Tamil News
Home செய்திகள் கூட்டாக இணைந்து தாக்குதலை நடத்தினாா்களா? அநுரகுமார திஸாநாயக்க கேள்வி

கூட்டாக இணைந்து தாக்குதலை நடத்தினாா்களா? அநுரகுமார திஸாநாயக்க கேள்வி

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன எனக் கேள்வி எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின்  (ஜே .வி.பி.) தலைவரும், எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது –

“கடந்த 5 வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்திற்கு இடமான விடயங்கள் பல நடந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விவாதிக்கப்படுகிறது.தாக்குதல் நடத்தப்பட்ட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் செனல் 04 ஆவணப்படம் வெளியாகியுள்ளது, பிள்ளையான் புத்தகம் வெளியிட்டுள்ளார். பிரதான சூத்திரதாரியை நாங்கள் அறிவோம் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ராஜபக்ஷர்களின் அரசியல் செயற்பாடுகள் முஸ்லிம் அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், சிங்கள இனத்துக்கு அச்சுறுத்தல் என்பதை மையப்படுத்தியிருந்தது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இதன் உச்சகட்டமாகவே இருந்தது. இந்த தாக்குதலை தடுக்க முடியுமாக இருந்த போதும் அதனை தடுக்கத் தவறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்நிலையில் தாக்குதலை நடத்தியவர்களும், அதனை தடுக்கத் தவறியவர்களும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனரா? என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றன.

நாட்டை அராஜகத்திற்குள் அரசியல் நோக்கத்திற்காக தாக்குதலை நடத்த முடியுமாக இருந்தால் இந்த நாடு எப்போதும் பாதுகாப்பற்றதே. சந்தேகங்களுக்கு காரணங்கள் உள்ளன. வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? இதில் அரச பொறிமுறை இருந்துள்ளதா? தாஜ் ஹோட்டலில் ஜெமில் என்பவர் குண்டுத் தாக்குதலை நடத்தவிருந்த நிலையில் அவர் அங்கு குண்டை வெடிக்க வைக்காது தெஹிவளையில் குண்டை வெடிக்கவைக்க முன்னர் அவரின் வீட்டுக்கு புலனாய்வு அதிகாரிகள் சென்றனரா? மாத்தளையில் கைதான சின்ன சஹ்ரானிடம் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பை பொறுப்பேற்குமாறு புலனாய்வு அதிகாரி எவரேனும் அழுத்தம் கொடுத்தனரா? சாரா ஜஸ்மின் இறந்துவிட்டாரா? அவர் உயிருடன் இருப்பதாக சிலர் கூறும் நிலையில் அரச பொறிமுறையில் அந்த விடயம் இல்லாமல் செய்யப்பட்டதா? என்ற சந்தேகங்கள் உள்ளன.

தாக்குதல் நடத்தியவர்கள் வேறு குழுவாகவும், தாக்குதலை தடுக்கத் தவறியவர்கள் வேறு குழுவாக இருந்தாலும் தாக்குதல்தாரிகளும், தடுக்க தவறிய குழுவினரும் ஒன்றாக இதனை செய்திருந்தால் இது ஆபத்தானதே. ஒவ்வொருவரின் இருப்புக்காகவும் ஒவ்வொருவரின் முதுகில் அதிகாரிகள் ஏறி பயணிக்கின்றனர். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட போது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்முறையை தூண்டி விடும் செயற்பாடுகள் ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டன. நீர்கொழும்பு, புத்தளம், மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் பேராயர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். அவர் மாத்திரம் தலையிடாமல் இருந்திருந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடியிருக்கும்.

சந்தேகத்திற்கு இடமான குழுவினரிடமே தமது அரசியல் அதிகாரம் தங்கியிருக்கின்றது என்றால் நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. இதனால் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். இதற்கு மக்கள் ஆணையுடன் கூடிய புதிய ஆட்சியை அமைக்க வேண்டும். அந்த புதிய அரசாங்கத்தில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பான விசாரணைகளை வெளிப்படையாக நடத்த
வேண்டும்” என்றார்.

Exit mobile version