Tamil News
Home ஆய்வுகள் கிழக்கில் ஓரங்கட்டப்படும் தமிழ்த் தேசியவாதிகள்… மட்டு.நகரான்

கிழக்கில் ஓரங்கட்டப்படும் தமிழ்த் தேசியவாதிகள்… மட்டு.நகரான்


மட்டு.நகரான்

தமிழர் தாயகப் பகுதியானது, இன்று என்ன நிலைமையில் இருக்கின்றது என்பதை ஒவ்வொரு தமிழரும் நெஞ்சில் கைவைத்து சிந்திக்க வேண்டிய நிலையில் நாங்கள் நின்றுகொண்டிருக்கின்றோம். இன்று மாற்று சமூகம் எங்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம் என்பதை நாங்கள் உணர்வதன் மூலமே, எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு நீடித்து நிலைக்கும்.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் , தமிழர்களின் போராட்டமானது இராஜதந்திரப் போராட்டமாக மாற்றம் பெற்றது. யுத்தம் முடிந்த நிலையில், புலம்பெயர் தமிழர்களும் இங்குள்ள தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் இணைந்து தமிழ் மக்களுக்கான நீதியை கோருவதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும், தமிழர்களின் உரிமையினை அங்கீகரிக்குமாறும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறான போராட்டங்கள் காரணமாக, தமிழர்களின் போராட்டமானது சர்வதேச மயப்படுத்தப்பட்டதுடன், இன்று உலக நாடுகள் இலங்கைத் தமிழர்கள் மீதான கரிசனையினையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இவற்றினை நாங்கள் சாதாரண ஒரு விடயமாக கடந்துவிட முடியாது.

தமிழ்த் தேசிய அரசியலில் காணப்பட்ட உறுதிமிக்க தமிழ்த் தேசியத்தினை மனதார, உணர்வுரீதியாக ஏற்றுக்கொண்டவர்களினால், இது தொடர்பான போராட்டங்கள் என்பது தொடர்ச்சியாக முன்னெடுத்து வரப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், இவ்வாறான போராட்டங்களைச் சிதைப்பதற்கும், தமிழர் அரசியலில் தங்களை நிலைநிறுத்துவதற்காக போலி தமிழ்த் தேசியம் பூண்டுவந்தவர்களினால் இன்று தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பல்வேறு பிரச்சினைகளும், தேவையற்ற குழப்பங்களும் ஏற்பட்டு வருவதை காணமுடிகின்றது.

குறிப்பாக சிங்கள தேசம் காலத்திற்கு காலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சிதைவுகளை ஏற்படுத்துவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை முன்னெடுக்கின்ற போதிலும், சிலவேளைகளில் அவை வெற்றியையும், சிலவேளைகளில் தோல்வியையும் கொடுக்கும் நிலையினை நாங்கள் கடந்த காலங்களில் அனுபவித்துள்ளோம்.

இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அர்ப்பணிப்புடன் உண்மையான தேசியப்பற்றுடன் செயற்படுபவர்களை நாங்கள் புறக்கணிக்கும் அல்லது அவர்களை ஓரங்கட்டுவதற்கு முற்படும்போது, தமிழ்த் தேசியப் பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்பது பாரதூரமானதாகவே அமையும் நிலையுள்ளது.

கிழக்கில் ஓரங்கட்டப்படும் தமிழ்த் தேசியவாதிகள்: குறிப்பாக கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்த காலத்திற்கு முன்பும் சரி யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியிலும் சரி தமிழ்த் தேசிய அரசியலை சிதைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், அவற்றினை முறியடித்து தமிழ்த் தேசிய அரசியலை நோக்கி தமிழர்களை கொண்டு சென்றதில் அங்கிருந்த தமிழ்த் தேசியப் பற்றாளர்களின் அர்ப்பணிப்பு என்பதை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஆயுதக்குழுக்களினாலும், படைப் புலனாய்வாளர்களினாலும் இலக்குவைக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். பலர் கடத்தப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். பலர் குடும்பங்களின் உறுப்பினர்கள் கடத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டனர். இவ்வாறு பல்வேறு அச்சுறுத்தல்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தினை நேசித்தவர்கள் எதிர்கொண்டனர். அவ்வாறான காலப்பகுதிகளில் எல்லாம் தமிழ்த் தேசிய பற்றாளர்களுக்கு தமிழ் மக்களே காவலரணாக இருந்தனர். அக்காலப்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தினை நேசிப்பவர்களை தமிழ் மக்கள் இலகுவில் இனங்கண்டு வெற்றிபெறச் செய்வதற்கான சூழ்நிலையிருந்தது. இக்கட்டான அக்காலப்பகுதியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் துணிந்து குரல்கொடுப்பவர்களைத் தமிழ் மக்கள் தெரிவுசெய்யும் நிலையிருந்தது.

ஆனால் இன்று அந்த நிலைமையானது மாற்றம்பெற்று வருகின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவர்களை தமிழ் மக்கள் நிராகரிக்கும் நிலையுள்ளதென்றால், அந்த அரசியலில் உள்ளவர்களின் செயற்பாடுகளை மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையானது, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பலரை ஓரங்கட்டும் நிலைக்கு தள்ளியது. அபிவிருத்தி அரசியலை புறந்தள்ளி, தமிழ்த் தேசிய அரசியலை நோக்கி செயற்பட்டதன் காரணமாக அவர்களை ஓரங்கட்டும் வகையிலான நடவடிக்கைகள் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருந்த போலி தமிழ்த் தேசிய வாதிகளினால் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கினைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியம் சார்ந்த பல கட்சிகள் இருப்பதன் காரணமாக தமிழர்கள் இலகுவில் தடுமாறவேண்டிய அவசியமிருக்காது. ஆனால் கிழக்கினைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு என்பது ஒரேயொரு கூட்டாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக தமிழ்த் தேசிய அரசியலில் இருந்தவர்கள் ஓரங்கட்டப்பட்ட நிலையில் அவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டிய நிலையேற்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்ச்சியாக வீழ்ச்சி நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இன்று தமிழ்த் தேசிய அரசியல் என்பது பணம் படைத்தவர்களின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் தமிழ்த் தேசிய பரப்பில் எழுந்திருக்கின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்திலும் சரி, யுத்தம் நிறைவடைந்த இந்த பத்து ஆண்டுகளிலும் சரி தமிழ்த் தேசிய அரசியலில் அர்ப்பணிப்புடன் பயணித்த பலர் இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்த செயற்பாடுகள்தான் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியத்தின் மீதான சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் அதிகரிப்புக்கான காரணங்களாக அமைகின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சாணக்கியன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு என்பது பாரிய பின்னடைவினை சந்தித்து வருகின்றது. அவரது அரசியல் பயணம் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித கதாநாயக நிலையினை ஏற்படுத்தினாலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பானது சுருங்கிய நிலையிலேயே இருந்துவருகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தமிழ்த் தேசியப்பற்றாளர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக தமிழ்த் தேசியப்பற்றாளர்கள் ஓரங்கட்டப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த செயற்பாடுகள் எதிர்காலத்தில் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களுக்கே சாதகமான நிலையினை கூடுதலாக தோற்றுவிக்கும்.

போலித் தேசியத்தினை சுமந்து வந்தவர்கள் 2015ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட நடவடிக்கையே வடகிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசியமும் பாரிய சரிவினை சந்தித்தது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், இந்த சரிவு என்பது தமிழர்களின் அரசியலை கேள்விநிலைக்கு உட்படுத்தியது.

இன்று தமிழ்த் தேசிய அரசியலை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில், அதில் உள்ளவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஓரங்கட்டுவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். ஓரங்கட்டப்பட்ட தமிழ்த் தேசியவாதிகளை அவர்களின் பயணத்தினை மேற்கொள்வதற்கான ஏதுவான நிலைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வடக்கினை விட கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு என்பது வெறுமனே அரசியல் சார்ந்தது மட்டுமல்ல நிலம், உரிமை,பாதுகாப்பு தொடர்பான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கின்றது. அது பலவீனமடையுமானால், மேற்சொல்லப்பட்ட விடயங்களுக்கு ஆபத்தானதாக அமையும் என்பது உண்மையாகும்.

எனவே தமிழ்த் தேசியத்தினை நேசிப்போர் மீண்டும் அவர்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படுவதற்கு உரிமைய தரப்பினர் முன்வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

Exit mobile version