிலிருந்தும்,
இதுவரை சேமித்து வைக்கும் கொள் அளவினை நிர்ணயம் செய்வதிலிருந்தும் அரசாங்கம் விலகி, அந்த அதிகாரத்தைக் கார்ப்பரேட்களிடமே சட்டபூர்வமாகக் கையளிக்கிறது.

இந்த நிலையில் நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI)இற்குரிய தரவுகளை சந்தையிலிருந்து பெற வேண்டிய அரசு, கார்ப்பரேட் வணிகர்களிடமே அதனைப் பெற வேண்டும்.

மக்களின் நுகர்வுத்திறன் குறைவதையிட்டுக் கவலைப்படாத இந்திய அரசு, மொத்த உள்ளூர் உற்பத்தியானது கடந்த வருட காலாண்டோடு ஒப்பிடுகையில் -23.99% வீழ்ச்சியடைந்துள்ளதையிட்டு கவலைப்படுமா?.

india இந்திய பொருளாதாரச் சரிவும், அந்நிய கார்ப்பரேட்களின் வரவும் - இதயச்சந்திரன்ஒரு புறம் சீனாவையும், பிரெஞ்சு ‘ரபையல்’போர் விமானத்தையும் மக்களுக்கு படம் காட்டியவாறு, மறுபுறம் கார்ப்பரேட் கம்பனிகளை உள்நுழைய அனுமதித்து, நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்தைச் சீரழிக்கும் மோடி அரசின் மக்கள்விரோத செயற்பாடுகளையிட்டு பல ஊடகங்களுக்கு அக்கறை இல்லை.

இவ்வாறான பெரும் பொருண்மிய வீழ்ச்சியை எதிர்கொள்ள, சீன ஆதரவுக் கடனையும், கட்டற்ற வகையில் கார்ப்பரேட்களின் முதலீடுகளையும் வரவேற்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கும் இந்தியா, அண்டைநாட்டு விவகாரங்களில் கடும்போக்கு நடைமுறையைக் கடைப் பிடிக்குமென்று எதிர்பார்க்க முடியுமா?.

அதிலும் 13வது திருத்தச்சட்ட விவகாரத்தை இந்திய அரசு திரும்பிப் பார்க்காது.
முன்பு சோனியாவின் கண்களில் ஒளி தெரிந்தது போன்று, மோடியின் விழிகளிலும் சிலருக்கு ஞான ஒளி தெரிய வாய்ப்புண்டு.

கொரானாவினால் புவிசார் அரசியலில் புதிய தத்துவங்களும் உருவாகலாம்.

1929 இன் மாபெரும் பொருண்மியத் தேக்கம் பற்றி ‘இர்விங் பிக்ஷர்’ ‘ (Irving Fisher)எழுதிய 49 கட்டுரைகள் (The Debt-Deflation Theory of Great Depressions) போன்று, இந்தியாவிலிருந்தும் நிர்மலா சீத்தாராமன் போன்ற நவீன தத்துவஞானிகள் உருவாகலாம்.