Tamil News
Home செய்திகள் ஆசிரியர் சேவையில் உறுதிப்படுத்தியதை மீளப்பெற்றமை குறித்து மீளாய்வு செய்யுங்கள்

ஆசிரியர் சேவையில் உறுதிப்படுத்தியதை மீளப்பெற்றமை குறித்து மீளாய்வு செய்யுங்கள்

கிண்ணியா மற்றும் மூதூர் வலய ஆசிரியர்கள் சிலருக்கு வழங்கிய பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்களை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இரத்துச் செய்துள்ளது. இது குறித்து மீளாய்வு செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை செயலாளரை அவரது அமைச்சில் சந்தித்து இக்கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். அவர் வழங்கியுள்ள கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் சில ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்கள் அத் திணைக்களத்தினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பின்வரும் காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016.10.14 ஆம் திகதிய 1885/38 ஆம் இலக்க புதிய ஆசிரியர் சேவைப் பிரமானக் குறிப்பின் 8 வது பந்தியில் 1வது வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையாக 3 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை சான்றிதழைப் பூரணப்படுத்த வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பூர்த்தி செய்யாத காரணத்தினால் ஏற்கனவே வழங்கிய உறுதிப்படுத்தல் கடிதம் இரத்துச் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கே கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களக் கடிதத்தில் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு வெளிவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள திகதி தவறானது. இத்திணைக்களம் குறிப்பிட்டுள்ள இலக்கத்தையுடைய ஆசிரியர் சேவை பிரமானக் குறிப்பின் 8 வது பந்தி முதலாவது வினைத்திறன் தடைப்பரீட்சை தொடர்பாகவே குறிப்பிடுகின்றது. அதுவும் இத்தடை தாண்டலுக்கு 96 மணித்தியாலயங்களைக் கொண்ட மொடியூல்கள் பூரணப்படுத்துவது தொடர்பாகவே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் கலாசாலை சான்றிழ் குறித்து இப்பந்தியில் குறிப்பிடப்படவில்லை.

ஆசிரியர் சேவைப் பிரமானக் குறிப்பில் குறிப்பிடப்படுள்ள 1 ஆம் வினைத்திறன் தடைதாண்டல் தேவைப்பாடுகளை பூரணப்படுத்திய ஆசிரியர்களே பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்களை ஏற்கனவே பெற்றிருந்தனர். அதுவே பின்னர் பொருத்தமான காரணம் இன்றி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியர் சேவைப் பிரமானக் குறிப்பின் புரிதலில் உள்ள குறைபாடு காரணமாகவே இந்த இரத்துச் செய்தல் கடிதங்கள் சில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. எனவே, இந்த விடயங்களை மீளாய்வு செய்து பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்களை மீள வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version