Tamil News
Home ஆய்வுகள் நெல்சன் மண்டேலா | தமிழில்: ஜெயந்திரன்

நெல்சன் மண்டேலா | தமிழில்: ஜெயந்திரன்

“சனநாயக இயக்கத்தின் வெகுசன அமைப்புகளாக எமது மக்களைக் கட்டமைத்து, அதனை ஆயுதமாகப் பயன்படுத்தியே, நிறவேற்றுமையின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான எங்கள் 
 
போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம்”.
நெல்சன் மண்டேலா, நிறவேற்றுமைக்கு எதிரான ஒரு செயற்பாட்டாளரும் தென் ஆபிரிக்காவின் முதலாவது அதிபரும் ஆவார். எம்பெஸ்ஸோ என்ற பெயருடைய ஒரு கிராமத்தில் 1918ம் ஆண்டு, ஜூலை 18ம் திகதி பிறந்த இவருக்கு, றோலிலாலா (Rohlilala) என்ற பெயர் வழங்கப்பட்டது. தெம்பு அரச குடும்பத்தின் வாரிசான மண்டேலாவின் தந்தை, கிராமத்தலைவராகவும், அதே நேரம் அரசருக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். கிறிஸ்தவ மறையில் மிகவும் பற்றுக்கொண்டிருந்த அவரது தாயார், அவரை ஒரு மெதடிஸ்த திருச்சபையின் பாடசாலையில் சேர்த்ததோடு ‘நெல்சன்’  (Nelson) என்ற ஆங்கிலப் பெயரையும் அவருக்குச் சூட்டினார்.

தந்தையின் இறப்புக்குப் பின்னர், 12 வயது நிரம்பிய மண்டேலா, அரசனுடைய நிழலில் அரசவையைச் சேர்ந்த அதிகாரிகளால் வளர்க்கப்பட்டார். அரச குடும்பத்தின் நடுவில் வளர்க்கப்பட்டதன் காரணத்தால், கறுப்பினத் தலைவர்களின் பலமான தலைமைத்துவத்தை அவரால் பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்த அனுபவம் அவரது வாழ்வு முழுவதுமே வியாபித்திருந்ததைக் காணமுடியும்.

வோட் ஹெயர் (Fort Hare)  பல்கலைக்கழகக் கல்லூரியில் தனது உயர்கல்வியைக் கற்ற மண்டேலா, ஜொஹான்னஸ்பேர்க் (Johannesburg) நகரத்தில் அமைந்திருக்கும்(Witwatersrand)  விற்வோட்டர்ஸ்றான்ட் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியை மேற்கொண்டார். மேற்படி கல்வி நிறுவனத்தின் ஒரேயொரு கறுப்பின மாணவரான மண்டேலா, பல தடவைகள் இனவாத ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளானார். இவ்வாறான அனுபவங்களைத் தொடர்ந்து, தீவிரமான அரசியல் வாழ்க்கைக்குள் அவர் காலடி எடுத்து வைத்தார்.

1944ம் ஆண்டில் காலனீயத்துக்கு எதிரான அரசியற் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் (African National Congress – ANC) தன்னை இணைத்துக் கொண்டு, வெள்ளை இனத்தவரின் அதிகார அடக்குமுறைக்குள் உள்ளாகிப் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த கறுப்பின மக்கள், அரசியல் பலம் பெறுவதற்குத் தேவையான விடயங்களை முன்னெடுக்கத் தொடங்கினார். ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் அணியைத் தாபித்த மண்டேலா, விரைவில் ஒலிவர் ரம்போ, வோல்ற்றர் சிசுலு ஆகியோருடன் இணைந்து அதன் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரானார்.

1948ம் ஆண்டில் தேசியக்கட்சி தென் ஆபிரிக்காவில் ஆட்சிக்கு வந்த போது, இன ரீதியான கொள்கைகள், அந்த நாட்டில் கறுப்பு மற்றும் வெள்ளை இனத்தவர் இடையே மிகவும் ஆழமான இடைவெளியை ஏற்படுத்தியது. கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவேற்றுமைக் கொள்கையை முன்னிறுத்திய அந்த அரசு, சட்டங்களை இயற்றி, நிறவேற்றுமையைச் சட்டபூர்வமாக்கியதுடன், சிறுபான்மையாக இருந்த வெள்ளை இனத்தவர்கள் உயர்ந்தவர்கள் என்ற ரீதியில் கொள்கைகளை அமுலாக்கியது. இந்த நிறவேற்றுமைக் கொள்கைக்கு எதிராக மண்டேலாவும் ஆபிரிக்க தேசிய காங்கிரசும் பரப்புரையைத் தொடங்கி, இக்கொள்கைக்கு எதிராக மிகவும் கடுமையாகப் போராடினார்கள்.

1952ம் ஆண்டில் வன்முறையற்ற செயற்பாடுகளுடன் இவர்கள் முன்னெடுத்த ஒத்துழையாமை இயக்கம், கறுப்பின, இந்திய மற்றும் கம்யூனிச பிரிவுகளைச் சார்ந்தவர்களை ஒரே குடையில் ஒன்றிணைத்தது. இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அரசுக்கு எதிரான மக்களின் ஒத்துழையாமைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

அப்போது ஆட்சியில் இருந்த தேசியக் கட்சி, இவர்கள் முன்னெடுத்த முயற்சிகளை அடக்கி ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்தது. மண்டேலாவைக் கைதுசெய்த தேசியக் கட்சி ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் அணி முற்றாக இயங்க முடியாதவாறு தடைவிதித்தது. அரசு முன்னெடுத்த இவ்வாறான கடுமையான ஒடுக்குமுறைச் செயற்பாடுகளின் காரணமாக மண்டேலாவும் ஆபிரிக்க தேசிய காங்கிரசும் முன்னெடுத்த ஒத்துழையாமைப் போராட்டம் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

1956ம் ஆண்டு தேசத்துரோகத்தை மேற்கொண்ட குற்றத்துக்காக மண்டேலாவும் அவரது 155 சகாக்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்ட போதிலும் இறுதியில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இவ்வாறான நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தின் மூலமே நிறவேற்றுமைக் கொள்கையைத் தோற்கடிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார் மண்டேலா.

1961ம் ஆண்டு எம்கே MK  என்ற பெயரில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் ஆயுதப் போராட்ட அணியை மண்டேலா ஒருங்கிணைத்தார். இந்தப் போராட்டக்குழு அரசுக்கும் அதன் இராணுவப்படைகளுக்கும் எதிரான திட்டமிட்ட தாக்குதல்களை ஆரம்பித்தது. எம்கேயின் கெரில்லா உத்திகள் படிப்படியாக அவர்களுக்கு வெற்றிகளைக் கொடுக்க ஆரம்பித்தன. ஆனால் 1962 இல் மண்டேலா மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

அரசுக்கு எதிராகச் சதிசெய்த குற்றத்துக்காக அவர்மீது வழக்குத் தொடரப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. றோபன் தீவில் (Robben Island) உள்ள சிறையில் மண்டேலாவும் அவரது சகாக்களும் அடைக்கப்பட்டார்கள்.

சிறையில் இருந்த போதிலும்  தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் நிறவேற்றுமைக்கு எதிரான போராட்டத்தின் ஓர் அடையாளமாக மண்டேலா தொடர்ந்து விளங்கினார். சிறைக்குள்ளே சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டே அங்கு நிலவிய மனிதாபிமானமற்ற நடைமுறைகளுக்கு எதிராக தனது சகாக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டார்.

‘மண்டேலா விடுதலை செய்யப்படவேண்டும்’ என்ற கோரிக்கை படிப்படியாக பன்னாட்டு ரீதியாக வலுப்பெற்றுவந்தது. மண்டேலாவின் விடுதலைக்கு ஆதரவாக உலகம் பூராவும் இருந்து வந்த அழுத்தங்களின் காரணமாக, தென் ஆபிரிக்க நிறவேற்றுமை அரசு ஈடாடத் தொடங்கியது.

இறுதியாக, 1990ம் ஆண்டில், 27 ஆண்டுகள் நீண்ட சிறைவாசத்துக்குப் பின்னர், மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

1994ம் ஆண்டு வரலாற்றில் முதல் தடவையாக அனைத்து மக்களுக்குமான ஒரு திறந்த பொதுத்தேர்தலை ஆபிரிக்க அரசு நடத்தியது. மண்டேலாவின் தலைமையில் தேர்தலைச் சந்தித்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்  அமோக வெற்றியை ஈட்டியது. அப்போது தென் ஆபிரிக்க தேசத்தின் முதல் கறுப்பின அதிபராகிய மண்டேலா, தேசிய ரீதியிலான திட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார்.

முக்கியமாக சமூக சேவைகள், கல்வி, வீட்டுத்திட்டங்கள் போன்ற வசதிகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரக்கூடிய வகையிலான திட்டங்களை அவர் ஆரம்பித்து வைத்தார்.

மண்டேலா தலைமையிலான நிர்வாகம் அமுலாக்கிய விடயங்களில் அவர் தாபித்த ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்’ முக்கியமானது. நிறவேற்றுமை தென் ஆபிரிக்காவில் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் அங்கு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்க அந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

1999ம் ஆண்டு, நாட்டின் அதிபராக அவரது முதலாவது பதவிக்காலம் முடிவுக்கு வந்த போது மண்டேலா அரசியலில் இருந்து இளைப்பாறினார். தனது வாழ்வின் இறுதிக்காலத்தில்  எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக மண்டேலா உழைத்தார்.

2013ம் ஆண்டு தனது 95வது வயதில் சுவாசத்தொகுதியில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக மண்டேலா உயிரிழந்தார். தென் ஆபிரிக்கா நாட்டின் தந்தையாகவும், போராடிப் பெற்ற ஓர் உயர்ந்த விடுதலையின் சின்னமாகவும் இன்றும் உலகம் முழுவதும் வாழும் மக்களால் மண்டேலா மதித்துப் போற்றப்படுகிறார்.

நன்றி: www.biography.com
Exit mobile version