Tamil News
Home செய்திகள் வழிபாட்டு உரிமைக்கு தடைவிதிப்பதா? கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாடு

வழிபாட்டு உரிமைக்கு தடைவிதிப்பதா? கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாடு

நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் சைவர்கள் குழு ஒன்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளது.

இந்த வருடம் சிவராத்திரி தினத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகள் நடத்தப்பட்டதற்கான ஆதாரம் பொலிஸாரிடம் இல்லாமையால், வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தமையால் விடுதலையான தமிழ் இளைஞர்கள் இந்த முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

தவறு செய்த பொலிஸ் அதிகாரிகளை குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரும் அவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அவமானங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் தமது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்காலத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்த இடமளிக்குமாறும், ஆலயத்திலிருந்து பொலிஸார் எடுத்துச் சென்ற பூசை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மீள கையளிக்க ஏற்பாடு செய்யுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சைவ பக்தர்களை பொலிஸார் பொய் வழக்குகளில் கைது செய்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இந்த குழுவுடன் இணைந்தது குறித்த முறைப்பாடுகளை செய்துள்ளார்.

Exit mobile version