Home ஆய்வுகள் ரணிலா? சஜித்தா? டளஸா? | அகிலன்

ரணிலா? சஜித்தா? டளஸா? | அகிலன்

182 Views
அறுபத்தியொன்பது இலட்சம் மக்களின் வாக்குகளுடன் அதிகாரத்துக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச அந்த மக்களாலேயே வெறுத்து துரத்தப்பட்டிருக்கின்றார். நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதற்கு கூட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவிக்குரிய சிறப்புரிமைதான் அவருக்குத் தேவையாக இருந்திருக்கின்றது. பாதுகாப்பான ஒரு இடத்தில் குடியேறும் வரையில் தனது பதவிதுறப்புக் கடிதத்தை அவர் கையளிக்காமைக்கும் அதுதான் காரணம்.
கடந்த வாரம் இந்தப்பகுதியில் குறிப்பிட்டிருந்ததைப்போல ஜூலை 9 ஆம் திகதி இலங்கையில் முக்கியமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியது. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பவற்றுடன் பிரதமரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையும் ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களின் வசமானது. பாதுகாப்புப் படைகளின் தடுப்புச் சுவர்கள், கணணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகங்களுக்கு மத்தியில் அவை போராட்டக்காரர்களால் முற்றுகையிட்டு கைப்பற்றப்பட்டன.
அன்றைய தினம் தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது பதவியை 13 ஆம் திகதி புதன்கிழமை துறப்பதாக சபாநாயகருக்கு அறிவித்தார். பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதனை உறுதிப்படுத்தும் செய்தி ஒன்றை அவர் கொடுத்திருந்தார். தன்னுடைய பதவி நிலையைப் பயன்படுத்தி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக செட்டில் ஆகிவிடுவதற்கு வசதிக்காகவே இவ்வாறு கால அவகாசத்தை அவர் பெற்றிருந்தார். நாட்டில் இருப்பது ஆபத்தானது என்பது அவருக்குத் தெரியும்.
இந்தப் பின்னணியில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு டுபாய்க்குப் பயணமாவதற்காக அவரும் அவரது மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையம் வந்த போதிலும் குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதன்மூலமாக கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் புதன்கிழமை அதிகாலை இரண்டாவது முயற்சியை அவர்கள் முன்னெடுத்தார்கள்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை இரண்டு விடயங்களில் அவர் பயன்படுத்தினார். ஒன்று – நிறைவேவற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் வெளிநாடு செல்ல விரும்பினால் குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இரண்டாவது, ஜனாதிபதி கேட்டுக்கொண்டால் விமானப்படை அவரது தனிப்பட்ட பயணத்துக்காக ஜெட் விமானம் ஒன்றை வழங்க வேண்டும்.
வழமையான விமானத்தில் ஏனைய பயணிகளுடன் பயணம் செய்வது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம். அல்லது தன்னை வெளியேறுமாறு ஏனைய பயணிகள் போராடலாம் என்ற நிலையில்தான் தனிப்பட்ட விமானத்தைப் பயன்படுத்தி நாட்டைவிட்டுத் தப்புவதற்கு கோட்டாபய தீர்மானித்தார். ஜனாதிபதி என்ற பதவி நிலை இதற்கு அவருக்கு கைகொடுத்தது. ஜனாதிபதிப் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னரே பாதுகாப்பான இடம் ஒன்றுக்குச் சென்றுவிட வேண்டும் என அவர் துடித்தமைக்கு இவைதான் காரணம்.
அதேவேளையில் இதில் கவனிக்கத்தக்க இரு விடயங்களும் உள்ளன. ஒன்று – மாலைதீவு ஜனாதிபதியுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தனிப்பட்ட உறவு உள்ளது. அதனால் அவர் தன்னை பாதுகாப்பார் என கோட்டாபய கருதியிருக்கலாம். இரண்டு – விமானப்படையின் ஜெட் விமானத்தைப் பயன்படுத்தும் போது அண்டை நாடு ஒன்றுக்குச் செல்வதற்கே அதனைப்பயன்படுத்த முடியும். சிங்கப்பூர் அல்லது டுபாய்க்கு அதில் செல்வதானால் நடைமுறைப் பிரச்சினைகள் பல உள்ளன. குறிப்பிட்ட நாடுகள் அதனை அனுமதிக்கவும் மறுக்கலாம். அதனால்தான் உடனடி முடிலாக முதற்கட்டமாக மாலைதீவுக்குச் செல்வதற்கு கோட்டாபய தீர்மானித்தார்.
ஆனால், மாலைதீவில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். அங்கு பெருமளவுக்கு சிங்களவர்கள் உள்ளனர். அதனால்தான் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்குச் சென்றுவிடுவதற்கு அவர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகின்றது. அமெரிக்காவுக்கு மீண்டும் சென்றால், அங்கும் வழக்குகள் எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அத்துடன் அமெரிக்கா கோட்டாபயவின் விசாவை ஏற்கனவே இரத்துச்செய்துவிட்டது. இந்த நிலையில்தான் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தங்குவதற்கு அவர் தீர்மானித்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
வெளிநாடுகளில் தனக்கு நிரந்தரமான பாதுகாப்பான இடம் ஒன்றைத் தேடிப்பெற்றுக்கொள்வதற்கும் ஜனாதிபதி என்ற பதவி அவருக்குத் தேவை. இலங்கையின் முதற்பிரஜை என்ற முறையில் கிடைக்கக்கூடிய சிறப்புரிமைகளையும், சட்டத்திலிருந்து விதிவிலக்கைப் பெறுவதற்கான உரிமையையும் பயன்படுத்திக்கொள்வதற்கு அவர் முற்படுகின்றார். அவரது ராஜினாமா கடிதம் தாமதமாவதற்கும் அதுதான் காரணம்!
இலங்கை அரசியலமைப்பின்படி வெளிநாடு ஒன்றில் ஜனாதிபதி தங்கியிருக்கும் போது நாட்டில் தனது கடமைகள், பொறுப்புக்களை செய்ய முடியாது எனக் கருதினால் பதில் ஜனாதிபதியாக பிரதமரை நியமிக்க முடியும். அதன்படிதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக அவர் நியமித்தார். கோட்டாபயவின் இராஜினாமா கடிதம் கிடைக்கப்பெற்றதையடுத்து வெள்ளிக்கிழமை அரசியலமைப்பின்படி பதில் ஜனாதிபதியாக சட்டமா அதிபர் முன்பாக ரணில் பதவியேற்றுக்கொண்டார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு எதிர்க்கட்சிகளும் போராட்டக்காரர்களும் கடுமையான அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையிலும்- பதில் ஜனாதிபதியாக ரணில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளர்.
அதனைத் தொடர்ந்து 16 ஆம் திகதி சனிக்கிழமை இன்று இடம்பெறும் விசேட பாராளுமன்றக் கூட்டத்தில் ஜனாதிபதி பதவி விலகியமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். 19 ஆம் திகதி புதிய ஜனாதிபதிப்பதவிக்கு போட்டியிடுபவர்களின் நியமனங்கள் பாராளுமன்றத்தில் பெறப்படும். எம்.பி.க்களர் யாரும் இதில் போட்டியிட முடியும். 20 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு எம்.பி.க்கள் மத்தியில் இடம்பெறும்.
தற்போதைய நிலையில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேதமாச, டளஸ் அழகப்பெரும ஆகியோர் களத்தில் குதிப்பதற்குத் தயாராகவுள்ளனர். இதில் பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக்கொண்டிருக்கும் மொட்டு அணி ரணிலை ஆதரிக்கும் வாய்பு அதிகமாகவுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொட்டுவின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராஜபக்சக்கள் யாரும் இல்லாத நிலையில், ரணில் வருவதே தமக்குப் பாதுகாப்பானது என அவர்கள் கருதுகின்றார்கள். ரணிலும் அந்த நம்பிக்கையுடன்தான் காய்நகர்த்தி வருகின்றார்.
ஆனால், இப்போதுள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால், டளஸ் அழகப்பெரும களமிறங்கி மொட்டுவின் வாக்குகளைப் பிளவுபடுத்தலாம். இந்த நிலையில் டளஸ் – சஜித் கூட்டுத் தொடர்பாகவும் பேரங்கள் இடம்பெறுகின்றன. டளஸ் ஜனாதிபதி – சஜித் பிரதமர் என்ற வகையில் பேரங்கள் இடம்பெறுவதாகத் தெரிகின்றது. அவ்வாறான ஒரு உடன்பாடு ஏற்பட்டால் ரணில் ஜனாதிபதி போட்டியில் தோற்கடிக்கப்படலாம்.
இதில் போராட்டக்காரர்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பது தெரியவில்லை. ரணிலை ஆதரிப்பதையிட்டு அவர்களிடையே கருத்து முரண்பாடுகள் உள்ளன. ரணில் இல்லையென்றால் இந்த நெருக்கடியான நிலையை எதிர்கொள்ளக்கூடிய பொருத்தமான தலைவர்கள் யாரும் இல்லை என்பதும் சிங்கள புத்திஜீவிகள் பலரால் சுட்டிக்காட்டப்படுகின்றது. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும் ரணிலின் தலைமையிலான அரசாங்கம் ஒன்று அமைவதைத்தான் விரும்புவதாகவும் தெரிகின்றது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version