Home செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையை கோட்டாபய அரசு எப்படி கையாளப் போகிறது? அம்பலப்படுத்திய அலி சப்ரியின் உரை

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையை கோட்டாபய அரசு எப்படி கையாளப் போகிறது? அம்பலப்படுத்திய அலி சப்ரியின் உரை

கோட்டாபய அரசு எப்படி கையாளப்போகிறது கோட்டாபய அரசு எப்படி கையாளப்போகிறது:”ஒருவர் காணாமல் போயிருந்தால் அவர் என்ன காரணத்திற்காகக் காணமல் போனார் என்பதை விசாரிக்கத் தேவை இல்லை. அது விடயத்தில் குற்றம் ஏதும் நடந்துள்ளதா என்பதையும் பார்க்காதீர்கள். அதை மறந்து விடுங்கள். அவர் ஏன் காணாமல் போனார் என்றும் தேடாதீர்கள். அவர் எந்தப் பக்கம் என்றும் பார்க்காதீர்கள். அவற்றையெல்லாம் விட்டு விட்டு, காணாமல் போனவர் எங்கள் ஸ்ரீலங்கா நாட்டவர் என்ற அடிப்படையில் அதனால் ஏற்பட்ட வலியை உணர்ந்து கொண்டு, உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்பதையே ஜனாதிபதி அமைச்சரவையிலும் வெளியிலும் எங்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வருகிறார்.”

இவ்வாறு பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார் நீதி அமைச்சர் அலி சப்ரி. காணாமல் போனோருக்கான சர்வதேச தினம் நேற்று அனுஷ்டிக்கப் பட்டமையை ஒட்டி நேற்றிரவு மெய்நிகர் முறைமையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் புதிய ஆணையாளராக ஓய்வு பெற்ற நீதியரசர் உபாலி அபயரத்ன பதவியேற்ற பின்பு இந்த முதலாவது பகிரங்க கலந்துரையாடல் நேற்று இரவு 7 மணிமுதல் 8 மணிவரை இடம்பெற்றது. இதில் நீதி அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி வெலேபொட, சுரேன் ராகவன் ஆகியோருடன் ஓர் பெளத்த பிக்குவும் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டே அலி சப்ரி மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“காணாமல் போனோர் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டு மென்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாக இருக்கிறார். புதிய ஆணையாளராக என்ற ரீதியில் நானும் இந்த விடயத்தில் எனது பூரண பங்களிப்பை வழங்கி வருகிறேன். முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாது காணாமல் போனோர் அலுவலம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றை நீதி அமைச்சர் என்ற வகையில் நானும் வெளிவிவகார அமைச்சும், கலாநிதி சுரேன் ராகவன் எம்.பியும், காமினி வெலேபொட எம்.பியும் தொடர்சியாகக் கண்காணித்து, இந்தப் பிரச்சினை தீர்க்கப் படுவதற்கு தேவையான ஆலோசனைக ளையும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகிறோம். காணாமல் போனவர் என்ன காரணத்திற்காகக் காணாமல் போனார் என விசாரிக்கத் தேவை இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

காணாமல் போனவர் ஓர் இலங்கை பிரஜை என்பதனை ஏற்று அதனால் அவரின் உறவுகளுக்கு ஏற்பட்டுள்ள வலியைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து பாடம் படித்து, அது மீள நிகழாமையை நாம் உறுதிப் படுத்த வேண்டும். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தில் எங்களுக்குத் திரும்பத் திரும்ப வலியுறுத்திய விடயம் இவ்விவகாரத்தில் குற்றம் ஒன்று நடந்திருந்தால் அதை மறந்து விடுவோம். யாராவது ஒருவர் காணாமல் போயிருந்தால் அவர் எந்த இனம், என்ன மொழி, எந்தப் பக்கம் என ஆராயத் தேவையில்லை. இலங்கை பிரஜை எனப் பார்ப்போம். அந்த குடும்பங்களின் வலியைப்புரிந்து கொண்டு, நிலையை கருத்தில் கொண்டு, இழப்பீடு கொடுப்போம்.

யுத்தம் முடிவு பெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாது இருப்பது, எமது நாடு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முன்செல்ல முடியாமல் இருப்பதற்குக் காரணமாக உள்ளது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என எல்லாத் தரப்பினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஒருவர் எத்தகைய சூழ்நிலையில், எப்படிக் காணாமல் போனார் என்பதைப் பார்ப்பதை விடுத்து, அவர் காணாமல் போனார் என்பதை மட்டும் அடையாளம் கண்டு இழப்பீட்டை செலுத்துவோம். இதேநேரம் காணாமல் போனோருக்காக இழப்பீடு வழங்கினால் அரசு குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அர்த்தம் இல்லை. பாதிக்கப் பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ், நஷ்ட ஈடு மட்டும் வழங்காது, பொது மன்னிப்பு ஒன்றை கேட்பதாலும் வழங்குவதாலுமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும். சர்வதேச ரீதியில் அவ்வாறே இது மாதிரியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சினையை இனியும் தொடர முடியாது. முடிவுரை எழுத வேண்டும்” என்றார்.

இந்த விடயம் தொடர்பில் நாடளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் உரை யாற்றுகையில் – 1, 000 நாள்களுக்குள் காணாமல் போனோர் தொடர்பான விடயம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டு மென்பதே எனது விருப்பமாக இருக்கின்றது. பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயமான நீதியும் இனி அவ்வாறானதொரு நிலை திரும்பவும் ஏற்படாதிருக்க செய்யக்கூடிய அனைத்து வழிகளையும் நோக்கி நாம் செயற்பட்டு வருகிறோம்” என்றார்.

Exit mobile version