Tamil News
Home செய்திகள் வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன்

வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் இரகசியமான முறையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுவதால் வரலாறு திரிவுபடுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் அகழ்வுப் பணியொன்று இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்கத்துடன் இந்த அகழ்வுப் பணி நடக்கின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் மூத்த பேராசிரியர்கள், தொல்லியல் சார்ந்தவர்கள் இருக்கின்ற போது அவர்கள் எவரையும் இந்தக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தாமல் இரகசியமான முறையில் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன . யுனெஸ்கோவின் கண்காணிப்பிலேயே இந்தப் பணிகள் நடக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். இல்லையென்றால் குரூந்தூர் மலையை போன்று வரலாறு திரிபுபடுத்தப்படும் ஆபத்து இருக்கின்றது.

இதனால் யுனெஸ்கோவின் கண்காணிப்பில் அகழ்வுப்பணி நடக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்றார்.

Exit mobile version