Home ஆய்வுகள் ராஜபக்சக்களின் அரசாங்கமும், பயங்கரவாதத் தடைச் சட்டமும் – அகிலன்

ராஜபக்சக்களின் அரசாங்கமும், பயங்கரவாதத் தடைச் சட்டமும் – அகிலன்

303 Views

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்  தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஆலோசனைச் சபை ஒன்றை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச நியமித் திருக்கின்றார். பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப் பட்டுள்ளவர்கள் – அதாவது அரசியல் கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களை விடுதலை செய்வதற்கான பொறிமுறை ஒன்றை கண்டறிந்து, ஜனாதிபதிக்கு இந்தச் சபை பரிந்துரை செய்யும் எனத் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. இது சொல்லப் பட்டுள்ள செய்தி. இதில் சொல்லப் படாத செய்தி என்ன என்பதை இனிப் பார்ப்போம்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், அந்தச் சட்டத்தின் கீழ் கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியாகவும் உருவாகியிருப்பது தெரிந்தது தான். அதிலும், போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, 12 வருடங்கள் சென்று விட்ட நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப் படுத்தத் தேவையில்லை என்ற கருத்தும் வலுவடைந்து வருகின்றது. இவை அனைத்துக்கும் மேலாக, ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவதற்கான ஒரு நிபந்தனையாக பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை முன்வைத்துள்ளது.

ஆக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடிய நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை. ஆனால், அரசுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கும், தமிழ்த் தரப்பிலிருந்து தோன்றக் கூடிய போராட்டங்களை ஒடுக்குவதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்தும் வைத்திருப்பது அவசியம் என அரசாங்கம் கருதுவதாகத் தெரிகின்றது. அதே வேளையில் அழுத்தங்களைச் சமாளிப்பதற்குத் திருத்தங்கள் செய்யப்படும் என்ற வாக்குறுதி இலங்கை அரசால் கொடுக்கப் பட்டிருக்கின்றது.

தற்போது இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச அமைத்துள்ள குழு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இல்லை என்பதுதான் இதில் சொல்லப் படாதிருக்கும் செய்தி. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக இருந்தால், இவ்வாறான குழு ஒன்றை அமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்திருக்காது. செப்டம்பர் மாதத்தில் ஜெனிவா கூட்டத் தொடரும் ஆரம்பமாக இருப்பதால், சர்வதேச சமூகத்தைச் சமாளிப்பதற்கான காய் நகர்த்தல்களை அரசாங்கம் முன்னெடுக் கின்றது.

ஆபத்தான அம்சங்கள்

இலங்கையில், தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகத் தீவிரமடையத் தொடங்கிய போது, அதனை ஒடுக்குவதற்காக 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டு நிரந்தர சட்டமாக்கப்பட்டு, இன்று வரை அமுலில் இருக்கின்றது. பொது மக்கள் உட்பட சர்வதேசமும் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்ற போதும், பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நீக்கப் படவில்லை. அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் வகையில் இதிலுள்ள அம்சங்களே இதற்கு எதிரான குரல்கள் பலமாக ஓங்கி ஒலிப்பதற்குக் காரணமாக இருந்தது.

இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டு, மூன்று மாத காலத்துக்கு தடுத்து வைக்கப்படலாம். 18 மாதம் வரை இந்தத் தடுப்பை நீடிக்கவும் முடியும். ஒப்புதல் வாக்கு மூலங்களைச் சாட்சியாகப் பயன்படுத் துவதற்கான ஏற்பாடுகளும் இதன்மூலம் வழங்கப் படுகின்றது. அதாவது – சித்திரவதைகள் மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை – சம்பந்தப் பட்டவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்பது இச்சட்ட மூலத்தின் ஆபத்தான மற்றொரு விடயம்.

அதே வேளையில், பாதுகாப்புத் தரப்பினர் இதனை துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புக்களும் தாராளமாக உள்ளது. மனித உரிமையை மீறுகின்றவர்களைக் கூட இந்தச் சட்டம் காப்பாற்றும். எனவே சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக இலங்கை அரசாங்கம் திட்டமிட்டதையும் காணமுடிந்தது. இருந்த போதிலும், அதற்குத் தெரிவிக்கப் பட்ட கடுமையான அழுத்தங்கள் காரணமாக அதுவும் கைவிடப் பட்டுள்ளது. பதிலாக சில திருத்தங்களைச் செய்வதன் மூலமாக, சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசை திருப்புவதுதான் இலங்கை அரசின் உத்தியாகவுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்படுமா?

ஜெனிவா உட்பட சர்வதேச அரங்குகள் பலவற்றில் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தி அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் வழங்கி யிருந்தது. இது விரும்பிக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியல்ல. நிர்ப்பந்தம் காரணமாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி. ஆனால், அது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைத்த இலங்கை அரசாங்கம், வழமை போல காலத்தைக் கடத்தும் உபாயத்தையே கையாண்டு வருகின்றது.

இந்தப் பின்னணியில் தான் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜி.எஸ்.பி. சலுகையைத் தொடர்ந்தும் அனுபவிக்க வேண்டுமானால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதை நிபந்தனையாகப் போட்டது. முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அவசர சந்திப்பு ஒன்றை இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடத்தினார். அதன்போது இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருத்தமளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொடிய பயங்கரவாதம் தலைதூக்கிய காரணத்தினால் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில விடயங்களை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும் இது தொடர்பில் ஐக்கிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரையில் அதற்காக ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப் படவில்லை.

இந்த அழுத்தங்கள் ஒருபுறம். அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகப் போகும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மறுபக்கம் இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பின்னணியில், நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான ஒரு உபாயமாகத் தான் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கான குழுவை அமைத்திருப்பதாகவே தோன்றுகின்றது. கடந்த காலங்களில் காலத்தைக் கடத்துவதற்கு மட்டுமே இவ்வாறான குழுக்கள் உதவியிருக்கின்றன. அதேதான் இப்போதும் தொடரப் போகின்றதா?

2 COMMENTS

Leave a Reply

Exit mobile version