Tamil News
Home செய்திகள் இந்தியாவிலுள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை – தி. மு. க. வாக்குறுதி

இந்தியாவிலுள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை – தி. மு. க. வாக்குறுதி

”இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்” என்று தமிழ்நாட்டை ஆளும் கட்சியான தி.மு.க.
தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். இதன்போது, அவர் ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது –

“சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பது எங்களது வழிகாட்டும் நெறிமுறை. அதன் அடிப்படையில் தான் இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது தி. மு. க. தேர்தல் அறிக்கை மட்டுமல்ல தமிழக மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது.

2014இல் ஆட்சிக்கு வந்த பாசிச பா. ஜ. க. இந்தியாவை பாழ்படுத்திவிட்டது. இந்தியாவின் கட்டமைப்புகள் அனைத்தும் சிறுக, சிறுக சிதைக்கப்பட்டுள்ளன. கையில் கிடைத்த வாய்ப்பை பா. ஜ. க. நழுவவிட்டது. இனியும் பா. ஜ. க. ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. மக்கள் ஆட்சியை செம்மைப்படுத்தும் ஆட்சியாக புதிய ஆட்சி அமைய வேண்டும். அத்தகைய ஆட்சி அமைந்த பின்னர் தமிழக மக்களுக்கு செய்யக் கூடியவற்றை இந்தத் தேர்தல் அறிக்கையில் விளக்கியுள்ளோம்” என்றார்.

அந்த அறிக்கையில், மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் அரசமைப்பு திருத்தப்படும், ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும், உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் அமைக்கப்படும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும், ஒன்றிய அரசின் பணிமனைகளில் தமிழ்மொழி பயன்படுத்தப்படும், அனைத்து மாநில மொழிகளுக்கும் சமஅந்தஸ்து வழங்கப்படும், ‘இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பன அடங்கிய விடயங்கள் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version