Tamil News
Home செய்திகள் சவுதி அரேபியா கைதிகளின் மனித உரிமையை மீறுகிறதா?

சவுதி அரேபியா கைதிகளின் மனித உரிமையை மீறுகிறதா?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, சவுதி அரேபிய அரசு கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. பொதுவாக அந்நாட்டு அரசின் சிறைவிதிப்படி, கைதிகள் தங்கள் குடும்பத்தினரோடு நேரிலோ அல்லது தொலைபேசியிலோ பேச அனுமதிக்கப்படுவர்.

ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலேக சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினரோடு பேசவோ, சந்திக்கவோ அனுமதிக்கப்படவில்லை. இருந்தும், பெண்கள் நலனுக்காகப் போராடிய Loujain al-Hathlou என்பவர் ஆறு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆகஸ்ட் 31ம் திகதி அன்று குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் இளவரசர் Mohammed bin Nayef கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டவர் எங்கு இருக்கிறார் என்ற விபரம் தெரியாத நிலை உள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அவரை அவரது குடும்பத்தாரோ மருத்துவரோ சந்திக்க இயலவில்லை என்றும் அவரின் நிலை பற்றிய எந்தத் தகவலும் இதுவரையில் அரசால் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

2018, நவம்பரில் மனித உரிமைக்கழகம் தனது அறிக்கையில், சவுதி அரேபிய அரசு, சில முக்கிய கைதிகளுக்கு மின் அதிர்ச்சி, சவுக்கடி மற்றும் பெண் கைதிகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் தருகின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பெண்கள் நலனுக்காகப் போராடியவர்களை நீதி மன்ற விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் சவுதி மனித உரிமைக்கழகம், நீண்ட காலமாக சிறையில் இருந்ததினால், உடல் நிலை மோசமடைந்து ஒரு சில கைதிகள் பலியாகியுள்ளதாக குற்றம்சுமத்தியுள்ளது. இந்நிலையில், சவுதியின் நட்பு நாடுகளிடம், “அரசியல் கைதிகள் மற்றும் போராட்டக்கைதிகளை விடுவிக்க அழுத்தம் தரவேண்டும்” என்று மனிதவுரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version