Tamil News
Home செய்திகள் தமிழரசின் நிலைப்பாட்ட அறிந்த பின்னரே பொது வேட்பாளா் குறித்து இறுதி முடிவு – செல்வம்

தமிழரசின் நிலைப்பாட்ட அறிந்த பின்னரே பொது வேட்பாளா் குறித்து இறுதி முடிவு – செல்வம்

தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை இரண்டு வாரங்களில் கேட்ட பின்னர்தான் ஒட்டுமொத்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளோம் என்று ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ். நகரில் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றோம். இதற்கமைய தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் அடுத்த கட்டமாக இறுதி முடிவு எடுப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்த்து.

அதாவது எந்தெந்தக் கொள்கைகளை வகுத்து எவ்வாறு போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது என்பது சம்பந்தமாக இரண்டு வாரங்களில் இறுதி முடிவெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்கமைய அடுத்த கூட்டத்திலே கட்டமைப்புக்களை உருவாக்கி எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுத்து அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்தக் கொள்கையோடு பொது வேட்பாளரை நிறுத்துவது என்றும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இறுதி முடிவை எடுக்கவுள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது இது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தமிழரசுக் கட்சி இரண்டு வாரங்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

அதனடிப்படையில் அவர்களுடைய கருத்தைக் கேட்ட பின்னர்தான் ஒட்டுமொத்தமாக இறுதி முடிவை எடுப்பதற்காக இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தக்கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Exit mobile version