Home ஆய்வுகள் பறிபோகும் சுதந்திர வாழ்க்கை – துரைசாமி நடராஜா

பறிபோகும் சுதந்திர வாழ்க்கை – துரைசாமி நடராஜா

b1 பறிபோகும் சுதந்திர வாழ்க்கை - துரைசாமி நடராஜாஇலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்தி சிறுவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே மலையக சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்து காணப்படும் நிலையில் இது தொடர்பில் சகல தரப்பினரும் விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

சிறுவர்கள் நாட்டின் எதிர்காலத்தை சிருஷ்டிக்கும் சிற்பிகளாக விளங்குகின்றனர். இவர்களால் எதிர்கால தேசம் செழுமையுறுகின்றது. இந்நிலையில் இவர்களை ஒழுக்க சீலர்களாக, கல்வியில் மேம்பட்டவர்களாக, நாட்டிற்கு பொருத்தப்பாடு உடையவர்களாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. 19 ம் நூற்றாண்டில் இருந்தே சர்வதேச ரீதியாக சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. 1924 ம் ஆண்டில் ஜெனீவாவில் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது சட்ட ரீதியான அங்கீகாரம் பெறாமையால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1959 ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் சிறுவர் நலன் கருதி 10 அம்சங்களை உள்ளடக்கிய சிறுவர் உரிமைப் பிரகடனம் உருவாக்கப்பட்டது. எனினும் இப்பிரகடனமும் 1924 ம் ஆண்டு பிரகடனத்தைப்போன்றே சட்ட வலுவற்றதாகிவிட்டது. 1989 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் சிறுவர் உரிமை பிரகடனம் உருவாக்கப்பட்டது. இப்பிரகடனம் 1990 ம் ஆண்டு சட்ட ரீதியான அங்கீகாரம் பெறப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 1991 ம் ஆண்டு இலங்கை அரசு இதனை உறுதிப்படுத்தியது.

சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் பல காணப்பட்டபோதும் சமகாலத்தில் பல சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகி சிறுவர் பராயத்தையும், சுதந்திர வாழ்க்கையையும் தொலைத்து நிற்கும் பரிதாபம் மேலோங்கி வருவது கொடுமையிலும் கொடுமையாகும். இலங்கையில் கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளடங்கலாக 5000 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4000 இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்கள் பாலியல் துன்புறுத்தல்களுடன் தொடர்புபட்டவையாகும். இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் 167 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். இவர்களில் 127 பேர் தமது காதலரினால் இந்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆய்வு வெளிப்பாடுகள்

2023 ம் ஆண்டில் சிறுவர்களை கொலை செய்தல், கொலை முயற்சி, காயமடையச் செய்தல், பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல் உள்ளிட்ட 3074 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. இவை தவிர பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 1463 சிறு குற்றச்செயல்களும் பதிவாகியுள்ளன. பாலியல் குற்றச்செயல்களின் அதிகரித்த போக்கினையும் இங்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கெதிரான 1502 துஷ்பிரயோகங்களும், சிறுவர்களுக்கெதிரான 584 பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்களும், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பில் 70 குற்றச்செயல்களும் பதிவாகியுள்ளன. இதேவேளை சிறுவர்களை வளர்ந்தோர்கள் சத்தமாக திட்டுதல் அல்லது வாய் வார்த்தைகள் மூலம் அச்சுறுத்துதல், அவமானப்படுத்துதல் முதலியன பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களைப் போன்றே பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்று ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

மேலும் இத்தகைய நடத்தைகள் பாதிக்கப்பட்ட சிறுவர்களை போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களாக, சிறைக்குச் செல்பவர்களாக மாற்றுவதற்கான சாத்தியத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வு வலியுறுத்துகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பை தடுப்பதற்கான சர்வதேச சமூகத்தினால் பிரசுரிக்கப்படும் ‘சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு’ எனும் சஞ்சிகையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஆர்.சேதுராமன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகின்றார். சிறுவர்கள் தவறாக நடத்தப்படுவதானது நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு என்பன இந்நான்கு பிரிவுகளுமாகும். சிறுவர்களை இலக்கு வைத்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் இலங்கையில் சமீபகாலமாக அதிகரித்து உயர்புள்ளிகளை பதிவுசெய்துள்ளது. நவீன காலத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல்சார் வன்கொடுமைகளுக்கு நிலையான தீர்வை நோக்கி ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்கள் செயற்படுகின்றபோதும் அவற்றால் இறுதி இலக்கினை அடைய முடியாதுள்ளது.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக நாம் நோக்குகின்றபோது மலையகச் சிறுவர்களின் நிலைமை குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது.மலையக பெருந்தோட்டங்களில் சிறுவர்கள் அதிகமான துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகி வருகின்றமை புதிய விடயமல்ல. இதில் பல்வேறு காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. சில பிள்ளைகளின் பெற்றோர் அல்லது தாய் வருமான ஈட்டல் கருதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பின் நிமித்தமாக சென்றுள்ளனர். இத்தகைய பிள்ளைகள் பெரும்பாலும் உறவினர்களின் பராமரிப்பிலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ‘வேலியே பயிரை மேய்ந்தாற்போல’ உறவினர்களே பிள்ளைகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் மலையகத்தில் இல்லாமலில்லை. அத்தோடு வறுமை, அன்பிற்கான அரவணைப்பின்மை போன்ற பல நிலைமைகளும் பிள்ளைகள் நெறி தவறுவதற்கு உந்துசக்தியாகியுள்ளன.

பாலியல் சுரண்டல் 

கடந்த 2012/2013 ம் ஆண்டு தகவலொன்றின்படி இலங்கையில் பாடசாலைக்கு செல்லாதோரின் தொகை 3.7 வீதமாகக் காணப்பட்டது.இது நகர்ப்புறத்தில் 2.2 வீதமாகவும், கிராமப்புறத்தில் 3.5 வீதமாகவும் அமைந்திருந்த அதேவேளை பெருந்தோட்டத்தில் இது 12.2 வீதம் என்ற அதிகரித்த போக்கினை வெளிப்படுத்தி இருந்தது. அண்மைய தகவலுக்கமைய 06 தொடக்கம் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 4.5 வீதமான ஆண்களும், 3.1 வீதமான பெண்களுமாக மொத்தம் 3.8 வீதமான சிறுவர்கள் வெறுமனே தோட்டங்களில் சுற்றித் திரிவதாக தகவல்கள் வலியுறுத்துகின்றன. இதேவேளை இடைவிலகும் மாணவர்களின் தொகையிலும் அதிகரிப்பைக் காண முடிந்தது. அண்மைய தகவலொன்றின்படி முதலாம் தரத்தில் சேரும் மாணவர்களில் 58 வீதமான பெருந்தோட்ட மாணவர்களே ஆரம்பக் கல்வியை கற்று முடித்தவர்கள் என்று தெரியவருகின்றது.

இதேவேளை 2007 ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களில் 7 வீதமானவர்களே க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கு சென்றனர். இந்நிலையில் இடைவிலகலைக் கட்டுப்படுத்த ஒருவழி முன்னதாகவே அவ்வாறு இடைவிலகக்கூடிய மாணவர்களை இனங்காணுதலாகும்.இதற்கு மாணவர் வருகை, கல்விச் சித்தி, கல்விச் செயற்பாடுகளில் பங்கேற்பு முதலியவற்றை இனங்காணுதலாகும். இவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறாக பாடசாலைக்குச் செல்லாத அல்லது இடைவிலகுகின்ற மாணவர்கள் நெறிபிறழும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதோடு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் நிலைமைகளும் mதிகமாகும் .

இதேவேளை சிறுவர்களை வேலைக்கமர்த்தும் நிலைமையும் மலையகத்தில் காணப்படுகின்றது. 06 தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 10.3 வீதமான ஆண்களும், 14.6 வீதமான பெண்களுமாக மொத்தமாக 12.4 வீதமான சிறுவர்கள் ஏதேனுமொரு தொழிற்றுறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.ஆர்.சோபனாதேவி குறிப்பிடுகின்றார். பன்னாடுகளில் காணப்படுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வறுமை, மனித குலத்துக்கு அப்பாலான செயற்பாடுகளால் சிறுவர் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகும் சிறுவர்கள் எதிர்நோக்கும் முதல் சவாலாக பாலியல் ரீதியான வன்கொடுமைகள் காணப்படுகின்றன.இலங்கையிலுள்ள சிறுவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி தொழிலுக்குச் செல்வதால் பல மில்லியன் கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் சிறுவர்கள் பாலியல் சுரண்டல்களை எதிர்கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இதற்கு தீர்வினைக் காண்பதற்கு விரைவாக செயற்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.

இலங்கையில் சிறுவர் உரிமைகளை பேணும் நடவடிக்கைகள் பலவுள்ளன. 1990 ம் ஆண்டில் சிறுவர்கள் நலனைப் பாதுகாக்கும் நோக்குடன் தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்களுக்கும், சிறுவர்களுக்குமான தனியான பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டது. கட்டாயக் கல்வித் திட்டமும் சிறுவர் உரிமைகளைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. சிறுவர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வுகளையும், ஆலோசனைகளையும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிவருகின்றன.

யுனிசெப்பின்  நிலைப்பாடு 

இதேவேளை இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழிமுறை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, உலகின் முன்னணி இணைய சிறுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய இராச்சியத்தின் இணையத்தள கண்காணிப்பு அமைப்புடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதோடு ‘சேவ் த சில்ரன் அமைப்பு இதற்கான நிதியுதவியினை வழங்கியுள்ளது. இதேவேளை சிறுவர் பாதுகாப்பு குறித்து இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் கவனம் செலுத்தாமல் இருந்தமை மிகப்பெரிய பிரச்சினைக்கு அடித்தளமாகியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமாக இருந்தாலும் சிறுவர் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் தாம் முன்னெடுக்கப்போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன.இது இலங்கை சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கான முக்கியமானதொரு முன்னெடுப்பாகும் என யுனிசெப் அமைப்பு ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.சிறுவர்கள் சமூகச் சக்கரத்தில் முக்கியத்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர். எனவே இவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து நேர்வழியில் செல்லவைப்பது சகலரினதும் மிக முக்கிய பணியாகும் என்பதோடு இவர்களை புறந்தள்ளுவதாலோ அல்லது உரிமைகளை மழுங்கடிக்கச் செய்வதாலோ பாதக விளைவுகள் பலவற்றுக்கும் முகம் கொடுக்க வேண்டிவரும் என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Exit mobile version