Tamil News
Home செய்திகள் பொது வேட்பாளா் – இரண்டு வார அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி

பொது வேட்பாளா் – இரண்டு வார அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து ஒருவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடினர்.

சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ். நகரிலுள்ள ஹோட்டலொன்றில் நேற்று மாலை 3 மணியளவில ஒன்றுகூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பொது வேட்பாளர் தொடர்பில் ஆராய்ந்தனர்.

இதன்போது முதலில் தமிழர் தரப்பிலிருந்து ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பிலும், அவ்வாறு நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் சில இணக்கப்பாடுகளும் பொதுவாக ஏற்படுத்தப்பட்டன.

பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் வடக்கு, கிழக்கிலுள்ள சிவில் சமூக அமைப்புக்களும், பல கட்சிகளும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி வருகின்ற அதேவேளையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் இதுவரை காலமும் இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தன.

இந்நிலையில் இந்தப் பொது வேட்பாளர் தொடர்பான நேற்றைய கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இணைந்து கொண்டதுடன் அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கட்சியின் ஏனைய சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்றைய கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கட்சியினர் ஐனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்றே தொடர்ந்தும் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்றைய கூட்டத்தின்போது தமிழர் தரப்பில் இருந்து ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்குப் பொதுக் குழு ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.

இதற்கமைய பொதுக்குழு அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இரண்டு வார கால அவகாசம் கோரியிருந்தார். அதனால் பொதுக்குழு அமைப்பதை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து கூட்டம் நிறைவடைந்தது.

இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள முன்னணியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version