Home ஆய்வுகள் தமிழர்களுக்கு நீதி வழங்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது என்பதை உலகத் தலைவர்களுக்கு உரைத்த...

தமிழர்களுக்கு நீதி வழங்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது என்பதை உலகத் தலைவர்களுக்கு உரைத்த போராட்டம்

தமிழர்களுக்கு நீதி வழக்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது

தமிழர்களுக்கு நீதி வழக்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது என்பதை உலகத் தலைவர்களுக்கு உரைத்த போராட்டம்

இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பெருமளவிலான போராட்டம் ஒன்றை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தனர்.

போர் இடம்பெற்றபோது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபயவின் காலத்தில் பெருமளவான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அப்பாவித் தமிழ் மக்கள் பலர் பலவந்தமாகக் கடத்தப்பட்டுக் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை ஆணைக்குழுவை அமைத்து அறிக்கை வெளியிட்டபோதும், மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானங்களை மேற்கொண்டபோதும், இராஜதந்திர காப்புசக்தி மூலம் தப்பி பிழைத்துவரும், கோட்டாபய மேற்கொண்ட குற்றங்களுக்கான நீதி, இன்றும் வழங்கப்படவில்லை என்பதை இந்த உலக மக்களுக்கும், உலகத் தலைவர்களுக்கும் எடுத்துக்கூறும் விதமாக தமிழ் மக்கள் இந்தப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

ஜக்கிய நாடுகள் சபையின் அழைப்பிற்கிணங்க சுற்றுச்சுழல் மாசடைவு தொடர்பான 26 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து மாநிலத்திற்கு வந்திருந்த கோட்டாபயவின் வருகைக்குக் கண்டனம் தெரிவிக்க தமிழ் அமைப்புக்களும், மக்களும் கடந்த வாரம் தயாராகினர். உலகம் எங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக மக்களின் ஆதரவுடன் பேரினவாதிக்கெதிரான போராட்டத்தில் பிரித்தானியவாழ் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் பங்கெடுத்திருந்தனர்.

தமிழ் மக்கள் செறிவாக வாழும் லண்டன் பகுதியிலிருந்து ஸ்கொட்லாந்து மாநிலத்தின் நகரான கிளாஸ்கோ மாநாட்டு மண்டபம் 450 மைல்களுக்கப்பால் இருக்கின்றது. வாகனங்களில் அங்கு செல்வதானால், 8 மணி நேரம் எடுக்கும். வாடகைக்கு அமர்த்தும் பேருந்துகளில் செல்வதானால் நேரம் மேலும் அதிகரிக்கும்.

பிரித்தானிய சட்ட விதிகளுக்கமைய ஒரு வாகன ஓட்டுநர் குறிப்பிட்ட நேரத்திற்குமேல் வாகனம் ஓட்ட முடியாது. இரு ஓட்டுநர்கள் எனில் செலவு அதிகரிக்கும். ஓட்டுமொத்த பயணநேரம் இடைநிறுத்தம் உட்பட 20 மணிநேரமாவது எடுக்கும்.

கவனயீர்ப்புப் போரட்ட நேரம் காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிவரை என தீர்மானிக்கப்பட்டது மொத்தமாக 25 மணிநேரம் தொடர் பணிகள். மேலும் இந்த மாநாடு வார நாட்களில் அமைந்ததால், மக்கள் தமது வேலைகளுக்கு செல்லாமலும், மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமலும் வரவேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.

மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் நீண்டகால அனுபவமிக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இந்த பாரிய பணியினை பொறுப்பேற்று திட்டமிடல், செயலாற்றல், நடைமுறைப்படுத்தல் என வகைப்படுத்தி அதற்கேற்ற வகையில் செயற்பாட்டாளர்களைத் தேர்வுசெய்து போக்குவரத்து, உணவு, தங்குமிட வசதிகள், ஊடகம், காவல்துறை அனுமதி, ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பு என்பனவற்றை நிர்வகித்தனர்.

ஆரம்பத்தில் 10 பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும், மக்களின் எண்ணிக்கை கூடியதால் மேலதிகமாக 5 பேருந்துகள் வரவழைக்கப்பட்டு, ஞாயிறு இரவு 8 மணியளவில் லண்டனிலிருந்து தமிழீழத் தேசியக்கொடி சுமந்த பேருந்துகள் புறப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி, பிரித்தானியாவின் பிறமாவட்டங்களிலிருந்தும் கிளாஸ்கோ நகர் நோக்கி மக்கள் தமது வாகனங்களில் சென்றிருந்தனர்.

அதேசமயம், ஸ்கொட்லாந்தின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நீதிகோரும் விபரங்கள் ஒளிப்படங்களாக காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. ஸ்கொட்லாந்தின் நாடாளுமன்றக் கட்டிடம் உட்பட பல கட்டிடங்களில் ஒளிர்ந்த அந்த நீதிகோரல் ஒவியங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கும் பொறுப்பு ஒன்று உங்களுக்கு உண்டு என்பதை உலக மக்களுக்கு அது நினைவு படுத்தியிருந்தது.

அதேசமயம், ஸ்கொட்லாந்தின் முன்னணிப் பத்திரிகைகளான  த ரொல்ட் மற்றும் த நசனல் ஆகிய ஊடகங்களிலும் விழிப்புணர்வு விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

அதேசமயம், மேலும் ஒரு மக்கள் அணி கோட்டாபய தங்கியிருந்த விடுதியினைக் கண்டறிந்து அந்த விடுதியினை அதிகாலை முற்றுகையிட்டிருந்தனர். உயர் பாதுகாப்பிற்குரிய பிரதிநிதிகள் தங்குமிடம் பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தாலும், தமிழ் மக்கள் அந்த இடத்தைக் கண்டறிந்து அதிகாலை முற்றுகையிட்டிருந்தமை ஸ்கொட்லாண்ட் காவல்துறையினரையே ஆச்சரியத் திற்கு உள்ளாக்கியது.

இனப்படுகொலையாளி கோட்டாபயவே வெளியேறு என மக்கள் எழுப்பிய கோசங்கள் விடுதியைச் சூழவிருந்த கிராமப்புற மக்களை அதிகாலையில் வியப்போடு விழிக்கச்செய்தது. இந்த விடயத்தினை அறிந்த ஸ்கொட்லாந்து காவல்துறையினர் விரைந்து வந்தபோதும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அவர்களுக்கு மேலதிக ஆளணிகள் தேவைப்பட்டது.

நவம்பர் மாதம் 1 ஆம் நாள் காலை கோட்டாபயவின் இருப்பிடத்திற்கு முன்பாக தமிழ் மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்த அதேசமயம், காலை 5 மணிக்கு பேருந்துகள் ஒவ்வொவொன்றாக கிளாஸ்கோ நகரை வந்தடைந்தன. நீண்ட பயணத்தால் கழைப்புற்ற மக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தேநீரும் காலை உணவும் பரிமாறிக்கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் கூட்டத்தொடர் இடம்பெற்ற பகுதியில் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை பெருமளவில் முன்னெடுத்திருந்தனர். விடுதலைக்காகப் போராடும் இனத்திற்கு எல்லா வகையான போராட்டங்களும் முக்கியமானவை. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்துவரும் இலங்கை அரசுக்கு எதிராக அதேயளவான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய தேவை ஒன்று புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்களுக்குண்டு.

இலங்கை அரச தலைவரின் இராஜதந்திர காப்பு சக்தி அவரை பாதுகாத்தாலும், உலக மட்டத்தில் இலங்கையின் நற்பெயர் என்ற வேசத்திற்கு இத்தகைய போரட்டங்கள் சேதங்களை உண்டுபண்டும் என்பதுடன், இலங்கை அரசையும், அதன் தலைவர்களையும், சிங்கள மக்களையும் நிம்மதியாக வாழமுடியாத நிலைக்கும் இது இட்டுச் செல்லும்.

எதிர்காலத்தில் நாம் இது போன்ற தொடர் போரட்டங்களை முன்னெடுத்து அரசியல், இராஜதந்திரம் மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கை அரசுக்கான அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கான வளங்கள் எம்மிடம் உண்டு. ஆனால் அதனை ஒருங்கிணைப்பதில் தான் நாம் வெற்றிகாண வேண்டும்.

Exit mobile version