Home செய்திகள் சபையில் கொந்தளிப்பை ஏற்படுத்திய தமிழர் தேசமும், தேசியத் தலைவரும்; கஜேந்திரனின் உரையால் குழப்பம்

சபையில் கொந்தளிப்பை ஏற்படுத்திய தமிழர் தேசமும், தேசியத் தலைவரும்; கஜேந்திரனின் உரையால் குழப்பம்

கஜேந்திரனின் உரையால் குழப்பம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் பயன்படுத்திய ”தமிழர் தேசம்” தேசியத் தலைவர் பிரபாகரன்” என்ற வார்த்தைகளினால் வெகுண்டெழுந்த அரச தரப்பினர் உடனடியான அந்த வார்த்தைகளை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு வலியுறுத்திய போதும் சபைக்கு தலைமை தாங்கிய வேலுகுமார் எம்.பி. அதற்கு மறுத்து விடவே சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

அத்துடன் இது தமிழர் தேசம் அல்ல சிங்களவர் தேசம் என அரசு தரப்பின் பின் வரிசை எம்.பி.க்களினால் கூச்சலிடவும் பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள் ,அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றிய கஜேந்திரன் எம்.பி. தனது உரையில் ”தமிழர் தேசம்” தேசியத் தலைவர் பிரபாகரன்” என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தினார்.

இதனால் சீற்றமடைந்த இராஜாங்க அமைச்சரான சீதா அரம்பொல, ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி, இந்த உயர் சபையில் தேசியத் தலைவராக பயங்கரவாத தலைவரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். தலைமை தாங்கும் உங்களுக்கு (வேலு குமார் எம்.பி) இந்த மொழி புரிந்திருக்கும். இதனால் இதனை ஹன்சாட்டில் இருந்து நீக்குங்கள் என்றார். கஜேந்திரனின் உரையால் குழப்பம் ஏற்பட்டது.

இதன்போது பதிலளித்த சபைக்கு தலைமைதாங்கிய வேலு குமார் எம்.பி கூறுகையில், அது அவரின் கருத்து வெளியிடும் உரிமையே, அதற்கு என்னால் இடையூறு செய்ய முடியாது. உங்களுடைய கோரிக்கை இருந்தால், நான் அதனை சபாநாயகரிடம் முன்வைக்கின்றேன் என்றார்.

இதன்போது எழுந்த அரசதரப்பு எம்.பி.யான முஸம்மில், விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். இந்த நாட்டில் இலட்சக் கணக்கில் மக்களை கொன்றவரை வீரராக கூறி இந்த சபையில் கருத்து வெளியிட முடியாது. இது அவரின் கருத்து இல்லை. இது இனவாதத்தை உண்டாக்குவதாகும். இதனை சபைக்குள் கொண்டு வர முடியாது. தயவு செய்து அந்தக் கருத்தை ஹன்சாட்டில் இருந்து நீக்குங்கள், நீங்களே இப்போது சபைக்கு தலைமை ஆசனத்தில் இருக்கின்றீர்கள். இதனால் நீங்கள் ஹன்சாட்டில் இருந்து நீக்குங்கள் என்றார்.

இதற்குப் பதிலளித்த வேலுக்குமார் எம்.பி, எனக்கு சபாநாயகரிடம் முன்வைக்கும் நிலையியல் கட்டளையே உள்ளது. அதன்படி அதனை அவரிடம் முன்வைக்கின்றேன் என்றார்.

இதனையடுத்து எழுந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஒரு தரப்பு சார்ந்த கருத்துக்களை கூறுகையில் அதனை பெரும்பான்மை சமூகம் விரும்பவில்லை என்றால் அதனை தடுக்க முயலக் கூடாது என்பதுடன், அவரை மெளனிக்கச் செய்யவும் வேண்டாம் என்றார்.

இதனையடுத்து ரஸா தரப்பின் பின் வரிசை எம்.பிக்கள் பலரும் எழுந்து, இந்த பாராளுமன்றத்தில் சிறப்புரிமைகளை இவ்வாறான விடயங்களுக்காக பயன்படுத்த முடியாது. பயங்கரவாத தலைவரை தேசியத் தலைவராக எந்தப் பாராளு மன்றத்திலாவது கூறுவார்களா? அதற்கு அனுமதி வழங்க வேண்டாம். இவர்கள் பிரபாகரனை நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்திக்கு சமாந்திரமாக கூற முற்படுகின்றனர். ஆனால் அவர் பயங்கரவாத தலைவரே என்றார்.

இதனையடுத்துத்தந்து பேச்சி தொடர்ந்த கஜேந்திரன் எம்.பி. ஒன்றைக் கூறிக் கொள்கின்றேன். அதாவது நாடு அழிவுப் பாதையில் செல்கின்றது. வீடு கொளுத்துகிற ராசாவுக்கு நெருப்பெடுத்துக்கொடுக்கின்ற மந்திரிகளாக நீங்கள் இருக்க வேண்டாம் என்று கேட்கின்றேன் என்றார்.

Exit mobile version